அறத்தால் உயிர் காவல் அமர்ந்து அருள
மறத்தால் மதில்மூன்றுஉடன் மாண்பு அழித்த
திறத்தால், தெரிவு எய்திய தீ, வெண்திங்கள்,
நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
|
1
|
நெல்லிக்காவுள் விளங்கும் இறைவன், உயிர்களைக் காத்தலாகிய அறத்தை மேற்கொண்டருளி, அறநெறிக்கு மாறாக நடந்த அசுரர்களின் மும்மதில்களின் பெருமைகளை அழித்ததிறத்தால் பலராலும் நன்கறியப்பட்டு வெண்திங்கள் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசிய அழல் போலும் வண்ணனாய் விளங்குபவன். | |
பதிதான் இடுகாடு; பைங்கொன்றை தொங்கல்;
மதிதான் அது சூடிய மைந்தனும் தான்;
விதி தான்; வினை தான்; விழுப்பம் பயக்கும்
நெதி தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
|
2
|
நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன் இடுகாட்டை வாழும் இடமாகவும், கொன்றைமலரைத் தான் விரும்பும் மாலையாகவும் கொண்டவன், மதிசூடிய வீரன். விதியாகவும் வினையாகவும் மேன்மையளிக்கும் நிதியாகவும் விளங்குபவன். | |
நலம்தான் அவன்; நான்முகன்தன் தலையைக்
கலம்தான் அது கொண்ட கபாலியும் தான்;
புலம் தான்; புகழால் எரி விண் புகழும்
நிலம் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
|
3
|
நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன், நன்மைகளைத் தருபவன். நான்முகனின் தலையை உண்கலனாகக் கொண்டு கபாலி எனப்பெயர் பெற்றவன். ஞானமே வடிவமானவன். புகழால் விளங்கும் வானோர் போற்றும் வீட்டுலகாக விளங்குபவன். | |
தலைதானது ஏந்திய தம் அடிகள்
கலைதான் திரி காடுஇடம் நாடுஇடம் ஆம்;
மலைதான் எடுத்தான், மதில்மூன்று உடைய;
நிலை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
|
4
|
நிலையாக நெல்லிக்காவுள் எழுந்தருளிய சிவபெருமான், பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்திய தலைவன், தான் விரும்பும் இடமாக மான்கள் திரியும் காட்டைக் கொண்டவன், முப்புரங்களும் அழிய மேருமலையை வில்லாக எடுத்தவன். | |
தவம் தான்; கதி தான்; மதி வார்சடைமேல்
உவந்தான்; சுறவேந்தன் உரு அழியச்
சிவந்தான்; செயச்செய்து செறுத்து உலகில்
நிவந்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
|
5
|
நெல்லிக்காவுள் விளங்கும் சிவபெருமான், நாம் செய்யத்தக்க தவமாகவும், அடையத்தக்க கதியாகவும் விளங்குபவன். நீண்ட சடைமுடி மீது பிறைமதியை உவந்து சூடியவன். மீனக் கொடியை உடைய மன்மதனைச் சினந்தழித்தவன். உலக மக்கள் செயற்படத்தான் ஐந்தொழில்களைச் செய்து அனைத்தையும் அழித்து வீடருள்பவனாய் உயர்ந்து தோன்றுபவன். | |
| Go to top |
வெறி ஆர் மலர்க்கொன்றைஅம்தார் விரும்பி;
மறி ஆர் மலைமங்கை மகிழ்ந்தவன் தான்;
குறியால் குறி கொண்டவர் போய்க் குறுகும்
நெறியான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
|
6
|
நெல்லிக்காவுள் நிலவும் இறைவன், மணம் கமழும் கொன்றைமாலையை விரும்புபவன். மான்கள் விளையாடும் மலையினிடம் தோன்றிய உமையம்மையை மணங்கொண்டு மகிழ்ந்தவன். குரு ஆனவர் காட்டும் குறியைத் தியானித்து நாம் போய் அடையும் வீட்டுநெறியை உடையவன். | |
பிறைதான் சடைச் சேர்த்திய எந்தைபெம்மான்;
இறை தான்; இறவாக் கயிலைமலையான்;
மறை தான்; புனல், ஒண்மதி, மல்கு சென்னி
நிறை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
|
7
|
நெல்லிக்காவுள் நிலாவிய இறைவன், சடையின் கண் இளம்பிறையை அணிந்து எம் தந்தையாக விளங்கும் பெருமான் சிறிதும் அழிவற்ற கயிலை மலையில் உறைபவன். மறைந்துறையும் கங்கையோடு ஒளி பொருந்திய மதி நிறைந்த சென்னியை உடைய பூரணன். | |
மறைத்தான், பிணி மாது ஒருபாகம்தன்னை;
மிறைத்தான், வரையால், அரக்கன் மிகையைக்
குறைத்தான், சடைமேல் குளிர் கோல்வளையை
நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
|
8
|
நெல்லிக்காவுள் நிலாவிய சிவபெருமான் உமையம்மையை ஒருபாகமாகப் பிணித்துத் தன்னோடு இணைத்துக் கொண்டவன். இராவணன் கயிலை மலைமீது பறந்து சென்ற குற்றத்திற்காக அக்கயிலை மலையைக் கொண்டே வருத்தி அவன் வலிமையைக் குறைத்தவன். குளிர்ந்த திரண்ட வளையல்களை அணிந்த கங்கையைச் சடைமேல் அடக்கியவன். | |
தழல் தாமரையான், வையம் தாயவனும்,
கழல்தான் முடி காணிய, நாண் ஒளிரும்
அழல்தான்; அடியார்க்கு அருள் ஆய்ப் பயக்கும்
நிழல்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
|
9
|
நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன் தழல் போலச் சிவந்த தாமரைமலர் மேல் உறையும் பிரமனும், உலகனைத்தையும் அளந்த திருமாலும் திருவடி திருமுடி ஆகியவற்றைக் காண முயன்று நாண, ஒளிரும் அழல் வடிவாய் நின்றவன். அடியவர்கட்கு அருளைத்தரும் ஒளிவடிவினன். | |
கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை,
என் அத்தா! என, வாங்கி அது உண்ட கண்டன்;
மனத்தால் சமண்சாக்கியர் மாண்பு அழிய
நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
|
10
|
நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன், மேகங்களால் உண்ணப்படும் அலைகளோடு கூடிய பெரிய கடலில் பெருகி எழுந்து அழலை உமிழ்ந்த நஞ்சைக் கண்டு அஞ்சிய தேவர்கள் `என் அத்தனே காப்பாற்று` என வேண்ட, அந்நஞ்சினை எடுத்து வரச்செய்து அதனை வாங்கி உண்ட கண்டத்தினன். சமணபுத்தர்களின் செல்வாக்கு நாட்டில் அழியுமாறு மனத்தால் நினைத்தவன். | |
| Go to top |
புகர் ஏதும் இலாத புத்தேள் உலகின்
நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை,
நகரா நல ஞானசம்பந்தன் சொன்ன,
பகர்வார் அவர் பாவம் இலாதவரே.
|
11
|
குற்றமற்ற தேவர்கள் உலகில் யாவரும் தனக்கு ஒப்பாகாதவனாய் விளங்கி, இம்மண்ணுலகை வாழ்விக்க நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவனைப் பற்றி அழிவற்ற நன்மைகளைக் கொண்ட ஞானசம்பந்தன் அருளிய இப்பாமாலையைப்பாடித் தொழுபவர் பாவம் அற்றவர் ஆவர். | |