சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.060   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவக்கரை - பஞ்சமம் ஹனுமத்தோடி ஆபோகி ஆகிரி ராகத்தில் திருமுறை அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு சந்திரசேகரேசுவரர் திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=6Llc4xqVvUo   Add audio link Add Audio

கறை அணி மா மிடற்றான், கரிகாடு அரங்கா உடையான்,
பிறை அணி கொன்றையினான், ஒருபாகமும் பெண் அமர்ந்தான்,
மறையவன் தன் தலையில் பலி கொள்பவன்-வக்கரையில்
உறைபவன், எங்கள் பிரான்; ஒலி ஆர் கழல் உள்குதுமே.

1
இறைவன் நஞ்சுண்ட கறுத்த கண்டத்தை உடையவன் . சுடுகாட்டில் திருநடனம் செய்பவன் . பிறைச் சந்திரனையும் , கொன்றைமாலையையும் அணிந்தவன் . உமாதேவியைத் தன்திரு மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . பிரமன் தலையைக் கொய்து அதன் ஓட்டில் பிச்சை ஏற்பவன் . திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எங்கள் தலைவனான சிவபெருமானின் ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த திருவடிகளைத் தியானிப்பீர்களாக .

பாய்ந்தவன் காலனை முன், பணைத்தோளி ஓர்பாகம் அதா
ஏய்ந்தவன், எண் இறந்த(வ்) இமையோர்கள் தொழுது இறைஞ்ச
வாய்ந்தவன், முப்புரங்கள் எரி செய்தவன்-வக்கரையில்
தேய்ந்த இளவெண்பிறை சேர் சடையான்; அடி
செப்புதுமே.

2
மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் சிவபெருமான் உதைத்தவன் . பருத்த தோள்களை உடைய உமா தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . எண்ணற்ற தேவர்களால் தொழுது போற்றப்படுபவன் . முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவன் . திருவக்கரை என்னும் திருத்தலத்தில் தேய்ந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சடையில் சூடி வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானின் திருவடிகளை வணங்கிப் போற்றுவோமாக !

சந்திரசேகரனே, அருளாய்! என்று, தண் விசும்பில்
இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச,
அந்தர மூ எயிலும்(ம்) அனல் ஆய் விழ, ஓர் அம்பினால்,
மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே.

3
` சந்திரனைச் சடைமுடியில் சூடியுள்ள சிவபெருமானே ! அருள்புரிவீராக ` என்று குளிர்ந்த விண்ணுலகத்தில் விளங்கும் இந்திரன் முதலான தேவர்கள் தொழுது போற்ற , அந்தரத்தில் திரிந்து கேடுகளை விளைவித்த மூன்று கோட்டைகளும் அக்கினியாகிய கணையினால் எரிந்து சாம்பலாகுமாறு மந்தர மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும் .

நெய் அணி சூலமோடு நிறை வெண்மழுவும்(ம்) அரவும்
கை அணி கொள்கையினான்; கனல் மேவிய ஆடலினான்;
மெய் அணி வெண்பொடியான், விரி கோவண ஆடையின், மேல்;
மை அணி மா மிடற்றான்; உறையும்(ம்) இடம் வக்கரையே.

4
நெய் தடவப்பட்ட சூலத்தையும் , வெண்ணிற மழுவையும் படைக்கலனாக ஏந்தி , பாம்பைக்கையில் ஆபரணமாகப் பூண்டு , நெருப்பேந்தித் திருநடனம் செய்பவன் சிவபெருமான் . அவன் தன் திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியவன் . விரித்து ஓதப்பெறும் வேதங்களைக் கோவணமாக அணிந்தவன் . மை நிறம் பெற்ற கரிய கண்டத்தையுடைய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும் .

ஏன வெண் கொம்பினொடும் இள ஆமையும் பூண்டு, உகந்து
கூன் இளவெண்பிறையும் குளிர் மத்தமும் சூடி, நல்ல
மான் அன மென் விழியாளொடும் வக்கரை மேவியவன்,
தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.

5
பன்றியின் கொம்பும் , ஆமையின் ஒடும் அணிகலனாகக் கொண்டு , வளைந்த பிறைச்சந்திரனையும் , குளிர்ந்த ஊமத்த மலரையும் சூடி , நல்ல மான்போன்ற மென்மையான விழிகளையுடைய உமாதேவியோடு திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பகையசுரர்களின் முப்புரங்களை எரியுண்ணும்படி செய்த முதல்வன் ஆவான் .
Go to top

கார் மலி கொன்றையொடும் கதிர் மத்தமும் வாள் அரவும்
நீர் மலியும் சடைமேல் நிரம்பா மதி சூடி, நல்ல
வார் மலி மென் முலையாளொடும் வக்கரை மேவியவன்,
பார் மலி வெண்தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே.

6
கார்காலத்தில் மிகுதியாக மலரும் கொன்றை மலரும் , ஊமத்த மலரும் , ஒளி பொருந்திய பாம்பும் , கங்கையும் சடைமுடியில் திகழ , கலைநிரம்பா பிறைச்சந்திரனைச் சூடி , நல்ல கச்சணிந்த மென்மையான முலைகளையுடைய உமாதேவியோடு திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான் . அப்பெருமான் இப்பூவுலகில் வெண்ணிறப்பிரம கபாலத்தில் பிச்சையேற்றுத் திரியும் தன்மையன் .

கான் அணவும் மறிமான் ஒரு கையது, ஒர் கை மழுவாள
தேன் அணவும் குழலாள் உமை சேர் திருமேனியினான்-
வான் அணவும் பொழில் சூழ் திருவக்கரை மேவியவன்;
ஊன் அணவும் தலையில் பலி கொண்டு உழல் உத்தமனே.

7
காட்டில் உலவும் மானை ஒரு கையில் ஏந்தி , மழுவாளை மற்றொரு கையிலேந்தியவன் சிவபெருமான் . வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . வானளாவிய சோலைகள் சூழ்ந்த திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பிரமனின் மண்டையோட்டை ஏந்திப் பிச்சை எடுத்துத் திரியும் உத்தமனாவான் .

இலங்கையர் மன்னன் ஆகி எழில் பெற்ற இராவணனைக்
கலங்க, ஒர் கால்விரலால், கதிர் போல் முடிபத்து அலற,
நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும், நன்கு அளித்த
வலம் கெழு மூ இலைவேல் உடையான் இடம் வக்கரையே.

8
இலங்கை மன்னனான அழகிய இராவணன் கலங்குமாறு , சிவபெருமான் தன் காற்பெருவிரலை ஊன்றி , ஒளி வீசுகின்ற பொன்னாலான திருமுடிகளணிந்த அவன் தலைகள் பத்தும் அலறுமாறு செய்தான் . பின் இராவணன் செருக்கு நீங்கி , நல்ல சிந்தனையோடு இறைவனைப் போற்றிசைக்க , திருவருளால் இறைவன் அவனுக்கு வீரவாளும் , நீண்ட வாழ்நாளும் கொடுத்து அருள் புரிந்தான் . அத்தகைய பெருமான் வலக்கையில் மூவிலைவேல் ஏந்தி வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும் .

காமனை ஈடு அழித்திட்டு, அவன் காதலி சென்று இரப்ப,
சேமமே, உன் தனக்கு! என்று அருள் செய்தவன்;
தேவர்பிரான்;
சாம வெண் தாமரை மேல் அயனும், தரணி அளந்த
வாமனனும்(ம்), அறியா வகையான்; இடம் வக்கரையே.

9
மன்மதனுடைய அழகிய வலிய தேகத்தை எரித்துச் சாம்பலாக்கிப் பின்னர் அவன் மனைவி இரதி இரந்து வேண்டிப் பிரார்த்திக்கச் சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்து அவள் கண்ணுக்கு மட்டும் புலப்படும்படி அருள்புரிந்தான் . வெண்டாமரையில் வீற்றிருந்து சாமகானம் பாடுகின்ற பிரமனும் , உலகையளந்த வாமனனான திருமாலும் அறியாவண்ணம் நீண்ட சோதியாக நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும் .

மூடிய சீவரத்தர், முதிர் பிண்டியர், என்று இவர்கள்
தேடிய, தேவர் தம்மால் இறைஞ்சப்படும் தேவர் பிரான்;
பாடிய நால்மறையன்; பலிக்கு என்று பல் வீதி தொறும்
வாடிய வெண்தலை கொண்டு உழல்வான்; இடம்
வக்கரையே.

10
காவியாடை போர்த்திய புத்தர்களும் , அசோக மரத்தை வணங்கும் சமணர்களும் , தேடுகின்ற தேவர்களால் வணங்கப் படுகின்ற தேவர்கட்கெல்லாம் தலைவனான சிவபெருமான் நான்மறைகளை அருளிச்செய்து , பல வீதிகள்தோறும் சென்று உலர்ந்த பிரமகபாலத்தை ஏந்திப் பிச்சையேற்றுத் திரிவான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும் .
Go to top

தண்புனலும்(ம்) அரவும் சடைமேல் உடையான், பிறை தோய்
வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன்(ன்), உறை வக்கரையை,
சண்பையர் தம் தலைவன்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன
பண் புனை பாடல் வல்லார் அவர் தம் வினை பற்று அறுமே.

11
குளிர்ந்த கங்கையும் , பாம்பும் சடைமுடியில் அணிந்த அழகனான சிவபெருமான் , உறையும் சந்திரனைத் தொடும்படி ஓங்கி வளர்ந்துள்ள செழுமைவாய்ந்த சோலைகள் சூழ்ந்த திருவக்கரை என்னும் திருத்தலத்தைப் போற்றி , சண்பை நகர் எனப்படும் சீகாழியில் சிவம் பெருக்க அவதரித்த தலைவனான தமிழ் ஞானசம்பந்தன் , அருளிய பண்ணோடு கூடிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வினையிலிருந்து நீங்கப் பெறுவர் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவக்கரை
3.060   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கறை அணி மா மிடற்றான்,
Tune - பஞ்சமம்   (திருவக்கரை சந்திரசேகரேசுவரர் வடிவாம்பிகையம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000