அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார் தாமே; அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதி தாமே; கொலை ஆய கூற்றம் உதைத்தார் தாமே; கொல் வேங்கைத் தோல் ஒன்று அசைத்தார் தாமே; சிலையால் புரம் மூன்றும் எரித்தார் தாமே; தீ நோய் களைந்து என்னை ஆண்டார் தாமே; பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
|
1
|
திருப்பழனத்திலே உகந்தருளி உறையும் எம் பெருமான் அலைகள் பொருந்திய கடலின் நஞ்சினை உண்டவர். தேவர்களுக்கு அருள் செய்யும் முதற்பொருள். உயிர்களைக் கவரும் கூற்றினை உதைத்தவர். தம்மால் கொல்லப்பட்ட வேங்கைப் புலியின் தோலை உடுத்தவர். வில்லால் திரிபுரத்தை எரித்தவர். கொடிய சூலை நோயைப் போக்கி என்னை ஆட் கொண்டவர். பிச்சை எடுக்கும் நிலையிலும் அழகான பண்புடையவர். | |
வெள்ளம் ஒரு சடைமேல் ஏற்றார் தாமே; மேலார்கள் மேலார்கள் மேலார் தாமே; கள்ளம் கடிந்து என்னை ஆண்டார் தாமே; கருத்து உடைய பூதப்படையார் தாமே; உள்ளத்து உவகை தருவார் தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார் தாமே பள்ளப் பரவை நஞ்சு உண்டார் தாமே பழன நகர் எம்பிரானார் தாமே.
|
2
|
பழன நகர் எம்பிரானார் ஒற்றைச் சடையிலே கங்கை வெள்ளத்தை ஏற்றவர். மேம்பட்டவர் எல்லோருக்கும் மேம்பட்டவர். வஞ்சத்தைப் போக்கி என்னை ஆட்கொண்டவர். ஞானம் பெற்ற பூதங்களைப் படையாக உடையவர். தம்மை நினைக்கும் மனத்திற்கு மகிழ்ச்சி தருபவர். தீராத பெரிய நோய்களையும், சிறிய நோய்களையும் தீர்ப்பவர். ஆழமான கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர். | |
இரவும் பகலும் ஆய் நின்றார் தாமே; எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார் தாமே; அரவம் அரையில் அசைத்தார் தாமே; அனல் ஆடி அங்கை மறித்தார் தாமே; குரவம் கமழும் குற்றாலர் தாமே; கோலங்கள் மேல் மேல் உகப்பார் தாமே; பரவும் அடியார்க்குப் பாங்கர் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
|
3
|
பழன நகர் எம்பிரானார் இரவும் பகலும் எப்போதும் என் நெஞ்சத்து உள்ளவராய்ப் பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவராய்த் தீயில் கூத்தாடித் தம் கையால் எல்லோருக்கும் `அஞ்சன்மின்` என்று அபயம் அளிப்பவராய்க் குரா மலர் மணம் கமழும் குற்றாலத்தில் உறைபவராய்ப் பலபல வேடங்களை விரும்பு பவராய்த் தம்மை வழிபடும் அடியவர்களுக்கு என்றும் பக்கலில் இருந்து உதவுபவர். | |
மாறு இல் மதில் மூன்றும் எய்தார் தாமே; வரி அரவம் கச்சு ஆக ஆர்த்தார் தாமே; நீறு சேர் திருமேனி நிமலர் தாமே; நெற்றி நெருப்புக் கண் வைத்தார் தாமே; ஏறு கொடுஞ் சூலக் கையார் தாமே; என்பு ஆபரணம் அணிந்தார் தாமே; பாறு உண் தலையில் பலியார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
|
4
|
பழன நகர் எம்பிரானார் தமக்கு நிகரில்லாத மதில்கள் மூன்றனையும் அழித்தவராய்க் கோடுகளை உடைய பாம்பினைக் கச்சாக அணிந்தவராய், திருநீறணிந்த தூயவராய், நெற்றியில் அக்கினியாகிய கண்ணை உடையவராய்க் கொடிய சூலத்தை ஏந்தியவராய், எலும்புகளை அணிகளாக அணிந்தவராய்ப் பருந்துகள் புலால் நாற்றமறிந்து வட்டமிடும் மண்டையோட்டில் பிச்சை ஏற்பவராய் உள்ளார். | |
சீரால் வணங்கப்படுவார் தாமே; திசைக்கு எல்லாம் தேவு ஆகி நின்றார் தாமே; ஆரா அமுதம் ஆனார் தாமே; அளவு இல் பெருமை உடையார் தாமே; நீர் ஆர் நியமம் உடையார் தாமே; நீள்வரை வில் ஆக வளைத்தார் தாமே; பாரார் பரவப்படுவார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
|
5
|
பழன நகர் எம்பிரானார் எல்லோராலும் புகழ்ந்து வணங்கப்படுபவராய், எண் திசைகளுக்கும் உரிய தேவராய், தெவிட்டாத அமுதம் ஆவாராய், எல்லையற்ற பெருமை உடையவராய், நீர்வளம் பொருந்திய நியமம் என்ற திருத்தலத்தை உடையவராய், மேருமலையை வில்லாக வளைத்தவராய், எல்லா உலகத்தாராலும் முன் நின்று துதிக்கப்படுபவர் ஆவர். | |
| Go to top |
காலன் உயிர் வௌவ வல்லார் தாமே; கடிது ஓடும் வெள்ளை விடையார் தாமே; கோலம் பலவும் உகப்பார் தாமே; கோள் நாகம் நாண் ஆகப் பூண்டார் தாமே; நீலம் பொலிந்த மிடற்றார் தாமே; நீள்வரையின் உச்சி இருப்பார் தாமே; பால விருத்தரும் ஆனார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
|
6
|
பழன நகர் எம்பிரானார் காலன் உயிரைப் போக்க வல்லவராய், விரைந்து ஓடும் வெள்ளை நிறக் காளையை உடையவராய்ப் பல வேடங்களையும் விரும்புபவராய்க் கொடிய பாம்பினைத் தம் வில்லின் நாணாக இணைத்தவராய், நீல கண்டராய்க் கயிலாயத்தின் உச்சியில் உள்ளாராய், பாலன் மூத்தோன் முதலிய எல்லாப் பருவங்களையும் உடையவராய் உள்ளார். | |
ஏய்ந்த உமை நங்கை பங்கர் தாமே; ஏழ் ஊழிக்கு அப் புறம் ஆய் நின்றார் தாமே; ஆய்ந்து மலர் தூவ நின்றார் தாமே; அளவு இல் பெருமை உடையார் தாமே; தேய்ந்த பிறை சடைமேல் வைத்தார் தாமே; தீ வாய் அரவு அதனை ஆர்த்தார் தாமே; பாய்ந்த படர் கங்கை ஏற்றார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
|
7
|
பழன நகர் எம்பிரானார் தமக்குப் பொருந்திய பார்வதி பாகராய், ஏழு ஊழிக்காலங்களுக்கும் அப்பாற்பட்டவராய், அடியார்கள் மலர்களைத் தூய்மை செய்து அணிவிக்க அவற்றை ஏற்று நிற்பவராய், எல்லை கடந்த பெருமை உடையவராய், உருவில் சிறிய பிறையைச் சடையில் அணிந்தவராய், விடம் கக்கும் வாயினை உடைய பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவராய்த் தேவருலகிலிருந்து கீழ்நோக்கிப் பாய்ந்த கங்கையைச் சடையில் ஏற்றவராய் உள்ளார். | |
ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே; உள் ஊறும் அன்பர் மனத்தார் தாமே; பேராது என் சிந்தை இருந்தார் தாமே; பிறர்க்கு என்றும் காட்சிக்கு அரியார் தாமே; ஊர் ஆரும் மூஉலகத்து உள்ளார் தாமே; உலகை நடுங்காமல் காப்பார் தாமே; பார் ஆர் முழவத்து இடையார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
|
8
|
பழன நகர் எம்பிரானார் தம்மை நினையாதவர் உள்ளத்தில் நிலையாக இல்லாதவராய், உள்ளத்தில் அன்பு சுரந்து பெருகுகின்ற அன்பர்கள் உள்ளத்தில் நிலையாக இருப்பவராய், என் உள்ளத்தை விட்டு அகலாது இருப்பவராய், தம் அடியவர் அல்லாத பிறருக்குக் காண்பதற்கு அரியவராய், ஊர்கள் நிறைந்த மூவுலகத்தும் பரவியிருப்பவராய், உலகம் துயரால் நடுங்காதபடி காப்பவராய், இவ்வுலகைச் சூழ்ந்த கடல்களிலும் பரவியிருப்பவராய் உள்ளார். | |
நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார் தாமே; நேரிழையை ஒரு பாகம் வைத்தார் தாமே; பூண்டு அரவைப் புலித்தோல் மேல் ஆர்த்தார் தாமே; பொன் நிறத்த வெள்ளச்சடையார் தாமே; ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார் தாமே; அங்கு அங்கே சிவம் ஆகி நின்றார் தாமே; பாண்டவரில் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
|
9
|
பழனநகர் எம்பிரானார் திருமாலுக்கு அடியினைக் காணமுடியாத தீப் பிழம்பின் வடிவில் காட்சி வழங்கியவராய், பார்வதி பாகராய், புலித்தோல் மீது பாம்பினை இறுகக் கட்டி இடையில் அணிபவராய், செஞ்சடையில் கங்கை வெள்ளத்தைத் தேக்கியவராய், ஏழு உலகங்களையும் படைத்து ஆள்பவராய், பல இடங்களிலும் சிவமாகிக் காட்சி வழங்குபவராய், பாண்டவரில் அருச்சுனனுக்கு இரங்கிப் படைகள் வழங்கி அருள்புரிந்தவராய் உள்ளார். | |
விடை ஏறி, வேண்டு உலகத்து இருப்பார் தாமே; விரிகதிரோன் சோற்றுத் துறையார் தாமே; புடை சூழ் தேவர் குழாத்தார் தாமே; பூந்துருத்தி, நெய்த்தானம், மேயார் தாமே; அடைவே புனல் சூழ் ஐயாற்றார் தாமே; அரக்கனையும் ஆற்றல் அழித்தார் தாமே; படையாப் பல்பூதம் உடையார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
|
10
|
பழன நகர் எம்பிரானார் காளையை இவர்ந்து தாம் விரும்பிய உலகத்து இருப்பவராய்ச் சூரியன் வழிபடும் சோற்றுத் துறையில் உறைபவராய்த் தேவர் கூட்டத்தால் நாற்பக்கமும் சூழப் பெற்றவராய்ப் பூந்துருத்தியையும் நெய்த்தானத்தையும் விரும்பியவராய், அடுத்துப் புனல்சூழும் திருவையாற்றை உகந்தருளி உறைபவராய், இராவணனுடைய ஆற்றலை அழித்தவராய்ப் பூதங்களைப் படையாக உடையவராய் உள்ளார். | |
| Go to top |