சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.048   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருச்சேஞலூர் - பழந்தக்கராகம் மாயாமாளவகௌளை சுத்த சாவேரி கல்யாணகேசரி ராகத்தில் திருமுறை அருள்தரு சகிதேவிநாயகியம்மை உடனுறை அருள்மிகு சத்தகிரீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=b6VgY166d7U   Add audio link Add Audio

நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க, நல்கிய நல் அறத்தை,
ஆல் அடைந்த நீழல் மேவி, அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே?

1
சேல் மீன்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே! வேதம் முதலிய நூல்களில் விதிக்கப்பட்ட முறைகளினால் உன் திருவடிகளை அடைதற்கு முயன்றும் அஞ்ஞானம் நீங்காமையால் சனகாதி முனிவர்களாகிய நால்வர் உன்னை அடைந்து உண்மைப் பொருள் கேட்க அவர்கள் தெளிவு பெறுமாறு கல்லால மர நிழலில் வீற்றிருந்து அருமறை நல்கிய நல்லறத்தை எவ்வாறு அவர்கட்கு உணர்த்தியருளினாய்? கூறுவாயாக.

நீறு அடைந்த மேனியின் கண் நேரிழையாள் ஒருபால்
கூறு அடைந்த கொள்கை அன்றி, கோல வளர் சடைமேல்
ஆறு அடைந்த திங்கள் சூடி, அரவம் அணிந்தது என்னே
சேறு அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே?

2
சேறு மிகுந்த குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய இறைவனே! திருநீறணிந்த தன் திருமேனியின்கண் உமையம்மை ஒருபால் விளங்க அழகியதாய் நீண்டு வளர்ந்த சடைமேல் கங்கையையும் தன்னைச் சரணாக அடைந்த திங்களையும் சூடிப் பாம்பையும் அணிந்துள்ள காரணம் யாதோ?

ஊன் அடைந்த வெண் தலையினோடு பலி திரிந்து,
கான் அடைந்த பேய்களோடு தம் கலந்து உடனே,
மான் அடைந்த நோக்கி காண, மகிழ்ந்து எரி ஆடல் என்னே
தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே?

3
வண்டுகள் நிறைந்த சோலைகள் செறிந்த திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய இறைவனே! ஊன் பொருந்திய வெண்மையான தலையோட்டைக் கையில் ஏந்தி உண் பலிக்குத் திரிந்து காட்டில் வாழும் பேய்களோடு பூதகணங்களும் கலந்து சூழ மான் போன்ற கண்ணை உடைய உமையம்மை காண மகிழ்வோடு இடுகாட்டில் எரியாடுவது ஏன்?

வீண் அடைந்த மும்மதிலும், வில் மலையா, அரவின்
நாண் அடைந்த வெஞ்சரத்தால், நல் எரியூட்டல் என்னே
பாண் அடைந்த வண்டு பாடும் பைம்பொழில் சூழ்ந்து அழகு ஆர்
சேண் அடைந்த மாடம் மல்கு சேய்ஞலூர் மேயவனே?

4
பண்ணிசையோடு வண்டுகள் பாடும் பசுமையான பொழில் சூழ்ந்ததும் அழகியதாய் உயர்ந்த மாட வீடுகள் நிறைந்ததுமான திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய இறைவனே! மும்மதில்களும் வீணடையுமாறு மலையை வில்லாகவும் அரவை அவ்வில்லின் நாணாகவும் கொண்டு கொடிய அம்பால் பெரிய எரியை அம்முப்புரங்களுக்கு ஊட்டியது ஏன்?

பேய் அடைந்த காடு இடமாப் பேணுவது அன்றியும், போய்,
வேய் அடைந்த தோளி அஞ்ச, வேழம் உரித்தது என்னே
வாய் அடைந்த நால்மறை ஆறு அங்கமோடு ஐவேள்வித்
தீ அடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே?

5
வாயினால் ஓதப்பெற்ற நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் கற்று ஐவகை வேள்விகளை இயற்றி தீப் பொருந்திய சிவந்த கையினராய் விளங்கும் அந்தணர் வாழும் சேய்ஞலூர் மேயவனே! சுடுகாட்டை இடமாகக் கொண்டு ஆடி உகப்பதோடு அன்றியும் சென்று மூங்கில் போன்ற தோளினை உடைய உமையம்மை அஞ்ச யானையை உரித்தது ஏனோ?
Go to top

காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணம் ஆகி வந்து,
வேடு அடைந்த வேடன் ஆகி, விசயனொடு எய்தது என்னே
கோடு அடைந்த மால்களிற்றுக் கோச்செங்கணாற்கு அருள்செய்
சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே?

6
கோடுகளோடு கூடிய பெரிய யானைப் படைகளை உடைய கோச்செங்கட் சோழனுக்கு அருள் செய்தவனும் பெருமை பொருந்திய செல்வர்கள் வாழும் திருச்சேய்ஞலூரில் மேவியவனுமாகிய இறைவனே! வில்லடிபட்டுக் காட்டுள் சென்று பதுங்கிய பன்றி ஒன்றின் காரணமாக தான் வேடன் உருத்தாங்கி வந்து அருச்சுனனோடு போர் புரிந்தது ஏனோ?

பீர் அடைந்த பால் அது ஆட்ட, பேணாது, அவன் தாதை
வேர் அடைந்து பாய்ந்த தாளை வேர்த் தடிந்தான் தனக்குத்
தார் அடைந்த மாலை சூட்டித் தலைமை வகுத்தது என்னே
சீர் அடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே?

7
சிறப்புமிக்க மாடக் கோயிலாய் விளங்கும் திருச்சேய்ஞலூரில் விளங்கும் இறைவனே! பசுவின் முலைக் காம்பின் வழிச்சுரந்து நின்ற பாலைச் சண்டீசர் மணலால் தாபித்த இலிங்கத்துக்கு ஆட்டி வழிபட அதனை விரும்பாது சினந்து பாற்குடத்தை இடறிய தன் தந்தையின் காலைத் தடிந்த சண்டீசரின் பக்தியை மெச்சி உன் தாரையும் மாலையையும் சூட்டி அவரைச் சிவகணங்களின் தலைவர் ஆக்கியது ஏனோ?

மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன்தன்
நா அடைந்த பாடல் கேட்டு நயந்து, அருள் செய்தது என்னே
பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும்
சே அடைந்த ஊர்தியானே, சேய்ஞலூர் மேயவனே?

8
தாமரை மலரில் விளங்கும் நான்முகன் போன்ற அந்தணர்கள் போற்றும் விடையை ஊர்தியாகக் கொண்டவனே! திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே! குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடைய இராவணனது வலிமையை அழித்து அவன் நாவினால் பாடிய பாடலைக் கேட்டு விரும்பி அவனுக்கு அருள்கள் பல செய்தது ஏனோ?

கார் அடைந்த வண்ணனோடு கனகம் அனையானும்,
பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார்,
சீர் அடைந்து வந்து போற்ற, சென்று அருள் செய்தது என்னே
தேர் அடைந்த மா மறுகின் சேய்ஞலூர் மேயவனே?

9
தேர் ஓடும் அழகிய வீதிகளை உடைய திருச்சேய்ஞலூர் மேவிய சிவனே! கருமை நிறம் பொருந்திய திருமால் பொன்வண்ணனாகிய பிரமன் ஆகியோர் உலகங்களை அகழ்ந்தும் பறந்தும் சென்று அடிமுடிகளைக் காணாராய்த் தம் தருக்கொழிந்து பின் அவர்கள் போற்ற அவர்பால் சென்று அருள் செய்தது ஏனோ?

மாசு அடைந்த மேனியாரும், மனம் திரியாத கஞ்சி
நேசு அடைந்த ஊணினாரும், நேசம் இலாதது என்னே
வீசு அடைந்த தோகை ஆட, விரை கமழும் பொழில்வாய்,
தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே?

10
வீசி ஆடுகின்ற தோகைகளை உடைய மயில்கள் ஆடுவதும் மணம் கமழும் பொழில்களில் ஒளி பொருந்திய வண்டுகள் பாடுவதும் செய்யும் திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே! அழுக்கேறிய உடலினரும் மனத்தில் வெறுப்பின்றிக் கஞ்சியை விரும்பி உணவாகக் கொள்வோரும் ஆகிய சமண புத்தர்கள் உன்பால் நேசம் இலாததற்குக் காரணம் யாதோ?
Go to top

சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவி,
தோய் அடைந்த தண்வயல் சூழ் தோணி புரத் தலைவன்-
சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன்-இன் உரைகள்
வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே.

11
முருகப் பெருமான் வழிபட்ட சிறப்பினதாகிய திருச்சேய்ஞலூரில் விளங்கும் செல்வனாகிய சிவபிரானது புகழைப் போற்றி நீர்வளம் சான்ற வளமையான வயல்களால் சூழப்பட்ட தோணிபுரத்தின் தலைவனும் நுட்பமான ஞானம் மிக்கவனுமாகிய சம்பந்தனுடைய இன்னுரைகளை வாயினால் பாடி வழிபட வல்லவர் வானுலகு ஆள்வர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்சேஞலூர்
1.048   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நூல் அடைந்த கொள்கையாலே நுன்
Tune - பழந்தக்கராகம்   (திருச்சேஞலூர் சத்தகிரீசுவரர் சகிதேவிநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000