மாறு இல் அவுணர் அரணம் அவை மாய, ஓர் வெங்கணையால், அன்று, நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில் தேறல் இரும் பொழிலும், திகழ் செங்கயல் பாய் வயலும், சூழ்ந்த ஊறல்; அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே.
|
1
|
தமக்கு ஒப்பாரில்லாத வலிய அவுணர்களின் அரணங்களாக விளங்கிய முப்புரங்களை மறையுமாறு முற்காலத்தில் ஒரு வெங்கணையால் நீறுபடச் செய்தழித்த எங்கள் நிமலன் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள இடம் யாதென வினவில் தேன் நிறைந்த பெரிய பொழில்களும் விளங்கிய செங்கயல்கள் பாயும் வயல்களும் சூழ்ந்துள்ள திருவூறலாகும். அப்பெருமானுடைய ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளை நாம் தியானிப்போம். | |
மத்தமதக்கரியை, மலையான்மகள் அஞ்ச, அன்று, கையால் மெத்த உரித்த எங்கள் விமலன் விரும்பும் இடம் தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து, ஒளிர் நீலம் நாளும் நயனம் ஒத்து அலரும் கழனி திரு ஊறலை உள்குதுமே.
|
2
|
மதம் பொருந்திய பெரிய தலையையுடைய யானையை மலைமகள் அஞ்ச முற்காலத்தில் தன் கைகளால் மெல்ல உரித்த எங்கள் விமலனாகிய சிவபெருமான் விரும்பும் இடம் யாதென வினவில் பூங்கொத்துக்கள் விரிந்துள்ள பொழில்கள் சூழ்ந்ததும் வயல்களில் நாள்தோறும் முளைத்து விளங்கிய நீல மலர்கள் மங்கையரின் கண்களையொத்து மலரும் வயல்வளங்களை உடையதுமான திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக. | |
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட அழகார், நன்றும் கான் அமர் மான்மறிக் கைக் கடவுள், கருதும் இடம் வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து, அழகு ஆர், நம்மை ஊனம் அறுத்த பிரான்-திரு ஊறலை உள்குதுமே.
|
3
|
பன்றிக் கொம்புகளோடு ஆமையோட்டையும் அணிகலனாக அழகுறப் பூண்டு நல்ல காட்டில் வாழும் மான்கன்றைத் தன் கையில் ஏந்தியுள்ள கடவுளாகிய சிவபெருமான் விரும்புமிடம் வானத்தின் கண் உள்ள மதி தோயுமாறு வளர்ந்துள்ள சோலைகளால் அழகுறச் சூழப்பட்டு நமது பிறவிப் பிணியைப் போக்க வல்லவனாய்ச் சிவபிரான் எழுந்தருளிய திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக. | |
நெய் அணி மூஇலைவேல், நிறை வெண்மழுவும், அனலும், அன்று, கை அணி கொள்கையினான் கடவுள் இடம் வினவில் மை அணி கண் மடவார்பலர் வந்து இறைஞ்ச, மன்னி நம்மை உய்யும் வகை புரிந்தான்-திரு ஊறலை உள்குதுமே.
|
4
|
நெய் பூசப்பெற்ற மூவிலை வேல் ஒளிநிறைந்த வெண்மழு அனல் ஆகியவற்றைத் தன் கைகளில் அணியும் கோட்பாட்டினை உடைய கடவுள் விரும்பும் இடம் யாதென வினவுவீராயின் மை பூசப் பெற்ற கண்களையுடைய மடவார் பலர் வந்து வழிபட நிலையாகத் தங்கி நாம் உய்யும் வகையில் எழுந்தருளி அருள் புரியும் திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக. | |
எண்திசையோர் மகிழ, எழில் மாலையும் போனகமும், பண்டு, கண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில் கொண்டல்கள் தங்கு பொழில் குளிர்பொய்கைகள் சூழ்ந்து, நஞ்சை உண்ட பிரான் அமரும் திரு ஊறலை உள்குதுமே.
|
5
|
எட்டுத் திசைகளில் உள்ளாரும் கண்டு மகிழுமாறு தன்னைத் தொழுத சண்டீசர்க்கு அழகிய மாலை உணவு முதலியவற்றை முற்காலத்தே அளித்தருளியவனும் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு தேவர்களைக் காத்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில் மேகங்கள் தங்கும் பொழில்களும் குளிர்ந்த பொய்கைகளும் சூழ்ந்து விளங்கும் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக. | |
| Go to top |
கறுத்த மனத்தினொடும் கடுங்காலன் வந்து எய்துதலும், கலங்கி, மறுக்கு உறும் மாணிக்கு அருள மகிழ்ந்தான் இடம் வினவில் செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று ஒறுத்து, அருள் செய்த பிரான்-திரு ஊறலை உள்குதுமே.
|
6
|
சினம் பொருந்திய மனத்தோடு கூடிய கொடிய காலன் தம் வாழ்நாளைக் கவரவந்து அடைதலைக் கண்டு கலங்கி மயங்கிய மார்க்கண்டேயனுக்கு அருள் புரிந்தவனும் தன்னை மதியாது சினந்து வந்த வாள்வல்ல இராவணனின் தலை தோள் உடல் ஆகியனவற்றை முற்காலத்தில் நெரித்து அருள் செய்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக. | |
நீரின் மிசைத் துயின்றோன் நிறை நான்முகனும் அறியாது, அன்று, தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும் இடம் வினவில் பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச, மகிழ்ந்து, ஆகம் ஊரும் அரவு அசைத்தான்-திரு ஊறலை உள்குதுமே.
|
7
|
கடல்நீரின் மேல் துயில் கொள்வோனாகிய திருமாலும் ஞானத்தினால் நிறைவுபெற்ற நான்முகனும் அறிய முடியாமல் தேடி ஆராயுமாறு நிமிர்ந்து நின்றவனும் மண்ணுலகில் அடியவர் பலரும் வந்து வணங்க மகிழ்ந்து ஊரும் பாம்பினை இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் திருவூறலாகும். அதனை நாமும் உள்குவோமாக. | |
பொன் இயல் சீவரத்தார், புளித் தட்டையர், மோட்டு அமணர்குண்டர், என்னும் இவர்க்கு அருளா ஈசன் இடம் வினவில் தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து, அழகு ஆர், தன்னை உன்ன வினை கெடுப்பான்-திரு ஊறலை உள்குதுமே.
|
8
|
பொன்போன்ற மஞ்சட் காவியுடை அணிந்த புத்தர்கள் புளிப்பேறிய காடியைத் தட்டில் இட்டு உண்பவர்கள் ஆகிய அறியாமையை உடைய சமண் குண்டர்கள் என்னும் இவர்கட்கு அருள் புரியாதவனும் தன்னை நினைவார்களின் வினைகளைக் கெடுப்பவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் வண்டு இனங்கள் தென்னென்ற ஓசையோடு செறிந்த பொழில்கள் சூழ்ந்த அழகிய திருவூறலாகும். அதனை நாமும் நினைவோமாக. | |
கோடல் இரும் புறவில் கொடி மாடக் கொச்சையர்மன், மெச்ச ஓடுபுனல் சடைமேல் கரந்தான் திரு ஊறல், நாடல் அரும்புகழான் மிகு ஞானசம்பந்தன், சொன்ன நல்ல பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே.
|
9
|
செங்காந்தட் செடிகள் நிறைந்த பெரிய புதர்கள் விளங்குவதும் கொடிகள் கட்டிய மாட வீடுகளைக் கொண்டதுமான கொச்சையம்பதிக்குத் தலைவனும் பெருகிவரும் கங்கையைச் சடைமிசைக் கரந்தவனுமாகிய சிவபிரானது திருவூறலைப் பற்றி நாடற் கரிய புகழால் மிக்க ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் பரலோகத்திருப்பர். | |