மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம் அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூம் செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலி யுறை செல்வர்தாமே.
|
1
|
என்றுமோ ரியல்பின ரெனநினை வரியவ ரேறதேறிச் சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும் பலிகொளு மியல்பதுவே துன்றுதண் பொழினுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து தென்றல்வந் துலவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே.
|
2
|
பொறிகிள ரரவமும் போழிள மதியமுங்கங் கையென்னும் நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக் கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர்போலும் செறிபொழி றழுவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே.
|
3
|
காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும் பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி ஈண்டுமா மாடங்கண் மாளிகை மீதெழு கொடிமதியம் தீண்டிவந் துலவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே.
|
4
|
ஏனவெண் கொம்பொடு மெழில்திகழ் மத்தமு மிளவரவும் கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார் ஆனினல் ஐந்துகந் தாடுவர் பாடுவ ரருமறைகள் தேனில்வண் டமர்பொழிற் றிருநெல்வேலி யுறைசெல்வர் தாமே.
|
5
|
Go to top |
வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர் பொடியணி மார்பினர் புலியத ளாடையர் பொங்கரவர் வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார் செடிபடு பொழிலணி திருநெல்வேலி யுறை செல்வர் தாமே.
|
6
|
அக்குலா மரையினர் திரையுலா முடியின ரடிகளன்று தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மை புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத் திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே.
|
7
|
முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகடோ ணெரிதரவே உந்திமா மலரடி யொருவிர லுகிர்நுதி யாலடர்த்தார் கந்தமார் தருபொழின் மந்திகள் பாய்தர மதுத்திவலை சிந்துபூந் துறைகமழ் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே.
|
8
|
பைங்கண்வா ளரவணை யவனொடு பனிமல ரோனுங்காணா தங்கணா வருளென வவரவர் முறைமுறை யிறைஞ்சநின்றார் சங்கநான் மறையவர் நிறைதர வரிவைய ராடல்பேணத் திங்கணாள் விழமல்கு திருநெல்வேலி யுறை செல்வர் தாமே.
|
9
|
துவருறு விரிதுகி லாடையர் வேடமில் சமணரென்னும் அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் மண்ணலார்தாம் கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்களாலத் திவருறு மதிதவழ் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே.
|
10
|
Go to top |
பெருந்தண்மா மலர்மிசை யயனவ னனையவர் பேணுகல்வித் திருந்துமா மறையவர் திருநெல்வேலி யுறை செல்வர்தம்மைப் பொருந்துநீர்த் தடமல்கு புகலியுண் ஞானசம் பந்தன்சொன்ன அருந்தமிழ் மாலைகள் பாடியாடக் கெடு மருவினையே.
|
11
|