செத்தையேன் சிதம்பன் நாயேன் செடியனே னழுக்குப் பாயும் பொத்தையே போற்றி நாளும் புகலிட மறிய மாட்டேன் எத்தைநான் பற்றி நிற்கே னிருளற நோக்க மாட்டாக் கொத்தையேன் செய்வ தென்னே கோவல் வீரட்ட னீரே.
|
1
|
தலைசுமந் திருகை நாற்றித் தரணிக்கே பொறைய தாகி நிலையிலா நெஞ்சந் தன்னு ணித்தலு மைவர் வேண்டும் விலைகொடுத் தறுக்க மாட்டேன் வேண்டிற்றே வேண்டி யெய்த்தேன் குலைகள்மாங் கனிகள் சிந்துங் கோவல்வீ ரட்ட னீரே.
|
2
|
வழித்தலைப் படவு மாட்டேன் வைகலுந் தூய்மை செய்து பழித்திலேன் பாச மற்றுப் பரமநான் பரவ மாட்டேன் இழித்திலேன் பிறவி தன்னை யென்னினைந் திருக்க மாட்டேன் கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க் கோவல்வீ ரட்ட னீரே.
|
3
|
சாற்றுவ ரைவர் வந்து சந்தித்த குடிமை வேண்டிக் காற்றுவர் கனலப் பேசிக் கண்செவி மூக்கு வாயுள் ஆற்றுவ ரலந்து போனே னாதியை யறிவொன் றின்றிக் கூற்றுவர் வாயிற் பட்டேன் கோவல்வீ ரட்ட னீரே.
|
4
|
தடுத்திலே னைவர் தம்மைத் தத்துவத் துயர்வு நீர்மைப் படுத்திலேன் பரப்பு நோக்கிப் பன்மலர்ப் பாத முற்ற அடுத்திலேன் சிந்தை யார வார்வலித் தன்பு திண்ணம் கொடுத்திலேன் கொடிய வாநான் கோவல்வீ ரட்ட னீரே.
|
5
|
| Go to top |
மாச்செய்த குரம்பை தன்னை மண்ணிடை மயக்க மெய்து நாச்செய்த நாலு மைந்து நல்லன வாய்தல் வைத்துக் காச்செய்த காயந் தன்னு ணித்தலு மைவர் வந்து கோச்செய்து குமைக்க வாற்றேன் கோவல்வீ ரட்ட னீரே.
|
6
|
படைகள்போல் வினைகள் வந்து பற்றியென் பக்க னின்றும் விடகிலா வாத லாலே விகிர்தனை விரும்பி யேத்தும் இடையிலே னென்செய் கேனா னிரப்பவர் தங்கட் கென்றும் கொடையிலேன் கொள்வதே நான் கோவல்வீ ரட்ட னீரே.
|
7
|
பிச்சிலேன் பிறவி தன்னைப் பேதையேன் பிணக்க மென்னும் துச்சுளே யழுந்தி வீழ்ந்து துயரமே யிடும்பை தன்னுள் அச்சனா யாதி மூர்த்திக் கன்பனாய் வாழ மாட்டாக் கொச்சையேன் செய்வ தென்னே கோவல்வீ ரட்ட னீரே.
|
8
|
நிணத்திடை யாக்கை பேணி நியமஞ்செய் திருக்க மாட்டேன் மணத்திடை யாட்டம் பேசி மக்களே சுற்ற மென்னும் கணத்திடை யாட்டப் பட்டுக் காதலா லுன்னைப் பேணும் குணத்திடை வாழ மாட்டேன் கோவல்வீ ரட்ட னீரே.
|
9
|
விரிகட லிலங்கைக் கோனை விரிகயி லாயத்தின் கீழ் இருபது தோளும் பத்துச் சிரங்களு நெரிய வூன்றிப் பரவிய பாடல் கேட்டுப் படைகொடுத் தருளிச் செய்தார் குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்ட னாரே.
|
10
|
| Go to top |