பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங் கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும் எண்ணம ருங்குணத் தாரு மிமையவ ரேத்தநின் றாரும் பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
|
1
|
தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு வாரவர் தங்கள் வினைப்பகை யாயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில் நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்கப் பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடி யாரே.
|
2
|
சடையமர் கொன்றையி னாருஞ் சாந்தவெண் ணீறணிந் தாரும் புடையமர் பூதத்தி னாரும் பொறிகிளர் பாம்பசைத் தாரும் விடையம ருங்கொடி யாரும் வெண்மழு மூவிலைச் சூலப் படையமர் கொள்கையி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
|
3
|
நறைவளர் கொன்றையி னாரு ஞாலமெல் லாந்தொழு தேத்தக் கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி மறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழன் மொந்தை பறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
|
4
|
போகமு மின்பமு மாகிப் போற்றியென் பாரவர் தங்கள் ஆகமு றைவிட மாக வமர்ந்தவர் கொன்றையி னோடும் நாகமுந் திங்களுஞ் சூடி நன்னுதன் மங்கைதன் மேனிப் பாகமு கந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடி யாரே.
|
5
|
Go to top |
கடிபடு கூவிள மத்தங் கமழ்சடை மேலுடை யாரும் பொடிபட முப்புரஞ் செற்ற பொருசிலை யொன்றுடை யாரும் வடிவுடை மங்கைதன் னோடு மணம்படு கொள்கையி னாரும் படிபடு கோலத்தி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
|
6
|
ஊனமர் வெண்டலை யேந்தி யுண்பலிக் கென்றுழல் வாரும் தேனம ரும்மொழி மாது சேர்திரு மேனியி னாரும் கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரிக் கோலக் கரைமேல் பானல நீறணி வாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
|
7
|
புரந்தரன் றன்னொடு வானோர் போற்றியென் றேத்தநின் றாரும் பெருந்திறல் வாளரக் கன்னைப் பேரிடர் செய்துகந் தாரும் கருந்திரை மாமிடற் றாருங் காரகில் பன்மணி யுந்திப் பரந்திழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடி யாரே.
|
8
|
திருமகள் காதலி னானுந் திகழ்தரு மாமலர் மேலைப் பெருமக னும்மவர் காணாப் பேரழ லாகிய பெம்மான் மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடே பருமணி நீர்த்துறை யாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
|
9
|
புத்தரும் புந்தியி லாத சமணரும் பொய்ம்மொழி யல்லான் மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபல வற்றால் சித்தருந் தேவருங் கூடிச் செழுமலர் நல்லன கொண்டு பத்தர்கள் தாம்பணிந் தேத்தும் பாண்டிக் கொடுமுடி யாரே.
|
10
|
Go to top |
கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுண் ஞானசம் பந்தன் பலமல்கு வெண்டலை யேந்தி பாண்டிக் கொடுமுடி தன்னைச் சொலமல்கு பாடல்கள் பத்துஞ் சொல்லவல் லார்துயர் தீர்ந்து நலமல்கு சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.
|
11
|