உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட;
விரித்திட்டார்; உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித்
தரித்திட்டார்; சிறிது போது; தரிக்கிலர் ஆகித் தாமும்
சிரித்திட்டார்; எயிறு தோன்ற;-திருப் பயற்றூரனாரே.
|
1
|
திருப்பயற்றூர்ப் பெருமானார் குருதிவெள்ளம் ஆறாக ஓட யானையின் தோலை உரித்துத் தம் திருமேனியில் விரித்துப் போர்த்தார் . யானைத்தோலை உரித்ததனையும் போர்த்ததனையும் கண்டு பார்வதிதேவியார் அஞ்சித்தம் விரல்களைப் பலகாலும் உதறி வருந்தியதனைக் கண்டு , சிறிதுநேரம் அத்தோலைப் போர்த்தியபின் அவ்வாறு தொடர்ந்து போர்த்தும் ஆற்றல் இல்லாதவரைப் போலக் காட்சி வழங்கித் தாமும் பற்கள்தோன்றச் சிரித்துவிட்டார் . | |
உவந்திட்டு அங்கு உமை ஓர் பாகம் வைத்தவர்; ஊழி ஊழி
பவர்ந்திட்ட பரமனார் தாம் மலைச்சிலை நாகம் ஏற்றி,
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி,
சிவந்திட்ட கண்ணர் போலும்-திருப் பயற்றூரனாரே.
|
2
|
திருப்பயற்றூரனார் பல ஊழிகளையும் படைத்த பெருமானாராய் , விரும்பிப் பார்வதிபாகராய் , மலையை வில்லாகக் கொண்டு , பாம்பை அதற்கு நாணாகக் கட்டி , உலகங்களில் பலரையும் சென்று பற்றி வருத்திய மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு , வெகுண்டு சிவந்த கண்களையுடையவர் . | |
நங்களுக்கு அருளது என்று நால்மறை ஓதுவார்கள்
தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன்; தழலன்; தன்னை;
எங்களுக்கு அருள்செய்! என்ன நின்றவன்; நாகம் அஞ்சும்
திங்களுக்கு அருளிச் செய்தார்-திருப் பயற்றூரனாரே.
|
3
|
திருப்பயற்றூரனார் நமக்கு அருள்கிட்டும் என்று நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்களுக்கு அவ்வாறே அருள் செய்யும் உண்மைப் பொருளாய்த் தீ நிறத்தவராய் எங்களுக்கு அருள் செய்வீராக என்று எல்லா உயிர்களும் வேண்டித் தொழுமாறு அழியாது நின்ற முதல்வராய்ப் பாம்பினை அஞ்சும் பிறைமதிக்கு அஞ்சவேண்டாதவாறு அருள் செய்துள்ளார் . | |
பார்த்தனுக்கு அருளும் வைத்தார்; பாம்பு அரை ஆட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார்; சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார்; கோள் அரா, மதியம், நல்ல
தீர்த்தமும், சடைமேல் வைத்தார்-திருப் பயற்றூரனாரே.
|
4
|
திருப்பயற்றூரனார் அருச்சுனனுக்கு அருளி , பாம்பினை இடுப்பில் ஆடுமாறு இறுகக்கட்டி , சாத்தனை மகனாக ஏற்றுக் காளிக்காகச் சாமவேதம் பாடியவாறு கூத்து நிகழ்த்திக் கொடிய பாம்பு , பிறை , கங்கை ஆகிய இவற்றைச் சடையில் அணிந்தவராவார் . | |
மூவகை மூவர்போலும்; முற்று மா நெற்றிக்கண்ணர்
நா வகை நாவர்போலும்; நால்மறை ஞானம் எல்லாம்
ஆ வகை ஆவர்போலும்; ஆதிரைநாளர் போலும்;
தேவர்கள் தேவர் போலும்-திருப் பயற்றூரனாரே.
|
5
|
திருப்பயற்றூரனார் அருவம் அருவுருவம் உருவம் என்ற மூவகைப்பட்ட இலயசிவம் , போகசிவம் , அதிகாரசிவம் என்ற மூவராய் , நிறைந்த நெற்றிக்கண்ணராய் , முறையாக வைகரி முதலான நால்வகை ஒலிகளை வெளிப்படுத்தும் நாவினை உடையவராய் , நான்கு வேதங்கள் சிவாகமம் முதலிய ஞானநூல்கள் என்பவற்றின் வடிவினராய் , திருவாதிரை நாளை உகப்பவராய்த் தேவர்களுக்குத் தலைவராய் விளங்குபவராவார் . | |
| Go to top |
ஞாயிறுஆய், நமனும் ஆகி, வருணனாய், சோமன் ஆகி,
தீ அறா நிருதி வாயுத் திப்பி(ய) ஈசானன் ஆகி,
பேய் அறாக் காட்டில் ஆடும் பிஞ்ஞகன், எந்தை பெம்மான்,
தீ அறாக் கையர் போலும்-திருப் பயற்றூரனாரே.
|
6
|
திருப்பயற்றூரனார் தீ நீங்காத கையினராய் , தீபங்கள் நீங்காத சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவராய் , தலைக்கோலம் அணிந்தவராய் , நமக்குத் தந்தையாராய் , தலைவராய் , ஞாயிறு , சந்திரன்களாகவும் , யமன் , வருணன் , அக்கினி , நிருருதி , வாயு , மேம்பட்ட சாந்த வடிவினனாகிய ஈசானன் ஆகிய எண்திசை காப்போராகவும் உள்ளார் . | |
ஆவி ஆய், அவியும் ஆகி, அருக்கம் ஆய், பெருக்கம் ஆகி,
பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய், பிரமன் ஆகி,
காவி அம் கண்ணள் ஆகிக் கடல்வண்ணம் ஆகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார்- திருப் பயற்றூரனாரே.
|
7
|
திருப்பயற்றூரனார் வேள்வித் தீயின் புகையாய் , வேள்வியில் தேவருக்கு வழங்கப்படும் அவி உணவாய் , நுண் பொருளாய் , மிகப்பெரும் பொருளாய் , தீவினை செய்தவருடைய தீவினைகளை எல்லாம் போக்கும் பெருமானாய் , பிரமனாய் , கருங் குவளைபோன்ற கண்களை உடையளாகிக் கடல் போன்ற நீலநிறம் உடைய பார்வதிபாகராகயும் உள்ளார் . | |
தந்தையாய், தாயும் ஆகி, தரணி ஆய், தரணி உள்ளார்க்கு
எந்தையும் என்ன நின்ற ஏழ் உலகு உடனும் ஆகி,
எந்தை! எம்பிரானே! என்று என்று உள்குவார் உள்ளத்து என்றும்
சிந்தையும் சிவமும் ஆவார்- திருப் பயற்றூரனாரே.
|
8
|
திருப்பயற்றூரனார் , தந்தையாராய்த் தாயாராய் உலகங்களாய் , உலகில் உள்ளார் அனைவருக்கும் தலைவராய் , ஏழு உலகங்களில் உள்ள உயிர்களின் செயற்பாட்டிற்கு உடனாய் நின்று இயக்குபவராய் , ` எந்தையே ! எம்பெருமானே!` என்று தியானிப்பவர்கள் உள்ளத்திலே சிந்தையும் சிந்திக்கப்பெறும் சிவமுமாகி உள்ளவராவார் . | |
புலன்களைப் போக நீக்கி, புந்தியை ஒருங்க வைத்து(வ்)
இனங்களைப் போக நின்று, இரண்டையும் நீக்கி, ஒன்று ஆய்
மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுள் போகம் ஆகிச்
சினங்களைக் களைவர் போலும்-திருப் பயற்றூரனாரே.
|
9
|
திருப்பயற்றூரனார் , சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம் என்ற ஐம்புல நுகர்ச்சிகளையும் அடியோடு போக்கி , உள்ளத்தை ஒருவழிப்பட நிலைநிறுத்தி , மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களையும் கடக்க நான் , தான் என்ற இரண்டையும் நீக்கி அவனேதானே ஆகிய அந்நெறியாளராய் , மாயை , கன்மம் என்ற மலங்களைச் செயற்படாதவாறு செய்ய வல்ல அடியவர் மனத்திலே இன்பவடிவினராய்ச் சினத்தை விளைக்கும் பிறவித் துன்பங்களை நீக்கி நிற்பவராவர் . | |
மூர்த்தி தன் மலையின் மீது போகாதா, முனிந்து நோக்கி,
பார்த்துத் தான் பூமி மேலால் பாய்ந்து, உடன் மலையைப் பற்றி,
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்சத்
தேத்தெத்தா என்னக் கேட்டார்-திருப் பயற்றூரனாரே.
|
10
|
திருப்பயற்றூரனார் , சிவபெருமானுடைய கயிலைமலையைக் கடந்து புட்பகவிமானம் போகாதாக , அச்செய்தியைச் சொல்லிய தேரோட்டியை வெகுண்டுநோக்கி , மனத்தான் நோக்கிப் பூமியில் தேரினின்றும் குதித்து விரைந்து கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்டு இராவணன் அதனைப் பெயர்த்து ஆரவாரம் செய்தபோது மலை நடுங்குதல் கண்டு பார்வதி அஞ்சும் அளவில் அவன் தலைகள் பத்தையும் விரலால் நசுக்கிப் பின் பாடிய தேத்தெத்தா என்ற இசையைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு அருள் செய்பவரானார் . | |
| Go to top |