சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.020   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருஅழுந்தூர் - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு சவுந்தராம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வேதபுரீசுவரர் திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=9tjZGkpZQUk   Add audio link Add Audio

தொழும் ஆறு வல்லார், துயர் தீர நினைந்து
எழும் ஆறு வல்லார், இசை பாட விம்மி
அழும் ஆறு வல்லார், அழுந்தை மறையோர்
வழிபாடு செய் மா மடம் மன்னினையே.

1
தொழும் வகையிலும், பிறவித்துயர்தீர நினைந்தெழும் வகையிலும், பிறர் இசைபாட விம்மி அழும் வகையிலும் வல்லவராய மறையவர் வழிபாடு செய்ய, `பெருமானே நீ அழுந்தையில் சிறந்துள்ள மடம் எனப்பெயரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்`.

கடல் ஏறிய நஞ்சு அமுதுஉண்டவனே!
உடலே! உயிரே! உணர்வே! எழிலே!
அடல் ஏறு உடையாய்! அழுந்தை மறையோர்
விடலே! தொழ, மா மடம் மேவினையே.

2
`கடலின்கண் எழுந்த நஞ்சை அமுதாக உண்டவனே! உடல், உயிர், உணர்வாக இருப்பவனே! அழகனே! வலிமை பொருந்திய ஆனேற்றை உடையவனே! அழுந்தையில் வாழும் மறையவர் தலைவனே`! எனத்தொழ, `பெருமானே! நீ சிறந்த மடம் எனப் பெயரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்`.

கழிகாடலனே! கனல் ஆடலினாய்!
பழிபாடு இலனே! அவையே பயிலும்
அழிபாடு இலராய், அழுந்தை மறையோர்
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே.

3
`பலரும் வெறுக்கும் சுடுகாட்டில் உறைபவனே! கனலில் நின்று ஆடுபவனே! பிறரால் பழிக்கப்படும் இயல்புகள் இல்லாதவனே`! எனப்பலவாறு உன்புகழையே பலகாலும் சொல்லும் அழிவுபாடற்ற அந்தணர் வழிபாடு செய்யும் அழுந்தை என்னும் தலத்தில், பெருமானே! நீ எழுந்தருளியுள்ளாய்.

வானே! மலையே! என மன் உயிரே!
தானே தொழுவார் தொழு தாள் மணியே!
ஆனே! சிவனே! அழுந்தையவர், எம்
மானே! என, மா மடம் மன்னினையே.

4
அன்பர்கள் `வானே! மலையே!` என்று கூற மன்னிய உயிரே! தாமே வணங்குவார் வணங்குதற்குரிய திருவடிகளை உடைய மணியே! ஆன் (பசு) வடிவாக விளங்குபவனே! சிவனே! அழுந்தை என்னும் பதியில் வாழும் மறையவர் எம் தலைவனே` எனப்போற்றப், `பெருமானே! நீ மடம் எனப் பெயரிய கோயிலுள் விளங்குகின்றாய்`.

அலை ஆர் புனல் சூழ் அழுந்தைப் பெருமான்!
நிலை ஆர் மறியும், நிறை வெண்மழுவும்,
இலைஆர் படையும்(ம்), இவை ஏந்து செல்வ!
நிலையா அது கொள்க என, நீ நினையே!

5
அலைகள் வீசும் ஆறுகள் சூழ்ந்த அழுந்தைப் பதியில் உறையும் பெருமானை அவன் கையில் ஏந்திய நிலையான மான், கையில் ஏந்திய வெண்மையான மழு, இலைவடிவமான சூலம் ஆகியவற்றோடு, உள்ளத்தில் ஏந்துதலே நிலையான செல்வம் எனக் கொள்க. அவனையே நீ நினைக.
Go to top

நறவு ஆர் தலையின் நயவா! உலகில்
பிறவாதவனே! பிணி இல்லவனே!
அறை ஆர் கழலாய்! அழுந்தை மறையோர்
மறவாது எழ, மா மடம் மன்னினையே.

6
அடியவர் கட்டிய மலர்களால் தலையில் தேன் பொருந்திய நயம் உடையவனே! உலகில் பிறவாதவனே! நோயற்றவனே! ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்தவனே! அழுந்தையில் வாழும் மறையவர் மறவாது எழுந்து தொழ, அங்குள்ள சிறந்த மடம் எனப்பெயரிய கோயிலில் உள்ளாய்.

தடுமாறு வல்லாய்! தலைவா! மதியம்
சுடும் ஆறு வல்லாய்! சுடர் ஆர் சடையில்
அடும் ஆறு வல்லாய்! அழுந்தை மறையோர்
நெடு மா நகர் கைதொழ, நின்றனையே.

7
உன்னை உணர்வதில் தடுமாற்றத்தை விளைப்பவனே! தலைவனே! காதல் வயப்பட்ட மகளிரை நீ சூடிய மதியால் சுடும்படி செய்பவனே! ஒளிபொருந்திய சடையின்மேல் உலகை அட வந்த கங்கையாற்றைச் சூடியவனே! அழுந்தையில் மறையவர் கைகளால் தொழ நீண்டுயர்ந்த பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்.

பெரியாய்! சிறியாய்! பிறையாய்! மிடறும்
கரியாய்! கரிகாடு உயர்வீடு உடையாய்!
அரியாய்! எளிவாய்! அழுந்தை மறையோர்
வெரியார் தொழ, மா மடம் மேவினையே.

8
பெரியவனே! நுண்ணியனே! பிறை சூடியவனே! கண்டம் கரியவனே! சுடுகாட்டை உயர்ந்த வீடாகக் கொண்டவனே! அறிதற்கு அரியவனே! அன்பர்க்கு எளியவனே! அழுந்தையில் பழிபாவங்கட்கு அஞ்சும் மறையவர் வணங்க நீ சிறந்த மடம் என்னும் கோயிலில் விளங்குகின்றாய்.

மணி நீள் முடியால் மலையை அரக்கன்
தணியாது எடுத்தான் உடலம் நெரித்த
அணி ஆர் விரலாய்! அழுந்தை மறையோர்
மணி மா மடம் மன்னி இருந்தனையே.

9
மணிகள் இழைத்த நீண்ட மகுடம் சூடியமுடியனாகிய இராவணன் கயிலைமலையைப் பொறுமையின்றி எடுத்தபோது, அவனது உடலை நெரித்த அழகிய கால் விரலை உடையவனே! அழுந்தைப் பதியில் மறையவர் போற்ற அழகிய மடம் என்னும் கோயிலில் நீ நிலையாக எழுந்தருளியுள்ளாய்.

முடி ஆர் சடையாய்! முனம்நாள், இருவர்
நெடியான், மலரான் நிகழ்வால் இவர்கள்
அடி மேல் அறியார்; அழுந்தை மறையோர்
படியால் தொழ, மா மடம் பற்றினையே.

10
சடைமுடியை உடையவனே! முற்காலத்தே திருமால் பிரமன் ஆகிய இருவர் தம்முள் செருக்கி உன் அடிமுடிகளை அறிய முற்பட்டு அறியாதவர் ஆயினர். அழுந்தைப்பதியுள் மறையவர் விதிமுறைப்படி வழிபட வணங்கிப் போற்ற, சிறந்த மடம் எனப் பெயரிய கோயிலில் நீ விளங்குகின்றாய்.
Go to top

அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர்
பெரு ஞானம் உடைப் பெருமான் அவனைத்
திருஞானசம்பந்தன செந்தமிழ்கள்,
உருஞானம் உண்டுஆம், உணர்ந்தார்தமக்கே.

11
எய்தற்கரிய திருவருள் ஞானம் பெற்றவர்களாகிய மறையவர் வணங்கிப் போற்ற அழுந்தைப் பதியில் விளங்கும் பெரிய ஞானமே வடிவாக உடைய பெருமானை, திருஞானசம்பந்தன் போற்றிப் பாடியதான இத்திருப்பதிகத்தை ஓதி உணர்ந்தவர்க்கு உண்மை உணர்வு உண்டாகும்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஅழுந்தூர்
2.020   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தொழும் ஆறு வல்லார், துயர்
Tune - இந்தளம்   (திருஅழுந்தூர் வேதபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000