சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.031   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருவிடையாறு - கொல்லி கனகாங்கி நவரோசு கனகாம்பரி ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=BfEZ3QzwUjA   Add audio link Add Audio

முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில் முட்டம்,
சிந்தை ஊர் நன்று சென்று அடைவான் திரு ஆரூர்,
பந்தையூர், பழையாறு, பழனம், பைஞ்ஞீலி,
எந்தை ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடை மருதே.

1
அடியார்களது உள்ளமாகிய ஊரையே விரும்பிச் சென்று அடைபவனும் , எம் தந்தையும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` பழைய ஊராகிய முதுகுன்றம் , குரங்கணின்முட்டம் , ஆரூர் , மகளிரது பந்துகள் உலாவுகின்ற பழையாறு , பழனம் , பைஞ்ஞீலி , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

சுற்றும் ஊர் சுழியல், திருச் சோபுரம், தொண்டர்
ஒற்றும் ஊர் ஒற்றியூர், திரு ஊறல், ஒழியாப்
பெற்றம் ஊர்தி, பெண் பாதி இடம் பெண்ணைத் தெண்நீர்
எற்றும் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.

2
இடபத்தை ஒழியாது ஏறுகின்றவனும் , பெண்ணினைக் கொண்ட பாதி உடம்பை உடையவனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` அடி யார்கள் சென்று சூழும் ஊராகிய சுழியல் , சோபுரம் , அவர்கள் ஆராய்கின்ற ஒற்றியூர் , ஊறல் , பெண்ணையாற்றின் தெளிவாகிய நீர் மோதுகின்ற இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

கடங்களூர், திருக்காரிக்கரை, கயிலாயம்,
விடங்களூர், திரு வெண்ணி, அண்ணாமலை, வெய்ய
படங்கள் ஊர்கின்ற பாம்பு அரையான், பரஞ்சோதி,
இடம் கொள் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.

3
கொடிய , படங்களோடு ஊர்ந்து செல்கின்ற பாம்புகளை அரையில் உடையவனும் , மேலான ஒளியாய் உள்ளவனும் , யாவராலும் அடையப்படுபவனுமாகிய இறைவன் தனக்கு இடமாகக் கொள்ளுகின்ற ஊர்கள் , ` செய்கடன்கள் நிரம்ப நிகழ்கின்ற காரிகரை , கயிலாயம் , நீரும் தேனும் மிக்குப் பாய்கின்ற வெண்ணி , அண்ணா மலை , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

கச்சையூர், காவம், கழுக்குன்றம், காரோணம்,
பிச்சை ஊர் திரிவான்-கடவூர், வடபேறூர்,
கச்சி ஊர் கச்சி, சிக்கல், நெய்த்தானம், மிழலை,
இச்சை ஊர் எமது அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.

4
பிச்சைக்கு ஊர்தோறும் திரிபவனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகியஇறைவன் விரும்புதல் செய்கின்ற ஊர்கள் , ` கச்சையூர் , பலகாக்கள் , அழகிய கழுக்குன்றம் , காரோணம் , கடவூர் , வடபேறூர் , கச்சணிந்தவளாகிய காமக்கோட்டி யம்மையது ஊரெனப்படுகின்ற காஞ்சி , சிக்கல் , நெய்த்தானம் , வீழிமிழலை , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

நிறையனூர், நின்றியூர், கொடுங்குன்றம், அமர்ந்த
பிறையனூர், பெருமூர், பெரும்பற்றப் புலியூர்,
மறையனூர், மறைக்காடு, வலஞ்சுழி, வாய்த்த
இறையனூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.

5
எங்கும் நிறைந்தவனும் , விரும்பிச் சூடிய பிறையை உடையவனும் , வேதத்தை ஓதுபவனும் , வலஞ்சுழியில் பொருந்தியுள்ள கடவுளும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` நின்றியூர் , கொடுங்குன்றம் , பெருமூர் , பெரும் பற்றப்புலியூர் , மறைக்காடு , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .
Go to top

திங்களூர், திரு ஆதிரையான் பட்டினம் ஊர்,
நங்களூர், நறையூர், நனி நால் இசை நாலூர்,
தங்களூர், தமிழான் என்று பாவிக்க வல்ல
எங்களூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.

6
இறைவனை , ` தமிழில் விளங்குபவன் ` என்று கருதவல்ல யாங்கள் , எம்முள் அளவளாவுங்கால் , எம்மை நீக்கி , ` எம்மினும் உயர்ந்த அடியவர்கட்கு உரிய ஊர் ` என்றும் , யாவரையும் உளப்படுத்து , ` நங்கள் ஊர் ` என்றும் , பிறரொடு சொல்லாடுங்கால் , முன்னிலையாரை நீக்கி , ` எங்கள் ஊர் ` என்றும் சொல்லுமாறு , யாவராலும் அடையப்படும் பெருமானாகிய இறைவனுக்கு உரியதாய் உள்ள ஊர்கள் , ` திங்களூர் , திருவாதிரையான் பட்டினம் என்னும் ஊர் , நறையூர் , மிகவும் பரவிய புகழினையுடைய நாலூர் , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

கருக்க நஞ்சு அமுது உண்ட கல்லாலன், கொல் ஏற்றன்,
தருக்கு அரக்கனைச் செற்று உகந்தான், தன் முடிமேல்
எருக்க நாள் மலர் இண்டையும் மத்தமும் சூடி,
இருக்கும் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.

7
தீக்கின்ற அந்த நஞ்சினை உண்டவனும் , கல்லால மர நிழலில் இருப்பவனும் , கொல்லும் இடபத்தை ஏறுபவனும் , செருக்குற்ற சூரியனை ஒறுத்துப் பின் அருள்செய்தவனும் , தனது முடியின் மேல் அன்று மலர்ந்த எருக்கம்பூவினாலாகிய இண்டை மாலையையும் , ஊமத்தம் பூவினையும் சூடியவனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவன் வீற்றிருக்கும் ஊர்கள் , ` இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

தேசனூர், வினை தேய நின்றான்-திரு ஆக்கூர்,
பாசனூர், பரமேட்டி, பவித்திர பாவ-
நாசன்-ஊர் நனிபள்ளி, நள்ளாற்றை அமர்ந்த
ஈசனூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.

8
ஒளிவடிவினனும் , தீவினைகள் குறைய நிற்பவனும் , திருவருளாகிய தொடர்பினை உடையவனும் , மேலிடத்தில் இருப்பவனும் , தூயவனும் , பாவத்தைப் போக்குபவனும் , ` நள்ளாறு ` என்னும் தலத்தை விரும்பி இருக்கின்ற முதல்வனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` ஆக்கூர் , நனிபள்ளி , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

பேறனூர், பிறைச் சென்னியினான்-பெருவேளூர்,
தேறனூர், திருமாமகள் கோன் திருமால் ஓர்-
கூறன்-ஊர் குரங்காடு துறை, திருக்கோவல்,
ஏறனூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.

9
எல்லா உயிர்கட்கும் பேறாகின்றவனும் , பிறையை யணிந்த சடையை உடையவனும் , தெளியப்படுபவனும் , திருமகளுக்குத் தலைவனாகிய திருமாலை ஒரு பாகத்தில் உடையவனும் , இடபத்தை உடையவனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` பெருவேளூர் , குரங்காடுதுறை , கோவலூர் , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

ஊறி வாயினன், நாடிய வன் தொண்டன்-ஊரன்
தேறுவார் சிந்தை தேறும் இடம் செங்கண் வெள் ஏறு
ஏறுவார் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதைக்
கூறுவார் வினை எவ்விட, மெய் குளிர்வாரே.

10
சிவந்த கண்களையுடைய வெள்ளிய விடையை ஏறுகின்றவரும் , யாவராலும் அடையப்படும் பெருமானுமாய் உள்ள இறைவரது இடையாற்றையும் , இடைமருதையும் , வன்றொண்டனாகிய நம்பியாரூரன் சுவை ஊறும் வாயினையுடையவனாய் , தெளியத் தகுவாரது உள்ளங்கள் தெளிதற்கு வாயிலாய் உள்ள தலங்களோடு நினைந்து பாடிய இப்பாடல்களைச் சொல்லுகின்றவர்கள் , வினைத் துன்பம் நீங்க , உடல் குளிர்வார்கள் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவிடையாறு
7.031   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில்
Tune - கொல்லி   (திருவிடையாறு )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000