சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.031   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருமயேந்திரப்பள்ளி - கொல்லி கனகாங்கி நவரோசு கனகாம்பரி ராகத்தில் திருமுறை அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு திருமேனியழகர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=1iE23OOVx2g   Add audio link Add Audio

திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்,
கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும்,
வரைவிலால் எயில் எய்த, மயேந்திரப்பள்
அரவு அரை, அழகனை அடி இணை பணிமினே!

1
கடலலைகள் அடித்துவரும் பவளங்களும் , சிறப்புடைய வைரமும் , கரையிலே ஒதுக்கப்பட்ட அகில் மரங்களும் , கனமான சங்குகளும் நிறைந்த திருமயேந்திரப்பள்ளி என்னும் திருத்தலத்தில் , மேருமலையாகிய வில்லால் , அக்கினிக் கணையாகிய அம்பை எய்து முப்புரங்களை எரியும்படி செய்த , இடையில் பாம்பைக் கச்சாக அணிந்துள்ள அழகனாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக .

கொண்டல் சேர் கோபுரம், கோலம் ஆர் மாளிகை,
கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும்,
வண்டு உலாம் பொழில், அணி மயேந்திரப்பள்
செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணிமினே!

2
மேகத்தைத் தொடும்படி உயர்ந்த கோபுரங்களும் , அழகிய மாளிகைகளும் , நீர்முள்ளியும் , தாழையும் , தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும் , வண்டுகள் உலவுகின்ற சோலைகளுமுடைய அழகிய திருமயேந்திரப் பள்ளியில் வட்டமாக நடைபயிலும் இடபத்தை வாகனமாகக் கொண்ட சிவபெருமானின் , உயிர்களை நன்னெறியில் செலுத்தும் திருவடிகளை வணங்குவீர்களாக .

கோங்கு இள வேங்கையும், கொழு மலர்ப்புன்னையும்,
தாங்கு தேன் கொன்றையும், தகு மலர்க்குரவமும்,
மாங் கரும்பும், வயல் மயேந்திரப்பள்
ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணிமினே!

3
கோங்கு , வேங்கை , செழுமையான மலர்களையுடைய புன்னை , தேன் துளிகளையுடைய கொன்றை , சிறந்த மலர்களை உடைய குரவம் முதலிய மரங்கள் நிறைந்த சோலைகளும் , மாமரங்களும் , கரும்புகள் நிறைந்த வயல்களும் உடைய திருமயேந்திரப்பள்ளியில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளை வணங்குவீர்களாக .

வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகு
சங்கம் ஆர் ஒலி, அகில் தரு புகை கமழ்தரும்
மங்கை ஓர் பங்கினன், மயேந்திரப்பள்
எங்கள் நாயகன் தனது இணை அடி பணிமினே!

4
வாணிகத்தின் பொருட்டு மிக்க நெடுந்தூரம் சென்ற கப்பல்கள் திரும்பிவரும் குறிப்பினை ஊரிலுள்ளவர்கட்கு உணர்த்த ஊதப்படும் சங்குகளின் ஒலியும் , அகிற்கட்டைகளால் தூபம் இடுகின்ற போது உண்டாகும் நறுமணம் கமழும் புகையுமுடைய திருமயேந்திரப் பள்ளியுள் , உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளும் எங்கள் தலைவனான சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக .

நித்திலத் தொகை பல நிரை தரு மலர் எனச்
சித்திரப் புணரி சேர்த்திட, திகழ்ந்து இருந்தவன்,
மைத் திகழ் கண்டன், நல் மயேந்திரப்பள்
கைத்தலம் மழுவனைக் கண்டு, அடி பணிமினே!

5
இறைவனை வழிபடற்கு மலர்களைக் கையால் ஏந்தி வருதல் போல , பல முத்துக்குவியல்களை அழகிய கடலானது அலைகளால் கரையினில் சேர்க்கத் திருமயேந்திரப் பள்ளியுள் வீற்றிருந்தருளும் இறைவனும் , மை போன்று கருநிறம் கொண்ட கழுத்தையுடையவனும் , கையில் மழு என்னும் ஆயுதத்தை ஏந்தியவனுமான சிவபெருமானைத் தரிசித்து அவன் திருவடிகளை வணங்குவீர்களாக .
Go to top

சந்திரன், கதிரவன், தகு புகழ் அயனொடும்,
இந்திரன், வழிபட இருந்த எம் இறையவன்-
மந்திரமறை வளர் மயேந்திரப்பள்
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்மினே!

6
சந்திரன் , சூரியன் , மிகுபுகழ்ப் பிரமன் , இந்திரன் முதலியோர் வழிபட விளங்கும் எம் இறைவனாய் , வேதமந்திரங்கள் சிறப்படைய திருமயேந்திரப் பள்ளியில் வீற்றிருந்தருளும் அழிவில்லாத பேரழகனாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடைவீர்களாக .

சடை முடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடம் நவில் புரிவினன், நறவு அணி மலரொடு
படர்சடை மதியினன், மயேந்திரப்பள்
அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்மினே!

7
சடைமுடியுடைய முனிவர்கள் பூசைத்திரவியங்களைச் சேகரித்து வழிபட , திருமயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளுபவனும் , திருநடனம் செய்பவனும் , தேன் துளிக்கும் வாசனைமிக்க அழகிய மலர்களோடு பரந்து விரிந்த சடையில் சந்திரனைச் சூடியவனும் , வலிமையுடைய எருதினை வாகனமாக உடையவனுமான சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடைவீர்களாக !

சிரம் ஒருபதும் உடைச் செரு வலி அரக்கனைக்
கரம் இருபதும் இறக் கனவரை அடர்த்தவன்,
மரவு அமர் பூம்பொழில் மயேந்திரப்பள்
அரவு அமர் சடையனை அடி பணிந்து உய்ம்மினே!

8
பத்துத் தலைகளையுடைய , போர் செய்யும் வலிமையுடைய அரக்கனான இராவணனின் இருபது கரங்களும் கெடுமாறு , கனத்த கயிலைமலையின் கீழ் அடர்த்த பெருமானாய் , வெண்கடம்ப மரங்கள் நிறைந்த அழகிய சோலை சூழ்ந்த திருமயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளும் பாம்பணிந்த சடைமுடியுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடையுங்கள் .

நாக(அ)ணைத் துயில்பவன், நலம் மிகு மலரவன்,
ஆக(அ)ணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர்;
மாகு அணைந்து அலர்பொழில் மயேந்திரப்பள்
யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்மினே!

9
ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில் துயில்பவனான திருமாலும் , அழகிய தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் இறைவனின் அடிமுடிகளைத் தேட முற்பட்டு , பன்றி உருவெடுத்த திருமால் சிவனின் திருவடிகளை நெருங்கவும் இயலாதவரானார் . ( அன்ன உருவெடுத்த பிரமன் திருமுடியை நெருங்க இயலாதவரானார் என்பதும் குறிப்பு .) ஆகாயமளாவிய பூஞ்சோலைகளையுடைய திருமயேந்திரப் பள்ளியில் யோகமூர்த்தியாய் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை உணர்ந்து தியானித்து நன்மை அடைவீர்களாக !

உடை துறந்தவர்களும், உடை துவர் உடையரும்,
படு பழி உடையவர் பகர்வன விடுமின், நீர்
மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்
இடம் உடை ஈசனை இணை அடி பணிமினே!

10
ஆடையினைத் துறந்தவர்களாகிய சமணர்களும் , மஞ்சள் உடை அணிபவர்களாகிய புத்தர்களும் மிக்க பழிக்கிடமாகக் கூறுவனவற்றைக் கேளாது விடுவீர்களாக . மடையின் மூலம் நீர் பாயும் வளமுடைய வயல்களையுடைய அழகிய மயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக .
Go to top

வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்
நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல்,
நம் பரம் இது என, நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள, உயர் பதி அணைவரே.

11
நறுமணம் கமழும் சோலைகளையுடைய அழகிய திருமயேந்திரப்பள்ளியுள் எவ்வுயிரும் விரும்பும் சிவபெருமானின் வீரக்கழலணிந்த திருவடிகளைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை ` இது நம்முடைய கடமை ` என்ற உறுதியுடன் நாவினால் பாடித் துதிப்பவர்கள் தேவர்கள் எதிர்கொண்டு அழைக்க உயர்ந்த இடத்தினை அடைவார்கள் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருமயேந்திரப்பள்ளி
3.031   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திரை தரு பவளமும், சீர்
Tune - கொல்லி   (திருமயேந்திரப்பள்ளி திருமேனியழகர் வடிவாம்பிகையம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000