மெளன வாயும் வரந்தரு கையும்,
உடையநம் பெருமான் உணர்விலே நிற்பான்,
ஓமெனும் நிலையில் ஒளியாத் திகழ்வான்,
வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த
பிருஹஸ் பதியும் பிரமனும் யாவும் 10
இயம்பு மொழிகள் புகழ்மறை யாகும்;எடுத்தவினை
பயன்படும்; தேவர் இருபோதும் வந்து பதந்தருவார்;
அயன்பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன்
வியன்புகழ் பாடிப் பணிவார் தமக்குறும் மேன்மைகளே. 22
செய்யுங் கவிதை பராசக்தி யாலே செயப்படுங்காண்,
வையத்தைக் காப்பவள் அன்னை சிவசக்தி வண்மையெலாம்
ஐயத்தி லுந்துரி தத்திலுஞ் சிந்தி யழிவதென்னே!
பையத் தொழில் புரி நெஞ்சே!கணாதிபன் பக்திகொண்டே. 26
விருத்தம்
பக்தி யுடையார் காரியத்திற்
பதறார் மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்குந் தன்மைபோல்
பெல்லச் செய்து பயனடைவார்
சக்தி தொழிலே அனைத்துமெனிற்
சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?
வித்தைக் கிறவா!கணநாதா!
மேன்மைத் தொழிலிற் பணியெனையே. 27
அகவல்
எனைநீ காப்பாய், யாவுமாந் தெய்வமே!
பொறுத்தா ரன்றோ பூமி யாள்வார்?
யாவும்நீ யாயின் அனைத்தையும் பொறுத்தல்
செவ்விய நெறி, அதில் சிவநிலை பெறலாம்;
பொங்குதல் போக்கிப் பொறையெனக் கீவாய்; 5
இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்
விளங்குக!துன்பமும்,மிடிமையம்,நோவும். 10
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிசெலாம்
இன்புற்று வாழ்க’என்பேன்!இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி,
அங்ஙனே யாகுக’ என்பாய்,ஐயனே!
இந்நாள், இப்பொழு தெனக்கிவ் வரத்தினை
அருள்வாய்;ஆதி மூலமே! அநந்த
சக்தி குமாரனே! சந்திர மவுலீ!
நித்தியப் பொருளே! சரணம்
சரணம் சரணம் சரணமிங் குனக்கே.
விதியே வாழி!விநாயகா வாழி!
பதியே வாழி! பரமா வாழி!
சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி!
புதுவினை காட்டும் புண்ணியா,போற்றி!
மதியினை வளர்க்கும் மன்னே,போற்றி!
இச்சையும் கிரியையும் ஞானமும் என்றாக்கும்
மூல சக்தியின் முதல்வா போற்றி!
பிறைமதி சூடிய பெருமான் வாழி!
நிறைவினைச் சேர்க்கம் நிர்மலன் வாழி!
காலம் மன்றையும் கடந்தான் வாழி!
சக்தி தேவி சரணம் வாழி!
வெற்றி வாழி! வீரம் வாழி!
பக்தி வாழி! பலபல காலமும்
உண்மை வாழி! ஊக்கம் வாழி!
நல்ல குணங்களே நம்மிடை யமரர்
பதங்களாம்,கண்டீர்!பாரிடை மக்களே!
கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த
விரதம்நான் கொண்டனன்;வெற்றி
தருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியே!
Back to top
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:48 +0000