சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.086   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்) - சீகாமரம் தீரசங்கராபரணம் நாதநாமக்கிரியை கஜகௌரி ராகத்தில் திருமுறை அருள்தரு அமிர்தவல்லியம்மை உடனுறை அருள்மிகு பனங்காட்டீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=2S4DswwYZWs   Add audio link Add Audio

விடையின் மேல் வருவானை; வேதத்தின் பொருளானை;
அடையில் அன்பு உடையானை; யாவர்க்கும் அறிய ஒண்ணா,
மடையில் வாளைகள் பாயும் வன் பார்த்தான் பனங்காட்டூர்,
சடையில் கங்கை தரித்தானை; சாராதார் சார்பு என்னே!

1
இடபத்தின்மேல் ஏறி வருபவனும் , வேதத்தின் பொருளாய் உள்ளவனும் , தன்னை அடைந்தால் , அங்ஙனம் அடைந் தார்மாட்டு , அன்புடையனாகின்றவனும் ஆகிய , நீர் மடைகளில் வாளை மீன்கள் துள்ளுகின்ற திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற , யாவராலும் அறியவொண்ணாத , சடைமுடி யின்கண் கங்கையைத் தாங்கியுள்ள பெருமானை அடையாதவரது அடைவுதான் என்னே !

அறையும் பைங்கழல் ஆர்ப்ப, அரவு ஆட, அனல் ஏந்தி,
பிறையும் கங்கையும் சூடி, பெயர்ந்து, ஆடும் பெருமானார்;
பறையும் சங்கு ஒலி ஓவாப் படிறன்; தன் பனங்காட்டூர்
உறையும் எங்கள் பிரானை; உணராதார் உணர்வு என்னே!

2
ஒலிக்கின்ற , பசிய பொன்னாலாகிய கழல்கள் கலிப்பவும் , அணியப்பட்ட பாம்புகள் சுழன்று ஆடவும் , கையில் நெருப்பை ஏந்தி , தலையில் பிறையையும் கங்கையையும் அணிந்து கொண்டு , அடிபெயர்ந்து நின்று நடனம் ஆடுகின்ற பெருமானாகிய , யாவராலும் அறியவொண்ணாமையிற் கள்வனாய் , முழங்குகின்ற பறைகளும் , சங்குகளும் ஒலித்தல் ஒழியாத , தனது திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் இறைவனை உணரா தாரது உணர்வுதான் என்னே !

தண் ஆர் மா மதி சூடி, தழல் போலும் திருமேனிக்கு
எண் ஆர் நாள்மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள்
பண் ஆர் பாடல் அறாத படிறன்; தன் பனங்காட்டூர்
பெண் ஆண் ஆய பிரானை; பேசாதார் பேச்சு என்னே!

3
குளிர்ச்சி பொருந்திய சிறந்த சந்திரனை முடிமேற் சூடி , கள்வனாய் , நெருப்புப்போலும் தனது திருமேனிக்கு உரியனவாக எண்ணுதல் பொருந்திய , அன்று மலர்ந்த மலர்களைக்கொண்டு , மனம் பொருந்தித் துதித்து வழிபடும் அடியார்களது பண்ணிறைந்த பாடலின் ஒலி நீங்காத , தனது திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளி யிருக்கின்ற , பெண்ணும் ஆணும் ஆய உருவத்தினனாகிய பெரு மானைச் சொல்லாதவரது சொல்தான் என்னே !

நெற்றிக்கண் உடையானை, நீறு ஏறும் திருமேனிக்
குற்றம் இல் குணத்தானை, கோணாதார் மனத்தானை
பற்றிப் பாம்பு அரை ஆர்த்த படிறன், தன் பனங்காட்டூர்ப்
பெற்றொன்று ஏறும் பிரானை, பேசாதார் பேச்சு என்னே!

4
நெற்றியில் கண்ணை யுடையவனும் , திருநீறு பொருந்திய திருமேனியை உடையவனும் , குற்றம் இல்லாத இயல்பை யுடையவனும் , கோடுதல் இல்லாதவரது மனத்தில் உள்ளவனும் , பாம்பைப் பிடித்து அரையிற் கட்டிய கள்வனும் ஆகிய , தனது திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற , எருது ஒன்றின்மேல் ஏறுகின்ற கடவுளைச் சொல்லாதவரது சொல்தான் என்னே !

உரம் என்னும் பொருளானை, உருகில் உள் உறைவானை,
சிரம் என்னும் கலனானை, செங்கண் மால்விடையானை,
வரம் முன்னம் அருள் செய்வான், வன் பார்த்தான் பனங்காட்டூர்ப்
பரமன், எங்கள் பிரானை, பரவாதார் பரவு என்னே!

5
` ஞானம் ` என்று சொல்லப்படும் பொருளாய் உள்ளவனும் , உள்ளம் அன்பால் உருகினால் , அதன் கண் நீங்காது தங்குகின்றவனும் , தலை ஓடாகிய உண்கலத்தை உடையவனும் , சிவந்த கண்களை யுடைய பெரிய இடப வாகனத்தை உடையவனும் , தன்னை வழிபடுவார் விரும்பும் வரத்தை விரைந்து அருளுபவனும் , மேலானவனும் ஆகிய , திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளி யிருக்கின்ற எங்கள் இறைவனைத் துதியாதவரது துதிதான் என்னே !
Go to top

எயிலார் பொக்கம்(ம்) எரித்த எண்தோள் முக்கண்(ண்) இறைவன்;
வெயில் ஆய், காற்று என் வீசி, மின் ஆய், தீ என நின்றான்;
மயில் ஆர் சோலைகள் சூழ்ந்த வன் பார்த்தான் பனங்காட்டூர்ப்
பயில்வானுக்கு, அடிமைக் கண் பயிலாதார் பயில்வு என்னே!

6
பொலிவு நிறைந்த சில மதில்களை எரித்தவனும் , எட்டுத் தோள்களையும் , மூன்று கண்களையும் உடைய கடவுளும் , வெயிலாய்க் காய்ந்து , காற்றாய் வீசி , மின்னாய் மின்னி , தீயாய் எரிந்து நிற்பவனும் ஆகிய , மயில்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் நீங்காதிருக்கும் பெருமானுக்குச் செய்யும் தொண்டிற் பயிலாதவரது பயிற்சிதான் என்னே !

மெய்யன், வெண்பொடி பூசும் விகிர்தன், வேத(ம்) முதல்வன்,
கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம்(ம்) அறுத்தான்,
பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன், தன் பனங்காட்டூர்
ஐயன், எங்கள் பிரானை, அறியாதார் அறிவு என்னே!

7
மெய்ப்பொருளாய் உள்ளவனும் , வெள்ளிய நீற்றைப் பூசுகின்ற , வேறுபட்ட இயல்பினனும் , வேதத்திற்குத் தலை வனும் , கையில் மான் மழுக்களை ஏந்துபவனும் , காலனது காலத்தை இடைமுரிவித்தவனும் , படத்தைக் கொண்ட பாம்பினை அரையின் கண் கட்டியுள்ள கள்வனும் , யாவர்க்கும் தலைவனும் ஆகிய தனது திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் பெருமானை அறியாதவரது அறிவுதான் என்னே !

வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பு இலியை,
பஞ்சிச் சீறடியாளைப் பாகம் வைத்து உகந்தானை,
மஞ்சு உற்ற மணி மாட வன் பார்த்தான் பனங்காட்டூர்
நெஞ்சத்து எங்கள் பிரானை, நினையாதார் நினைவு என்னே!

8
வஞ்சனையற்ற தூய மனம் உடையவரை என்றும் மறவாதவனும் , பிறப்பில்லாதவனும் , செம்பஞ்சு ஊட்டிய சிறிய அடிகளை யுடையாளாகிய உமாதேவியை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளவனும் ஆகிய , மேகங்கள் பொருந்திய , மணிகள் இழைத்த மாடங்களையுடைய திரு வன்பார்த்தான் பனங்காட்டூரிலும் , எங்கள் நெஞ்சத்திலும் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை நினையாதவரது நினைவுதான் என்னே !

மழையானும், திகழ்கின்ற மலரோன், என்று இருவர் தாம்
உழையா நின்றவர் உள்க உயர்வானத்து உயர்வானை,
பழையானை; பனங்காட்டூர் பதி ஆகத் திகழ்கின்ற
குழை(க்)காதற்கு அடிமைக் கண் குழையாதார் குழைவு என்னே!

9
மேகம்போலும் நிறத்தினனாகிய திருமாலும் , மலரில் இருப்பவனாகிய பிரமனும் என்ற இருவரும் பணி செய்கின்ற வராய் நினைந்து நிற்க , உயர்ந்த வானத்தினும் உயர்ந்து நிற்பவனும் , எல்லாரினும் பழையவனும் ஆகிய , திரு வன்பார்த்தான் பனங் காட்டூரைத் தனது ஊராகக் கொண்டு விளங்குகின்ற , குழையணிந்த காதினையுடைய பெருமானுக்குத் தொண்டுபடுதலில் மனம் நெகிழாத வரது மனநெகிழ்ச்சிதான் என்னே !

பார் ஊரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானை,
சீர் ஊரும் திரு ஆரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல், அடி நாய் சொல்,
ஊர் ஊரன் உரை செய்வார், உயர்வானத்து உயர்வாரே.

10
தனது பெயர் நிலம் முழுதும் பரவிய திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற பவளம் போலும் உருவத்தையுடைய பெருமானை , புகழ்மிக்க திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானது பெயரைத் தலையில் வைத்துள்ள , அப்பெருமானுக்கு அடித்தொண்டு செய்யும் அடியவ னாகிய , அவன் அடிக்கீழ்க் கிடக்கும் நாய் போலும் நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களை , அவரவர் ஊரின்கண் உரைசெய்வாரும் சிவ லோகத்தில் உயர்வு பெற்று விளங்குவர் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்)
7.086   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   விடையின் மேல் வருவானை; வேதத்தின்
Tune - சீகாமரம்   (திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்) பனங்காட்டீசுவரர் அமிர்தவல்லியம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org