வாரணவு முலைமங்கை பங்கினரா யங்கையினில் போரணவு மழுவொன்றங் கேந்திவெண் பொடியணிவர் காரணவு மணிமாடங் கடைநவின்ற கலிக்கச்சி நீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.
|
1
|
காரூரு மணிமிடற்றார் கரிகாட ருடைதலைகொண் டூரூரன் பலிக்குழல்வா ருழைமானி னுரியதளர் தேரூரு நெடுவீதிச் செழுங்கச்சி மாநகர்வாய் நீரூரு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.
|
2
|
கூறணிந்தார் கொடியிடையைக் குளிர்சடைமே லிளமதியோ டாறணிந்தா ராடரவம் பூண்டுகந்தா ரான்வெள்ளை ஏறணிந்தார் கொடியதன்மே லென்பணிந்தார் வரைமார்பில் நீறணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
|
3
|
பிறைநவின்ற செஞ்சடைகள் பின்றாழப் பூதங்கள் மறைநவின்ற பாடலோ டாடலராய் மழுவேந்திச் சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவாய்த் தேன்கதுவும் நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
|
4
|
அன்றாலின் கீழிருந்தங் கறம்புரிந்த வருளாளர் குன்றாத வெஞ்சிலையிற் கோளரவ நாண்கொளுவி ஒன்றாதார் புரமூன்று மோங்கெரியில் வெந்தவிய நின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
|
5
|
Go to top |
பன்மலர்கள் கொண்டடிக்கீழ் வானோர்கள் பணிந்திறைஞ்ச நன்மையிலா வல்லவுணர் நகர்மூன்று மொருநொடியில் வின்மலையி னாண்கொளுவி வெங்கணையா லெய்தழித்த நின்மலனார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
|
6
|
புற்றிடை வாளரவினொடு புனைகொன்றை மதமத்தம் எற்றொழியா வலைபுனலோ டிளமதிய மேந்துசடைப் பெற்றுடையா ரொருபாகம் பெண்ணுடையார் கண்ணமரும் நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
|
7
|
ஏழ்கடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை யெழில்வரைவாய்த் தாழ்விரலா லூன்றியதோர் தன்மையினார் நன்மையினார் ஆழ்கிடங்குங் சூழ்வயலு மதில்புல்கி யழகமரும் நீண்டமறுகிற் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
|
8
|
ஊண்டானு மொலிகடனஞ் சுடைதலையிற் பலிகொள்வர் மாண்டார்தம் மெலும்பணிவர் வரியரவோ டெழிலாமை பூண்டாரு மோரிருவ ரறியாமைப் பொங்கெரியாய் நீண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
|
9
|
குண்டாடிச் சமண்படுவார் கூறைதனை மெய்போர்த்து மிண்டாடித் திரிதருவா ருரைப்பனகண் மெய்யல்ல வண்டாருங் குழலாளை வரையாகத் தொருபாகம் கண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
|
10
|
Go to top |
கண்ணாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டுறையும் பெண்ணாருந் திருமேனிப் பெருமான தடிவாழ்த்தித் தண்ணாரும் பொழிற்காழித் தமிழ்ஞான சம்பந்தன் பண்ணாருந் தமிழ்வல்லார் பரலோகத் திருப்பாரே.
|
11
|