பஞ்ச புராணத்தில் தேவாரம், திருவாசகம் திருக்கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர்புராணம் ஆகிய ஐந்து பகுதிகளிலிருந்தும் ஒரு பாடல் வீதம் பாடப்படுகிறது.
தேவாரம் - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி நாயனார்
திருவாசகம், திருக்கோவையாரர் - மாணிக்கவாசகர்
திருவிசைப்பா - திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது சைவ அடியார்கள்
திருப்பல்லாண்டு - சேந்தனார்
திருத்தொண்டர்புராணம் - சேக்கிழார்
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி! காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி
வெற்றி வேல் முருகனுக்கு! அரோகரா
ஆதி பராசக்திக்கு! போற்றி போற்றி
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி, காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்- ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த, பீடுஉடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன், பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ, மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும் அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.
[1]
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2.066  
பண் - காந்தாரம் (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.
வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன்,
மிகநல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி,
சனி, பாம்பு இரண்டும், உடனே
ஆசு அறு; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்;
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை
கண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!
சலம், பூவொடு, தூபம், மறந்து அறியேன்;
தமிழோடு இசைபாடல்மறந்து அறியேன்;
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்;
உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்;
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்!
உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய்!
அலந்தேன், அடியேன்;-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள் தடம் கண்
மாதே! வளருதியோ? வன் செவியோ நின் செவி தான்?
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே, விம்மி விம்மி, மெய்ம்மறந்து,
போது ஆர் அமளியின்மேல் நின்றும் புரண்டு, இங்ஙன்
ஏதேனும் ஆகாள், கிடந்தாள்; என்னே! என்னே!
ஈதே எம் தோழி பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்!
தந்தது, உன் தன்னை; கொண்டது, என் தன்னை; சங்கரா! ஆர் கொலோ, சதுரர்?
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்; யாது நீ பெற்றது ஒன்று, என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்! திருப்பெருந்துறை உறை சிவனே!
எந்தையே! ஈசா! உடல் இடம் கொண்டாய்; யான் இதற்கு இலன், ஓர் கைம்மாறே!
பாரொடு, விண்ணாய், பரந்த, எம் பரனே! பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
சீரொடு பொலிவாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஆரொடு நோகேன்? ஆர்க்கு எடுத்து உரைக்கேன்? ஆண்ட நீ அருளிலையானால்,
வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள் புரியாயே.
நானேயோ தவம் செய்தேன்? சிவாய நம' எனப் பெற்றேன்?
தேன் ஆய், இன் அமுதமும் ஆய், தித்திக்கும் சிவபெருமான்
தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்
ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே, வெறுத்திடவே!
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்
Back to Top
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்.
அம்மை துதி
கலையாத கல்வியும், குறையாத வயதும்,ஓர் கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும்,ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்,
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப்,பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே! ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே!
அருள் வாமி! அபிராமியே!
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி! காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி Back to Top
This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:36 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org