முத்தினை மணியைப் பொன்னை முழுமுதற் பவள மேய்க்கும் கொத்தினை வயிர மாலைக் கொழுந்தினை யமரர் சூடும் வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற அத்தனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.
|
1
|
முன்பனை யுலகுக் கெல்லா மூர்த்தியை முனிக ளேத்தும் இன்பனை யிலங்கு சோதி யிறைவனை யரிவை யஞ்ச வன்பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை யுரித்த வெங்கள் அன்பனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.
|
2
|
கரும்பினு மினியான் றன்னைக் காய்கதிர்ச் சோதி யானை இருங்கட லமுதந் தன்னை யிறப்பொடு பிறப்பி லானைப் பெரும்பொருட் கிளவி யானைப் பெருந்தவ முனிவ ரேத்தும் அரும்பொனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.
|
3
|
செருத்தனை யருத்தி செய்து செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல் கருத்தனைக் கனக மேனிக் கடவுளைக் கருதும் வானோர்க் கொருத்தனை யொருத்தி பாகம் பொருத்தியு மருத்தி தீரா நிருத்தனை நினைந்த நெஞ்ச நேர்பட நினைந்த வாறே.
|
4
|
கூற்றினை யுதைத்த பாதக் குழகனை மழலை வெள்ளே றேற்றனை யிமையோ ரேத்த விருஞ்சடைக் கற்றை தன்மேல் ஆற்றனை யடிய ரேத்து மமுதனை யமுத யோக நீற்றனை நினைந்த நெஞ்ச நேர்பட நினைந்த வாறே.
|
5
|
Go to top |
கருப்பனைத் தடக்கை வேழக் களிற்றினை யுரித்த கண்டன் விருப்பனை விளங்கு சோதி வியன்கயி லாய மென்னும் பொருப்பனைப் பொருப்பன் மங்கை பங்கனை யங்கை யேற்ற நெருப்பனை நினைந்த நெஞ்ச நேர்பட நினைந்த வாறே.
|
6
|
நீதியா னினைப்பு ளானை நினைப்பவர் மனத்து ளானைச் சாதியைச் சங்கவெண் ணீற் றண்ணலை விண்ணில் வானோர் சோதியைத் துளக்க மில்லா விளக்கினை யளக்க லாகா ஆதியை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.
|
7
|
பழகனை யுலகுக் கெல்லாம் பருப்பனைப் பொருப்போ டொக்கும் மழகளி யானையின் றோன் மலைமக ணடுங்கப் போர்த்த குழகனைக் குழவித் திங்கள் குளிர்சடை மருவ வைத்த அழகனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.
|
8
|
விண்ணிடை மின்னொப் பானை மெய்ப்பெரும் பொருளொப் பானைக் கண்ணிடை மணியொப் பானைக் கடுவிருட் சுடரொப் பானை எண்ணிடை யெண்ண லாகா விருவரை வெருவ நீண்ட அண்ணலை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.
|
9
|
உரவனைத் திரண்ட திண்டோ ளரக்கனை யூன்றி மூன்றூர் நிரவனை நிமிர்ந்த சோதி நீண்முடி யமரர் தங்கள் குரவனைக் குளிர்வெண் டிங்கட் சடையிடைப் பொதியுமை வாய் அரவனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.
|
10
|
Go to top |