சிவய.திருக்கூட்டம்
sivaya.org

Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.016   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்புள்ளமங்கை - நட்டபாடை சலநாட்டை கம்பீரநாட்டை ராகத்தில் திருமுறை அருள்தரு பால்வளைநாயகியம்மை (எ) பல்வளைநாயகியம்மை உடனுறை அருள்மிகு பசுபதிநாயகர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=e9qTgiAxCns   Add audio link Add Audio

பால் உந்து உறு திரள் ஆயின பரமன், பிரமன் தான்
போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புள மங்கை,
காலன் திறல் அறச் சாடிய கடவுள் இடம் கருதில்,
ஆலந்துறை தொழுவார் தமை அடையா, வினை தானே.

1
பாலினின்று மிதந்து வரும் வெண்ணெய்த் திரள் போல்பவரும் காலனது வலிமை முழுவதையும் அழித்தவரும் வேதப்புலமையில் நான்முகன் போன்ற அந்தணர் வாழும் பொழில்கள் சூழ்ந்த திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் விளங்கும் ஆலந்துறைக் கோயிலில் உள்ள இறைவனை நினைந்து வழிபடுபவர்களை வினைகள் அடையா.

மலையான் மகள் கணவன், மலி கடல் சூழ்தரு தன்மைப்
புலை ஆயின களைவான், இடம் பொழில் சூழ் புளமங்கை,
கலையால் மலி மறையோர் அவர் கருதித் தொழுது ஏத்த,
அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே.

2
இமவான் மகளாகிய பார்வதி தேவியின் கணவனும் நீர் நிறைந்த கடல் சூழ்ந்த குளிர்ந்த இவ்வுலகில் உடலோடு பிறக்கும் பிறப்பைக் களைபவனும் ஆகிய சிவபெருமானது இடம் கலைகள் பலவற்றை அறிந்த அறிவால் நிறைந்த மறையவர்கள் மனத்தால் கருதிக் காயத்தால் தொழுது வாயால் ஏத்தி வழிபடுவதும் பொழில் சூழ்ந்ததும் அலைகளோடு கூடி நீர்பெருகி வரும் காவிரிக் கரையிலுள்ளதாகிய திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் விளங்கும் ஆலந்துறை என்னும் கோயில் இதுவேயாகும்.

கறை ஆர் மிடறு உடையான், கமழ் கொன்றைச் சடை முடி மேல்
பொறை ஆர் தரு கங்கைப்புனல் உடையான், புளமங்கைச்
சிறை ஆர்தரு களி வண்டு அறை பொழில் சூழ் திரு ஆலந்
துறையான் அவன், நறை ஆர் கழல் தொழுமின், துதி செய்தே!

3
விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவனும் மணம் கமழும் கொன்றை மலர் அணிந்த சடைமுடியின்மீது சுமையாக அமைந்த கங்கையாற்றை அணிந்தவனுமாய சிவபிரானுக்குரியது சிறகுகளுடன் கூடிய மதுவுண்ட வண்டுகள் ஒலிக்கும் பொழில்களால் சூழப்பட்ட திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் உள்ளது ஆலந்துறை என்னும் கோயிலாகும். அக்கோயிலுக்குச் சென்று அப்பெருமானது திருவடிகளைத் துதி செய்து தொழுவீராக.

தணி ஆர் மதி அரவின்னொடு வைத்தான் இடம் மொய்த்து, எம்
பணி ஆயவன் அடியார் தொழுது ஏத்தும் புளமங்கை,
மணி ஆர்தரு கனகம் அவை வயிரத்திரளோடும்
அணி ஆர் மணல் அணை காவிரி ஆலந்துறை அதுவே.

4
தண்ணிய பிறைமதியைப் பாம்போடு முடிமிசை வைத்துள்ள சிவபெருமானது இடம் அடியவர்கள் எமது தொண்டுகளுக்குரியவன் எனத் தொழுது ஏத்துவதும் மணிகளோடு கூடிய பொன்னை வயிரக்குவைகளோடும் அழகிய மணலோடும் கொணர்ந்து சேர்க்கும் காவிரியின் தென்கரையிலுள்ளதுமான திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் அமைந்துள்ள ஆலந்துறைக் கோயில் அதுவேயாகும்.

மெய்த் தன் உறும் வினை தீர் வகை தொழுமின்! செழு மலரின்
கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரிக் கரை மேல்,
பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கை
அத்தன், நமை ஆள்வான், இடம் ஆலந்துறை அதுவே.

5
உயிர் உடலை அடுத்தற்குக் காரணமான வினைகள் நீங்கும் வகையில் பெருமானை நீவிர் வணங்குவீர்களாக. செழுமையான மலர்க் கொத்துக்களை உடைய சந்தனம் அகில் முதலியவற்றைக் கொண்டுவரும் காவிரியாற்றின் கரைமேல் உள்ளதும் பொந்துகளில் ஆந்தைகள் பல தங்கிப் பாடுவதும் ஆகிய திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் அமைந்துள்ள ஆலந்துறைக் கோயிலை உறைவிடமாகக் கொண்ட தலைவனாகிய சிவபெருமான் நம்மை ஆள்வான்.
Go to top

மன் ஆனவன், உலகிற்கு ஒரு மழை ஆனவன், பிழை இல்
பொன் ஆனவன், முதல் ஆனவன், பொழில் சூழ் புளமங்கை
என் ஆனவன், இசை ஆனவன், இள ஞாயிறின் சோதி
அன்னான் அவன், உறையும் இடம் ஆலந்துறை அதுவே.

6
உலகிற்குத் தான் ஒருவனே மன்னனாய் விளங்குபவனும் மழையாய்ப் பயிர்களை விளைவிப்பவனும் குற்றமற்ற பொன்னானவனும் உயிர்களுக்கு வாழ்முதலாக உள்ளவனும் எனக்குத் தலைவனாய் இசை வடிவாக விளங்குபவனும் இள ஞாயிற்றின் ஒளியைப் போன்ற ஒளியினனுமாகிய சிவபெருமான் உறையும் இடம் திருப்புள்ளமங்கையில் விளங்கும் ஆலந்துறைக் கோயில் அதுவாகும்.

முடி ஆர் தரு சடைமேல் முளை இள வெண்மதி சூடி,
பொடி ஆடிய திருமேனியர், பொழில் சூழ் புளமங்கை,
கடி ஆர் மலர் புனல் கொண்டு தன் கழலே தொழுது ஏத்தும்
அடியார் தமக்கு இனியான், இடம் ஆலந்துறை அதுவே.

7
தலைமேல் விளங்கும் சடைமிசைமுளை போன்ற இளம்பிறையைச் சூடி வெள்ளிய திருநீறு அணிந்த திருமேனியனாய் மணம் கமழும் மலர்களையும் நீரையும் கொண்டு தன் திருவடிகளை வணங்கி ஏத்தும் அடியார்களுக்கு இனியனாய் விளங்கும் சிவபெருமான் விரும்பி உறையும் இடம் பொழில் சூழ்ந்த திருப்புள்ளமங்கை என்ற தலத்தில் உள்ள ஆலந்துறைக் கோயில் அதுவேயாகும்.

இலங்கை மனன் முடி தோள் இற, எழில் ஆர் திருவிரலால்
விலங்கல் இடை அடர்த்தான் இடம் வேதம் பயின்று ஏத்தி,
புலன்கள் தமை வென்றார் புகழவர் வாழ் புளமங்கை,
அலங்கல் மலி சடையான் இடம் ஆலந்துறை அதுவே.

8
இலங்கை மன்னனாகிய இராவணனின் தலைகளும் தோள்களும் நெரிய எழுச்சி பொருந்திய அழகிய கால்விரலால் கயிலை மலையிடை அகப்படுத்தி அவனை அடர்த்த சிவபெருமானது இடம் வேதங்களை முறையாகக் கற்றறிந்து ஓதித் துதித்தலோடு புலன்களை வென்ற புகழுடைய அந்தணர் வாழ்வதும் மாலை அணிந்த சடைமுடி உடைய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாயிருப்பதும் ஆகிய திருப்புள்ளமங்கைத் தலத்தில் விளங்கும் ஆலந்துறைக் கோயில் அதுவேயாகும்.

செறி ஆர்தரு வெள்ளைத் திரு நீற்றின் திருமுண்டப்
பொறி ஆர்தரு புரிநூல் வரை மார்பன் புளமங்கை,
வெறி ஆர்தரு கமலத்து அயன் மாலும், தனை நாடி
அறியா வகை நின்றான் இடம் ஆலந்துறை அதுவே.

9
வெண்மையான திருநீறு மூன்று பட்டைகளாய்ச் செறிய உத்தமஇலக்கணம் ஆகிய மூன்று வரிபொருந்திய முப்புரிநூல் அணிந்த மலை போன்ற திண்ணிய மார்பினை உடையவனும் மணம் கமழும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகன் திருமால் ஆகியோர் தன்னைத் தேடி அறியாவகை ஓங்கி நின்றவனுமாகிய சிவபெருமானுக்கு உரியஇடம் திருப்புள்ளமங்கைத் தலத்தில் உள்ள ஆலந்துறைக் கோயில் அதுவாகும்.

நீதி அறியாத அமண்கையரொடு மண்டைப்
போதியவர் ஓது உரை கொள்ளார் புளமங்கை
ஆதி அவர் கோயில் திரு ஆலந்துறை தொழுமின்!
சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே.

10
நீதி அறியாத அமணராகிய கீழ் மக்களும் பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்திப்போதிமரத்தடியில் உறையும் புத்தமதத்தினரும் கூறும் உரைகளை மெய்ம்மை எனக்கொள்ளாமல் திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் எல்லாப் பொருள்கட்கும் ஆதியானவனாகிய இறைவனை ஆலந்துறைக் கோயிலில் சென்று தொழுதால் பல்வேறு பிரிவினராகிய தேவர்கள் தொழும் தன்மையைப் பெறலாம்.
Go to top

பொந்தின் இடைத் தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை
அம் தண்புனல் வரு காவிரி ஆலந்துறை அரனைக்
கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன்
சந்தம் மலி பாடல் சொலி, ஆட, தவம் ஆமே.

11
மரப்பொந்துகளில் தேனீக்கள் சேகரித்த தேன் மிகுதியான அளவில் கிடைக்கும் பொழில்கள் சூழ்ந்த அழகிய தண்மையான நீரைக்கொணர்ந்துதரும் காவிரித்தென்கரையில் விளங்கும் திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் உள்ள ஆலந்துறைக் கோயிலில் உறையும் இறைவனை மணம் நிறைந்து கமழும் காழிப்பதியில் தோன்றிய கலை நலம் உடைய ஞானசம்பந்தன் பாடிய சந்தம் நிறைந்த இத்திருப்பதிகப் பாடல்களை ஓதிப்பரவசமாய் ஆடத் தவம் கைகூடும்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்புள்ளமங்கை
1.016   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பால் உந்து உறு திரள்
Tune - நட்டபாடை   (திருப்புள்ளமங்கை பசுபதிநாயகர் பால்வளைநாயகியம்மை (எ) பல்வளைநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000