சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.119   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கள்ளில் - வியாழக்குறிஞ்சி தீரசங்கராபரணம் செளராஷ்டிரம் கவுடாமல்ஹார் ராகத்தில் திருமுறை அருள்தரு ஆனந்தவல்லியம்மை உடனுறை அருள்மிகு சிவானந்தேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=4AdIJafuRmY   Add audio link Add Audio

முள்ளின் மேல் முது கூகை முரலும் சோலை,
வெள்ளில் மேல் விடு கூறைக்கொடி விளைந்த
கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளும்! மேல் உயர்வு எய்தல் ஒருதலையே.

1
முள்ளுடைய மரங்களின்மேல் இருந்து முதிய கூகைகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்ததும் விளமரங்களின்மேல் படர்ந்த கூறைக் கொடிகள் விளைந்து தோன்றுவதுமாய கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளிய சிவபிரான் திருவடிகளை நாள்தோறும் நினைவோமானால் உயர்வெய்துதல் உறுதியாகும்.

ஆடலான், பாடலான், அரவங்கள் பூண்டான்,
ஓடு அலால் கலன் இல்லான்-உறை பதியாக்
காடு அலால் கருதாத கள்ளில் மேயான்;
பாடு எலாம் பெரியோர்கள் பரசுவாரே.

2
ஆடல் பாடல்களில் வல்லவனும் பாம்புகள் பல வற்றை அணிந்தவனும் தலையோட்டையன்றி வேறு உண்கலன் இல்லாதவனும் சுடுகாட்டைத் தவிர வேறோர் இடத்தைத் தனது இடமாகக் கொள்ளாதவனும் ஆகிய சிவபிரான் பெரியோர்கள் அருகிலிருந்து அவன் புகழைப் பரவக்கள்ளில் என்னும் தலத்தைத் தான் உறையும் பதியாகக் கொண்டுள்ளான்.

எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண்
பண் ஆர் நால்மறை பாடும் பரமயோகி,
கண் ஆர் நீறு அணி மார்பன்-கள்ளில் மேயான்,
பெண் ஆண் ஆம் பெருமான், எம் பிஞ்ஞகனே.

3
பகைவர்களாகிய அசுரர்களின் மும்மதில்களை எய்து அழித்தவனும் இமையாத மூன்று கண்களை உடையவனும் இசையமைப்போடு கூடிய நான்மறைகளைப் பாடி மகிழும் மேலான யோகியும் கண்களைக் கவரும் வண்ணம் திருநீறு அணிந்த மார் பினனும் பெண் ஆண் என இருபாலாகக் கருதும் உமைபாகனும் ஆகிய பெருமான் கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

பிறை பெற்ற சடை அண்ணல், பெடைவண்டு ஆலும்
நறை பெற்ற விரிகொன்றைத்தார் நயந்த
கறை பெற்ற மிடற்று அண்ணல் கள்ளில் மேயான்,
நிறை பெற்ற அடியார்கள் நெஞ்சு உள்ளானே.

4
பிறை சூடிய சடையை உடைய அண்ணலும் பெண்வண்டுகளோடு ஆண் வண்டுகள் கூடி ஒலிக்கும் தேன் நிறைந்த விரிந்த கொன்றை மாலையை விரும்பிச் சூடிய விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவனும் மனநிறைவு பெற்ற அடியவர்களின் நெஞ்சங்களில் நிறைந்து நிற்பவனுமாகிய சிவபிரான் கள்ளில் என்னும் இத்தலத்தே எழுந்தருளியுள்ளான்.

விரையாலும் மலராலும் விழுமை குன்றா
உரையாலும் எதிர் கொள்ள, ஊரார், அம் மாக்
கரை ஆர் பொன் புனல் வேலிக் கள்ளில் மேயான்
அரை ஆர் வெண் கோவணத்த அண்ணல் தானே.

5
இடையில் வெண்ணிறமான கோவணத்தை உடுத்த சிவபிரான் மணம் கமழும் ஐவகை மணப் பொருள்களாலும் மலர்களாலும் சீர்மை குன்றாத புகழுரைகளாலும் ஊர் மக்கள் எதிர்கொள்ள அழகியவும் பெரியவுமான கரைகளை உடைய பொன்னி நதியின் கிளையாறு சூழ்ந்துள்ள கள்ளில் என்னும் இத்தலத்தே எழுந்தருளியுள்ளான்.
Go to top

நலன் ஆய பலி கொள்கை நம்பான், நல்ல
வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான்,
கலன் ஆய தலை ஓட்டான்-கள்ளில் மேயான்;
மலன் ஆய தீர்த்து எய்தும், மா தவத்தோர்க்கே.

6
மக்கட்கு நன்மைகள் உண்டாகத் தான் பலியேற்கும் கொள்கையனாகிய நம்பனும் அழகிய வெற்றியைத் தரும் மழு வாள் வேல் ஆகியவற்றில் வல்லவனும் உண்கலனாகிய தலையோட்டை உடையவனும் ஆகிய சிவபிரான் தன்னை எய்தும் மாதவத்தோர்க்கு மும்மலங்களைத் தீர்த்து அருள்பவனாய்க் கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

பொடியார் மெய் பூசினும், புறவின் நறவம்
குடியா ஊர் திரியினும், கூப்பிடினும்,
கடி ஆர் பூம்பொழில்-சோலைக் கள்ளில் மேயான்
அடியார் பண்பு இகழ்வார்கள், ஆதர்களே.

7
மணம் கமழும் அழகிய பொழில்களும் சோலைகளும் சூழந்த கள்ளிலில் எழுந்தருளிய இறைவன் அடியவர்கள் திருநீற்றுப் பொடியை உடலில் பூசினும் சோலைகளில் எடுத்த தேனை உண்டு திரியினும் பலவாறு பிதற்றினும் அவர்கள் மனம் இறைவன் திரு வருளிலேயே அழுந்தியிருக்குமாதலின் அடியவர்களின் குணம் செயல்களை இகழ்பவர்கள் அறியாதவர்களாவர்.

திரு நீலமலர் ஒண்கண் தேவி பாகம்
புரிநூலும் திரு நீறும் புல்கு மார்பில்,
கரு நீலமலர் விம்மு கள்ளில், என்றும்
பெரு நீலமிடற்று அண்ணல் பேணுவதே.

8
அழகிய நீலமலர் போன்ற ஒளி பொருந்திய கண் களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு முப்புரிநூலும் திருநீறும் பொருந்திய மார்பினனாய் விளங்கும் கரியமிடற்று அண்ணலாகிய சிவபிரான் என்றும் விரும்புவது கருநீலமலர்கள் மிகுந்து பூத்துள்ள கள்ளில் என்னும் தலமாகும்.

வரி ஆய மலரானும் வையம் தன்னை
உரிது ஆய அளந்தானும் உள்ளுதற்கு அங்கு
அரியானும் அரிது ஆய கள்ளில் மேயான்,
பெரியான் என்று, அறிவார்கள் பேசுவாரே.

9
சிவந்த வரிகளைக் கொண்ட தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் உலகங்களைத் தனக்கு உரியதாகுமாறு அளந்த திருமாலும் நினைத்தற்கும் அரியவனாய் விளங்கும் பெரியோனாகிய இறைவன் அரியதலமாய் விளங்கும் கள்ளிலில் எழுந்தருளி உள் ளான். அறிந்தவர்கள் அவனையே பெரியோன் எனப் போற்றிப் புகழ்வர்.

ஆச்சியப் பேய்களோடு அமணர் குண்டர்
பேச்சு இவை நெறி அல்ல; பேணுமின்கள்,
மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்
தீச் செய்த சடை அண்ணல் திருந்து அடியே!

10
பரிகசிக்கத்தக்க பேய்கள் போன்றவர்களாகிய அமணர்களும் புத்தர்களும் கூறும் உரைகள் உண்மையான நெறிகளை மக்கட்கு உணர்த்தாதவை. எனவே அவர்தம் உரைகளைக் கேளாது விடுத்து பெருமைக்குரிய வளவயல்கள் நிறைந்த கள்ளிலில் விளங்கும் தீத்திரள் போன்ற சடைமுடியை உடைய சிவபிரானுடைய அழகிய திருவடிகளையே பேணுவீர்களாக.
Go to top

திகை நான்கும் புகழ் காழிச் செல்வம் மல்கு
பகல் போலும் பேர் ஒளியான்-பந்தன்-நல்ல
முகை மேவு முதிர் சடையான் கள்ளில் ஏத்த,
புகழோடும் பேர் இன்பம் புகுதும் அன்றே.

11
நாற்றிசை மக்களாலும் புகழப்பெறும் சீகாழிப்பதியில் செல்வவளம் நிறைந்த பகல் போன்ற பேரொளியினனாகிய ஞானசம்பந்தன் நறுமணம் கமழும் மலர் அரும்புகள் நிறைந்த முதிர்ந்த சடை முடி உடையவனாகிய சிவபிரானது கள்ளிலைப் போற்றிப் பாடிய இத்திருப்பதிகத்தைப் பாடி ஏத்தினால் புகழோடு பேரின்பம் அடையலாம்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கள்ளில்
1.119   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முள்ளின் மேல் முது கூகை
Tune - வியாழக்குறிஞ்சி   (திருக்கள்ளில் சிவானந்தேசுவரர் ஆனந்தவல்லியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000