மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து, அழகு ஆரும்,
கடல் வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர்,
உடல் வரையின் உயிர் வாழ்க்கை ஆய ஒருவன் கழல் ஏத்த,
இடர் தொடரா; வினை ஆன சிந்தும்; இறைவன்(ன்) அருள் ஆமே.
|
1
|
பூ இதழ்களில் அளவற்ற தேன் பெருகுகின்ற சோலைகளும் , வயல்களும் சூழ , மலைபோன்று வரும் அலைகளில் கலந்து முத்துக்களைக் கடல் சொரிகின்ற திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவனும் , உடல் எல்லையில் தங்கும் உயிர் வாழ்வதற்குக் காரணமான உயிராகிய ஒப்பற்றவனுமாகிய சிவபெருமான் திருவடிகளை வணங்கித் துதிக்கத் துன்பங்கள் தொடரமாட்டா . அத்துன்பங்கட்குக் காரணமான , அநுபவித்துக் கழிந்தவை போக எஞ்சியுள்ள வினைகளும் அழிந்துபோகும் . இறைவனின் திருவருட்சக்தி பதியும் பேரின்பம் பெறுவர் . | |
மைவரை போல்-திரையோடு கூடிப் புடையே மலிந்து ஓதம்
கை வரையால் வளர் சங்கம் எங்கும் மிகுக்கும் கலிக்காமூர்,
மெய் வரையான் மகள் பாகன் தன்னை விரும்ப, உடல் வாழும்
ஐவரை ஆசு அறுத்து ஆளும் என்பர்; அதுவும் சரதமே.
|
2
|
மேகம் படியும் மலைபோன்ற அலைகளோடு கூடிவரும் கடல் , கரையின் கண்ணே பருத்த சங்குகளை எங்கும் மிகுதியாகக் குவிக்கும் திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , மலையரசன் மகளான உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டவரான சிவபெருமானை விரும்பி அடைய , அப்பெருமான் நமது உடலில் வாழும் ஐந்து இந்திரியங்களையும் குற்றமறுத்து நம்மை ஆட்கொள்வர் என்று அறிஞர்கள் கூறுவர் . அஃது உண்மையேயாம் . | |
தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த,
காவியின் நேர் விழி மாதர் என்றும் கவின் ஆர் கலிக்காமூர்
மேவிய ஈசனை, எம்பிரானை, விரும்பி வழிபட்டால்,
ஆவியுள் நீங்கலன்-ஆதிமூர்த்தி, அமரர் பெருமானே.
|
3
|
அபிடேகம் செய்யும் பொருட்டுத் தூய நீரையும் , பூசிக்கும் பொருட்டு மலர்களையும் ஏந்தி வந்து இவ்வுலகத்தவர்களும் , நீலோற்பல மலர்போன்ற கண்களை உடைய பெண்களும் வணங்கிப் போற்ற , என்றும் அழகுடன் திகழும் திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , எம் தலைவனான சிவபெருமானை விரும்பி வழிபட்டால் , ஆதிமூர்த்தியும் தேவர்கட்கெல்லாம் தலைவனுமான அப்பெருமான் உயிரினுள் நீங்கலாகாத தன்மையோடு விளங்குவான் . | |
குன்றுகள் போல்-திரை உந்தி, அம் தண் மணி ஆர்தர, மேதி
கன்று உடன் புல்கி, ஆயம் மனை சூழ் கவின் ஆர் கலிக்காமூர்,
என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி
நின்று உணர்வாரை நினையகில்லார், நீசர் நமன் தமரே.
|
4
|
குன்றுகளைப் போன்ற உயர்ந்த கடலலைகள் அழகிய குளிர்ச்சி பொருந்திய முத்துக்களைத் தள்ளிக் கொண்டு வந்து சேர்த்தலும் , எருமைக் கூட்டங்கள் கன்றுகளோடு கூடித் தத்தம் மனைகளைச் சென்று சேர்தலுமுடைய அழகு பொருந்திய திருக்கலிக்காமூர் என்ற திருத்தலத்தில் ஊழிக்காலத்திலும் வீற்றிருந்தருளும் எந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி நின்று வழிபடுகின்ற அடியவர்களை நினையாதவர்கள் கீழ்மக்கள் ஆவர் . அவர்கள் இயமனது சுற்றத்தாரும் ஆவர் . | |
வான் இடை வாள்மதி மாடம் தீண்ட, மருங்கே கடல் ஓதம்
கான் இடை நீழலில் கண்டல் வாழும் கழி சூழ் கலிக்காமூர்,
ஆன் இடை ஐந்து உகந்து ஆடினானை அமரர் தொழுது ஏத்த,
நான் அடைவு ஆம் வணம் அன்பு தந்த நலமே
நினைவோமே.
|
5
|
வானத்தில் ஒளிரும் சந்திரனைத் தொடுமளவு உயர்ந்த மாடங்களும் , பக்கங்களில் கடலலைகள் மோதச் சோலைகளில் நிழலில் செழித்து வளரும் தாழைகளும் கொண்டு உப்பங் கழிகள் சூழ்தலுமுடையது திருக்கலிக்காமூர் . இத்திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவரும் , பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச கவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படுகின்றவரும் ஆய சிவபெரு மானைத் தேவர்கள் தொழுது போற்ற அவர்கள் அடையாத நலன்களை அடியேன் அடையும் வண்ணம் அன்புடன் அவன் அருள்புரிந்த சிறப்பினை என்றும் நினைந்து போற்றுவோமாக ! | |
| Go to top |
துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலி தென்றல்
கறை வளரும் கடல் ஓதம் என்றும் கலிக்கும் கலிக்காமூர்,
மறை வளரும் பொருள் ஆயினானை மனத்தால் நினைந்து ஏத்த,
நிறை வளரும் புகழ் எய்தும்; வாதை நினையா; வினை போமே.
|
6
|
கடற்கரையில் வளர்ந்துள்ள தாழையின் பூவின் நறுமணத்தைக் கவர்ந்து வீசுகின்ற தென்றலோடு , மிக்க கருநிறமுடைய கடலலைகள் எக்காலத்தும் ஒலிக்கின்ற திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , நால்வேதங்களின் உட் பொருளாக விளங்கும் சிவபெருமானை மனத்தால் நினைந்து போற்ற எக்காலத்தும் அழியாத புகழ் வந்து சேரும் . துன்பம் வந்து சேர நினையாது . அத்துன்பத்திற்குக் காரணமான வினைகளும் நீங்கும் . | |
கோல நல் மேனியின் மாதர் மைந்தர் கொணர் மங்கலியத்தில்,
காலமும் பொய்க்கினும், தாம் வழுவாது இயற்றும் கலிக்காமூர்,
ஞாலமும், தீ, வளி, ஞாயிறு, ஆய நம்பன் கழல் ஏத்தி,
ஓலம் இடாதவர் ஊழி என்றும் உணர்வைத் துறந்தாரே.
|
7
|
அழகிய நல்ல மேனியுடைய மகளிரும் , ஆடவரும் , காலமழை பொய்த்தாலும் , பூசைக்குரிய மங்கலப் பொருள்களை வழுவாது கொண்டுவந்து சேர்த்துப் பூசை நடத்தும் சிறப்புடையது திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலமாகும் . அங்கு வீற்றிருந்தருளுகின்ற நிலம் , நீர் , தீ , காற்று , ஆகாயம் , ஞாயிறு , திங்கள் ஆன்மா என்னும் அட்டமூர்த்தமாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி , உள்ளம் உருகி ஓலமிடாதவர்கள் ஊழிக்காலம் வரை வாழ்ந்தாலும் சிவஞானம் கைவரப் பெறாதவர் ஆவர் . | |
ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு
கார் அரவக்கடல் சூழ வாழும் பதி ஆம் கலிக்காமூர்,
தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்சத் திருந்து வரை பேர்த்தான்
ஆர் அரவம் பட வைத்த பாதம் உடையான் இடம் ஆமே.
|
8
|
ஊருகின்ற பாம்பைத் தலையிலுள்ள நீண்ட முடியில் அணிந்து , ஒலிக்கின்ற நீரையுடைய இவ்வுலகம் முழுமையும் ஆண்டு , கறுத்த ஆரவாரமுடைய கடல்சூழச் சிவபெருமான் வீற்றிருந்தருளும்பதி திருக்கலிக்காமூர் என்பதாம் . அது தேர் போன்ற அகன்ற அல்குலையுடைய உமாதேவி அஞ்சும்படி திருக்கயிலை மலையைப் பெயர்த்த இராவணன் அதன்கீழ் நசுக்குண்டு அலறும்படி தம் திருப்பாத விரலை ஊன்றிய சிவபெருமானுடைய இருப்பிடமாகும் . | |
அரு வரை ஏந்திய மாலும், மற்றை அலர்மேல் உறைவானும்,
இருவரும் அஞ்ச, எரி உரு ஆய் எழுந்தான் கலிக்காமூர்,
ஒரு வரையான் மகள் பாகன் தன்னை உணர்வால்-தொழுது ஏத்த,
திரு மருவும்; சிதைவு இல்லை; செம்மைத் தேசு உண்டு,
அவர்பாலே.
|
9
|
கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கிய திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் ஆகிய இருவரும் அஞ்சும்படி பெருஞ்சோதி வடிவாய் நின்றவரும் , திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்கின்றவரும் , ஒப்பற்ற மலை அரசன் மகளை ஒரு பாகமாக உடையவருமான சிவபெருமானை மெய்யுணர்வால் தொழுது போற்றுபவர்களைச் செல்வம் வந்தடையும் . அவர்கட்கு எவ்விதக் குறைவும் இல்லை . மேலும் அவர்களிடம் செம்மையான சிவஞானம் உண்டாகும் . அச்சிவஞானத்தால் முத்திபெறுவர் என்பது குறிப்பு . | |
மாசு பிறக்கிய மேனியாரும், மருவும் துவர் ஆடை
மீசு பிறக்கிய மெய்யினாரும், அறியார், அவர் தோற்றம்;
காசினி நீர்த்திரள் மண்டி, எங்கும் வளம் ஆர் கலிக்காமூர்
ஈசனை எந்தைபிரானை ஏத்தி, நினைவார் வினை போமே.
|
10
|
நீராடாததால் அழுக்கு உடலையுடைய சமணர்களும் , மஞ்சட் காவியாடையைப் போர்த்திய உடலையுடைய புத்தர்களும் சிவபெருமானது பெருமையை அறியாதவர்கள் . எனவே அவர்களைப் பின்பற்றாது இந்நிலவுலகில் நீர்ப்பெருக்கு எங்கும் நிறைந்து நல்லவளம் பொருந்திய திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எம் தந்தையும் தலைவனுமான சிவபெருமானைப் போற்றித் தியானிப்பவர்களுடைய வினைகள் நில்லாது போம் . | |
| Go to top |
ஆழியுள் நஞ்சு அமுது ஆர உண்டு, அன்று அமரர்க்கு அமுது உண்ண
ஊழிதொறும்(ம்) உளரா அளித்தான், உலகத்து உயர்கின்ற
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழால், கலிக்காமூர்
வாழி எம்மானை வணங்கி ஏத்த, மருவா, பிணிதானே.
|
11
|
பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதமாகத் தாம் உண்டு அன்று தேவர்கட்கு அமுதத்தை அளித்து ஊழிதோறும் நிலைத்திருக்குமாறு அருள்செய்தவர் சிவபெருமான் . இவ்வுலகில் உயர்ச்சியடைகின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பாமாலையால் , திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வாழும் எம் தந்தையாகிய சிவபெருமானை வணங்கிப் போற்ற , அவ்வாறு வணங்குபவர்களை நோய்கள் வந்து அணுகா . | |