சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.072   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருமாகறல் - சாதாரி பவப்ரியா பந்துவராளி காஞ்சனாவதி ராகத்தில் திருமுறை அருள்தரு புவனநாயகியம்மை உடனுறை அருள்மிகு அடைக்கலங்காத்தநாதர் திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=KazBwKsulkI   Add audio link Add Audio

விங்கு விளை கழனி, மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம்,
மங்குலொடு நீள்கொடிகள் மாடம் மலி, நீடு பொழில், மாகறல் உளான்-
கொங்கு விரிகொன்றையொடு, கங்கை, வளர் திங்கள், அணி செஞ்சடையினான்;
செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும், உடனே.

1
நன்றாக இஞ்சி விளையும் வயலில் பணிசெய்யும் பள்ளத்தியர்களின் பாடலும் , ஆடலுமாகிய ஓசை விளங்க , மேகத்தைத் தொடும்படி நீண்ட கொடிகளும் , உயர்ந்த மாடமாளிகைகளும் , அடர்ந்த சோலைகளும் கொண்ட திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான் . நறுமணம் கமழும் கொன்றை மலரும் , கங்கையும் , பிறைச்சந்திரனும் அணிந்த சிவந்த சடையை உடையவனும் , சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபத்தை உடையவனுமான அப்பெருமானின் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களின் தீவினைகள் உடனே தீரும் .

கலையின் ஒலி, மங்கையர்கள் பாடல் ஒலி, ஆடல், கவின் எய்தி, அழகு ஆர்
மலையின் நிகர் மாடம், உயர் நீள்கொடிகள் வீசும் மலி மாகறல் உளான்-
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி, எரிபுன் சடையினுள்
அலை கொள் புனல் ஏந்து பெருமான்-அடியை ஏத்த, வினை அகலும், மிகவே.

2
வேதாகமக் கலைகளைக் கற்பவர்களின் ஒலியும் , பெண்களின் பாடல் , ஆடல் ஒலிகளும் சேர்ந்து இனிமை தர , அழகிய மலையை ஒத்த உயர்ந்த மாட மாளிகைகளில் நீண்ட கொடிகள் அசைய செல்வ வளமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . இலைபோன்ற அமைப்புடைய வேலையும் , கூர்மையான நுனியுடைய சூலத்தையும் , வலக்கையிலே ஏந்தி , நெருப்புப் போன்ற சிவந்த புன்சடையில் அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய அச்சிவபெருமானின் திருவடிகளைப் போற்ற வினை முற்றிலும் நீங்கும் .

காலையொடு துந்துபிகள், சங்கு, குழல், யாழ், முழவு, காமருவு சீர்
மாலை வழிபாடு செய்து, மாதவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான்-
தோலை உடை பேணி, அதன்மேல் ஒர் சுடர் நாகம் அசையா, அழகிதாப்
பாலை அன நீறு புனைவான்-அடியை ஏத்த, வினை பறையும், உடனே.

3
துந்துபி , சங்கு , குழல் , யாழ் , முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க , காலையும் மாலையும் வழிபாடு செய்து முனிவர்கள் போற்றி வணங்க மகிழ்வுடன் சிவபெருமான் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் தோலாடையை விரும்பி அணிந்து , அதன்மேல் ஒளிவிடும் நாகத்தைக் கச்சாகக் கட்டி , அழகுறப் பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசி விளங்குகின்றான் . அவனுடைய திருவடிகளைப் போற்றி வணங்க , உடனே வினையாவும் நீங்கும் .

இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தி, எழில் மெய்யுள் உடனே,
மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி, மகிழ் மாகறல் உளான்-
கொங்கு, வளர் கொன்றை, குளிர்திங்கள், அணி செஞ்சடையினான்-அடியையே
நுங்கள் வினை தீர, மிக ஏத்தி, வழிபாடு நுகரா, எழுமினே!

4
ஒளிர்கின்ற முத்து , பொன் , மணி இவற்றை ஆபரணங்களாக அணியப்பெற்ற பெண்கள் தங்கள் துணைவர்களுடன் நீராடி மகிழ்கின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் நறுமணம் கமழும் கொன்றையையும் , குளிர்ந்த சந்திரனையும் சிவந்த சடையில் அணிந்துள்ளான் . அவனுடைய திருவடிகளை உங்கள் வினைதீர மிகவும் போற்றி வழிபட எழுவீர்களாக .

துஞ்சு நறு நீலம், இருள் நீங்க, ஒளி தோன்றும் மது வார் கழனிவாய்,
மஞ்சு மலி பூம்பொழிலில், மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான்-
வஞ்ச மதயானை உரி போர்த்து மகிழ்வான், ஒர் மழுவாளன், வளரும்
நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன்-அடியாரை நலியா, வினைகளே

5
நறுமணம் கமழும் நீலோற்பல மலர்கள் இருட்டில் இருட்டாய் இருந்து , இருள்நீங்கி விடிந்ததும் நிறம் விளங்கித் தோன்றுகின்றன . நிறையப் பூக்கும் அம்மலர்கள் தேனை வயல்களில் சொரிகின்றன . அருகிலுள்ள , மேகங்கள் படிந்துள்ள பூஞ்சோலைகளில் மயில்கள் நடனமாடுகின்றன . இத்தகைய சிறப்புடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் வஞ்சமுடைய மதயானையின் தோலை உரித்துப் போர்த்து மகிழ்கின்றான் . ஒப்பற்ற மழுப்படையை உடையவன் . நஞ்சையுண்டு மிக இருண்ட கழுத்தையுடையவன் . அத்தலைவனான சிவபெருமானின் அடியார்களை வினைகள் துன்புறுத்தா .
Go to top

மன்னும் மறையோர்களொடு பல்படிம மா தவர்கள் கூடி உடன் ஆய்
இன்ன வகையால் இனிது இறைஞ்சி, இமையோரில் எழு மாகறல் உளான்-
மின்னை விரி புன்சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே
உன்னுமவர், தொல்வினைகள் ஒல்க, உயர் வான் உலகம் ஏறல் எளிதே.

6
என்றும் நிலைத்திருக்கும் வேதங்களை நன்கு கற்ற அந்தணர்களும் , பலவிதத் தவக்கோலங்கள் தாங்கிய முனிவர்களும் கூடி இறைவனை இனிது இறைஞ்சும் தன்மையில் தேவர்களை ஒத்து விளங்குகின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் மின்னல்போல் ஒளிரும் விரிந்த செஞ் சடையின்மேல் மலர்களையும் , கங்கையையும் , பிறைச் சந்திரனையும் அணிந்துள்ளான் . அப்பெருமானை நினைந்து வழிபடுபவர்களின் தொல்வினைகள் நீங்க , உயர் வானுலகை அவர்கள் எளிதில் அடைவர் .

வெய்ய வினை நெறிகள் செல, வந்து அணையும் மேல்வினைகள் வீட்டல் உறுவீர்
மை கொள் விரி கானல், மது வார் கழனி மாகறல் உளான்-எழில் அது ஆர்
கைய கரி கால்வரையின் மேலது உரி-தோல் உடைய மேனி அழகு ஆர்
ஐயன்-அடி சேர்பவரை அஞ்சி அடையா, வினைகள்; அகலும், மிகவே.

7
கொடிய வினைகள் தாம் வந்த வழியே செல்லவும் , இனி இப்பிறவியில் மேலும் ஈட்டுதற்குரிய ஆகாமிய வினைகளை ஒழிக்க வல்லவர்களே ! மேகங்கள் தவழும் ஆற்றங்கரைச் சோலைகளிலுள்ள பூக்களிலிருந்து தேன் ஒழுகும் வயல்களையுடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் யானையின் தோலை உரித்துப் போர்த்த அழகிய திருமேனியுடையவன் . யாவர்க்கும் தலைவனான அப் பெருமானின் திருவடிகளை நினைந்து வழிபடுபவர்களை வினையானது அடைய அஞ்சி அகன்று ஓடும் .

தூசு துகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வன, பொன் மாடமிசையே,
மாசு படு செய்கை மிக, மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான்;
பாசுபத! இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி, அழகு ஆர்
பூசு பொடி ஈசன்! என ஏத்த, வினை நிற்றல் இல, போகும், உடனே.

8
பொன்மயமான மாடங்களின் உச்சியில் கட்டப்பட்டுள்ள வெண்துகிலாலான கொடிகள் கருநிற மேகத்தைத் தொடுகின்ற மாசுபடு செய்கை தவிர வேறு குற்றமில்லாத , பெரிய தவத்தார்கள், வேதங்கள் ஓத விளங்கும் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் பாசுபத கோலத்தை விரும்பி, வரிகளையுடைய விடமுடைய பாம்பைக் கச்சாக அணிந்த அழகுடையவன் . திருவெண்ணீற்றைப் பூசியவன் . அவனைப் போற்றி வழிபட வினையாவும் நில்லாது உடனே விலகிச் செல்லும் .

தூய விரிதாமரைகள், நெய்தல், கழுநீர், குவளை, தோன்ற, மது உண்
பாய வரிவண்டு பலபண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான்-
சாய விரல் ஊன்றிய இராவணன் தன்மை கெட நின்ற பெருமான்-
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே.

9
தூய்மையான தாமரை , நெய்தல் , கழுநீர் , குவளை போன்ற மலர்கள் விரிய , அவற்றிலிருந்து தேனைப் பருகும் வரிகளையுடைய வண்டுகள் பண்ணிசையோடு பாடுதலால் ஏற்படும் ஓசை மிகுந்த திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அவன் தன் காற்பெருவிரலை ஊன்றி இராவணனின் வலிமை கெடுமாறு செய்தவன் . அப்பெருமானின் புகழைப் போற்றி வணங்கும் அடியவர்களின் வினை எளிதில் நீங்கும் .

காலின் நல பைங்கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார்
மாலும் மலரானும், அறியாமை எரி ஆகி, உயர் மாகறல் உளான்-
நாலும் எரி, தோலும் உரி, மா மணிய நாகமொடு கூடி உடன் ஆய்,
ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா, வினைகளே.

10
பைம்பொன்னாலாகிய வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையும் , நீண்ட சடைமுடியையும் காணவேண்டும் என்ற விருப்பமுடன் முயன்ற திருமாலும் , பிரமனும் அறியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்ற சிவபெருமான் திருமாகறலில் வீற்றிருந்தருளுகின்றான் . உடம்பில் நாலிடத்து நெருப்பைக் கொண்டும் , தோலுரித்து மாணிக்கத்தைக் கக்கும் பாம்பணிந்தும் , அசைந்து நடக்கின்ற இடபத்தை வாகனமாகக் கொண்டுள்ள சிவபெருமானின் அடியார்களை வினைகள் அடையா .
Go to top

கடை கொள் நெடுமாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்கோன்-
அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன்-உரையால்,
மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே
உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும், உடனே.

11
வாயில்களையுடைய மிக உயர்ந்த நீண்ட மாடங்களும் , நறுமணம் கமழும் வீதிகளும் உடைய சீகாழியில் வாழ்பவர்கட்குத் தலைவனான திருஞானசம்பந்தன் , சிவபெருமானைச் சேர்தற்குரிய நெறிமுறைகளால் துதித்து , மடைகளில் தேங்கிய தண்ணீர் ஓடிப் பாய்கின்ற வயல்களும் , நெருங்கிய சோலைகளுமாக நீர்வளமும் , நிலவளமுமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருமாகறல்
3.072   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விங்கு விளை கழனி, மிகு
Tune - சாதாரி   (திருமாகறல் அடைக்கலங்காத்தநாதர் புவனநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000