தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெரு மானதி டந்திகழ் ஐங்கணையக் கோனை எரித்தெரி யாடி இடம்குல வான திடங்குறை யாமறையா மானை இடத்ததொர் கையன் இடம்மத மாறு படப்பொழி யும்மலைபோல் ஆனை யுரித்த பிரான திடங்கலிக் கச்சி அனேகதங் காவதமே.
|
1
|
கூறு நடைக்குழி கட்பகு வாயன பேயுகந் தாடநின் றோரியிட வேறு படக்குட கத்திலை யம்பல வாணனின் றாடல் விரும்புமிடம் ஏறு விடைக்கொடி எம்பெரு மான்இமை யோர்பெரு மான்உமை யாள் கணவன் ஆறு சடைக்குடை அப்பன் இடங்கலிக் கச்சி அனேகதங் காவதமே.
|
2
|
கொடிக ளிடைக்குயில் கூவு மிடம்மயி லாலும் மிடம்மழு வாளுடைய கடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக் கண்டன் இடம்பிறைத் துண்டமுடிச் செடிகொள் வினைப்பகை தீரும் இடம்திரு வாகும் இடம்திரு மார்பகலத் தடிக ளிடம்மழல் வண்ணன் இடம்கலிக் கச்சி அனேகதங் காவதமே.
|
3
|
கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங் கங்கையுந் திங்களுஞ் சூடுசடை மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப் பங்கினிற் றங்க உவந்தருள்செய் சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள் பாயவி யாத்தழல் போலுடைத்தம் அங்கை மழுத்திகழ் கையன் இடங்கலிக் கச்சி அனேகதங் காவதமே.
|
4
|
பைத்த படத்தலை ஆடர வம்பயில் கின்ற இடம்பயி லப்புகுவார் சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ் கின்ற இடந்திரு வானடிக்கே வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள வைத்த இடம்மழு வாளுடைய அத்தன் இடம்மழல் வண்ணன் இடங்கலிக் கச்சி அனேகதங் காவதமே.
|
5
|
| Go to top |
தண்ட முடைத்தரு மன்தமர் என்தம ரைச்செயும் வன்றுயர் தீர்க்குமிடம் பிண்ட முடைப்பிற வித்தலை நின்று நினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம் கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த பிரான திடங்கடல் ஏழுகடந் தண்ட முடைப்பெரு மான திடங்கலிக் கச்சி அனேகதங் காவதமே.
|
6
|
கட்டு மயக்க மறுத்தவர் கைதொழு தேத்தும் இடங்கதி ரோனொளியால் விட்ட இடம்விடை யூர்தி இடங்குயிற் பேடைதன் சேவலொ டாடுமிடம் மட்டு மயங்கி அவிழ்ந்த மலர்ஒரு மாதவி யோடு மணம்புணரும் அட்ட புயங்கப் பிரான திடங்கலிக் கச்சி அனேகதங் காவதமே.
|
7
|
புல்லி யிடந்தொழு துய்துமெ னாதவர் தம்புர மூன்றும் பொடிப்படுத்த வில்லி இடம்விர வாதுயிர் உண்ணும்வெங் காலனைக் கால்கொடு வீந்தவியக் கொல்லி இடங்குளிர் மாதவி மவ்வல் குராவகு ளங்குருக் கத்திபுன்னை அல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக் கச்சி அனேகதங் காவதமே.
|
8
|
சங்கை யவர்புணர் தற்கரி யான்றள வேனகை யாள்வி ராமிகுசீர் மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை நட்டநின் றாடிய சங்கரனெம் மங்கைய வன்னன லேந்து பவன்கனல் சேரொளி யன்னதொர் பேரகலத் தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக் கச்சி அனேகதங் காவதமே.
|
9
|
வீடு பெறப்பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம்வினை தீருமிடம் பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு மேவினர் தங்களைக் காக்கும்இடம் பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன் உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார் கூடும் இடஞ்சிவ லோகன் இடங்கலிக் கச்சி அனேகதங் காவதமே.
|
10
|
| Go to top |