சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு, நின் தாள் பரவி,
ஏம்பலிப் பார்கட்கு இரங்கு கண்டாய்-இருங் கங்கை என்னும்
காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர்ப் பூண் வன முலைமேல்
பாம்பு அலைக்கும் சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
|
1
|
பெரிய கங்கை என்னும் மூங்கில் போன்ற பருத்த தோள்களை உடைய பெண்ணின் ஒளி வீசுகின்ற அணிகலன்களை அணிந்த அழகிய முலைமீது பாம்புகள் தவழும் சடையை உடையவனே! எம்மை அடிமை கொள்ளும் ஆன்ம நாயகனே! சாம்பலைப் பூசிக் கொண்டு, உறங்கும்போது வெறும் தரையிலேயே கிடந்து உறங்கி உன் திருவடிகளை முன் நின்று துதித்து அங்கலாய்க்கும் அடியவர்கள்திறத்து அருள் செய்வாயாக. | |
உடம்பைத் தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள்
இடும்பைப் படாமல் இரங்குகண்டாய்-இருள் ஓடச் செந்தீ
அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா! அழலே உமிழும்
படம் பொத்து அரவு அரையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
|
2
|
இருள் ஓடுமாறு, அடுப்பம்பூவை ஒத்த நிறத்தினதாய்ச் செந்தீயை வெளிப்படுத்திக் கோபிக்கும் மழுப் படையை ஏந்தியவனே! நெருப்பைக் கக்கும் படமெடுத்தாடும் பாம்பை இடுப்பில் இறுகக் கட்டியவனே! எம்மை அடிமை கொள்ளும் பசுபதியே! பிறவிப் பிணியைப் போக்கி உன் திருவடிகளையே தம் தலைக்கண்வைத்த மேம்பட்டவர்களாகிய அடியவர்கள் துன்புறாத வகையில் அவர்களுக்கு இரங்கி அருளுவாயாக. | |
தாரித்திரம் தவிரா அடியார் தடுமாற்றம் என்னும்
மூரித் திரைப் பௌவம் நீக்குகண்டாய்-முன்னை நாள் ஒரு கால்
வேரித் தண் பூஞ் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழச் செந்தீப்
பாரித்த கண் உடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
|
3
|
முன்னொருகாலத்தில் தேனை உடைய குளிர்ந்த பூக்களாகிய ஒளிவீசும் ஐந்து அம்புகளை உடைய மன்மதனை வெந்து விழுமாறு நெருப்பினை வெளிப்படுத்திய கண்ணுடையவனாய் எம்மை ஆளும் பசுபதியே! வறுமைத் துன்பம் நீங்காத அடியவர்களுக்கு ஏற்படும் தடுமாற்றமாகிய பெரிய அலைகளை உடைய கடலிலிருந்து அவர்களைக் கரையேற்றுவாயாக. | |
ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்வி கண்டாய்-அண்டமே அளவும்
பெருவரைக்குன்றம் பிளிறப் பிளந்து, வேய்த்தோளி அஞ்சப்
பருவரைத் தோல் உரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!
|
4
|
வானளாவிய பெரிய மலைபோன்ற யானை பிளிறுமாறு அதன் உடலைப் பிளந்து மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி அஞ்சுமாறு அதன் தோலை உரித்துப் போர்த்த பசுபதியே! வேறு எவரையும் பற்றுக்கோடாகக் கருதாமல் உன் திருவடிகளையே வழிபடும் அடியவர்களுடைய நீங்குதல் அரிய வினைத் தொகுதிகளைப் போக்கி அருளுவாயாக. | |
இடுக்கு ஒன்றும் இன்றி, எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு
அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய்-அண்டம் எண் திசையும்
சுடர்த் திங்கள் சூடி, சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி,
படர்க்கொண்ட செஞ்சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
|
5
|
அண்டங்களிலும் எட்டுத் திசைகளிலும் ஒளி வீசுகின்ற சந்திரனைச் சூடிச் சுழலுகின்ற கங்கையோடு வண்டுகள் நெருங்கிப் பூக்களில் பரவுதலைக் கொண்ட செஞ்சடைப் பசுபதியே! இடையூறு ஏதும் இல்லாமல் தொடர்ச்சியாக உன் திருவடிகளை வழிபடுகின்ற அடியவர்களை வருத்தும் பிறவிப் பிணியைப் போக்குவாயாக. | |
| Go to top |
அடலைக்கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார்
நடலைப் படாமை விலக்கு கண்டாய்-நறுங் கொன்றை, திங்கள்,
சுடலைப் பொடிச்-சுண்ணம், மாசுணம், சூளாமணி, கிடந்து
படரச் சுடர் மகுடா! எம்மை ஆளும் பசுபதியே!
|
6
|
நறிய கொன்றை, பிறை, சாம்பல், பாம்பு, தலையில் சூடும் மணி இவை பரவி ஒளி வீசும் சடைமுடியை உடைய பசுபதியே! துயர்க்கடல் நீங்குவதற்காக நின் திருவடிகளையே பற்றுக்கோடாக அடைந்த அடியவர்கள் வருத்தமுறாத வகையில் அவர்கள் துயரங்களைப் போக்குவாயாக. | |
துறவித் தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார்
மறவித்தொழில் அது மாற்றுகண்டாய்-மதில் மூன்று உடைய
அறவைத்தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர்ப்-
பறவைப்புரம் எரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!
|
7
|
மும்மதில்கள் உடையனவாய்த் தாம் தங்கும் இடங்களை அழித்தல் தொழிலைப் புரிந்து வானத்திலே உலவும், மந்திரத்தால் செல்லும் தேர்போலப் பறக்கும் ஆற்றலுடைய மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்த பசுபதியே! உலகில் பற்றறுத்து நிற்றலாகிய தொழிலையே விரும்பிச் செய்து உன்னுடைய வண்டுகள் சூழ்ந்த திருவடிகளையே தொழும் அடியவர்களுடைய மறத்தலாகிய செயலைப் போக்கி அருளுவாயாக. | |
சித்தத்து உருகி, சிவன், எம்பிரான் என்று சிந்தையுள்ளே
பித்துப் பெருகப் பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய்-
மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம்
பத்து உற்று உற நெரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!
|
8
|
செருக்குற்ற இராவணனுடைய இருபது தோள்களையும் பத்துத் தலைகளையும், அவனுக்கு உன் திறத்துப் பக்தி ஏற்படுமாறு நசுக்கியவனே! எம்மை அடிமை கொள்ளும் பசுபதியே! மனம் உருகிச் சிவனே எம் தலைவன் என்று மனத்திலே உறுதியான எண்ணம் மிகவே அதனையே எப்பொழுதும் அடைவுகேடாகச் சொல்லிக் கொண்டிருக்கும் அடியவர்களுடைய பிறவிப் பிணியைப் போக்கி அருளுவாயாக. | |