மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும் அன்ன மனநடையா ளொருபாகத் தமர்ந்தருளி நாளும் பன்னிய பாடலினா னுறைகோயில் பாதாளே.
|
1
|
நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத் தோடமர் காதினல்ல குழையான் சுடுநீற்றான் ஆடர வம்பெருக வனலேந்திக் கைவீசி வேதம் பாடலி னாலினியா னுறைகோயில் பாதாளே.
|
2
|
நாகமும் வான்மதியுந் நலமல்கு செஞ்சடையான் சாமம் போகநல் வில்வரையாற் புரமூன்றெரித்துகந்தான் தோகைநன் மாமயில்போல் வளர்சாயற் றூமொழியைக் கூடப் பாகமும் வைத்துகந்தா னுறைகோயில் பாதாளே.
|
3
|
அங்கமு நான்மறையும் அருள்செய் தழகார்ந்த வஞ்சொல் மங்கையோர் கூறுடையான் மறையோ னுறைகோயில் செங்கய னின்றுகளுஞ் செறுவிற் றிகழ்கின்ற சோதிப் பங்கய நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே.
|
4
|
பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்று தீயொடு மான்மறியும் மழுவுந் திகழ்வித்துத் தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றைச் சடைதன்மேற் சேரப் பாய்புன லும்முடையா னுறைகோயில் பாதாளே.
|
5
|
Go to top |
கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மே னன்று விண்ணியன் மாமதியும் முடன்வைத் தவன்விரும்பும் பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக வாடும் பண்ணியல் பாடலினா னுறைகோயில் பாதாளே.
|
6
|
விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன் னிதிகழ் வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான் விண்டவர் தம்புரமூன் றெரிசெய்துரை வேதநான் கும்மவை பண்டிசை பாடலினா னுறைகோயில் பாதாளே.
|
7
|
மல்கிய நுண்ணிடையா ளுமைநங்கை மறுகவன்று கையால் தொல்லை மலையெடுத்த வரக்கன்றலை தோணெரித்தான் கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக் கணிந்தோன் பல்லிசை பாடலினா னுறைகோயில் பாதாளே.
|
8
|
தாமரை மேலயனும் மரியுந்தம தாள்வினையாற் றேடிக் காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார் பூமரு வுங்குழலா ளுமைநங்கை பொருந்தியிட்ட நல்ல பாமரு வுங்குணத்தா னுறைகோயில் பாதாளே.
|
9
|
காலையி லுண்பவருஞ் சமண்கையருங் கட்டுரை விட்டன் றால விடநுகர்ந்தா னவன் றன்னடி யேபரவி மாலையில் வண்டினங்கண் மதுவுண் டிசைமுரல வாய்த்த பாலையாழ்ப் பாட்டுகந்தா னுறைகோயில் பாதாளே.
|
10
|
Go to top |
பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப் பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன் தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன இன்னிசை பத்தும்வல்லா ரெழில்வானத் திருப்பாரே.
|
11
|