சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.021   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருஆக்கூர் - திருத்தாண்டகம் அருள்தரு கட்கநேத்திராம்பிகை உடனுறை அருள்மிகு சுயம்புநாதவீசுவரர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=-laIR4Oo2Sg   Add audio link Add Audio

முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும்
மூவுலகுந் தாமாகி நின்றார் போலும்
கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலும்
கல்லலகு பாணி பயின்றார் போலும்
கொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர்
குற்றேவல் தாம்மகிழ்ந்த குழகர் போலும்
அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

1

ஓதிற் றொருநூலு மில்லை போலும்
உணரப் படாததொன் றில்லை போலும்
காதிற் குழையிலங்கப் பெய்தார் போலுங்
கவலைப் பிறப்பிடும்பை காப்பார் போலும்
வேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும்
விடஞ்சூழ்ந் திருண்ட மிடற்றார் போலும்
ஆதிக் களவாகி நின்றார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

2

மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும்
மணிநீல கண்ட முடையார் போலும்
நெய்யார் திரிசூலங் கையார் போலும்
நீறேறு தோளெட் டுடையார் போலும்
வையார் மழுவாட் படையார் போலும்
வளர்ஞாயி றன்ன வொளியார் போலும்
ஐவாய் அரவமொன் றார்த்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

3

வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும்
வஞ்சக் கருங்கடல்நஞ் சுண்டார் போலும்
பொடிவிளங்கு முந்நூல்சேர் மார்பர் போலும்
பூங்கங்கை தோய்ந்த சடையார் போலும்
கடிவிளங்கு கொன்றையந் தாரார் போலும்
கட்டங்கம் ஏந்திய கையார் போலும்
அடிவிளங்கு செம்பொற் கழலார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

4

ஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழ
இடுவெண் தலைகலனா ஏந்தி நாளும்
மேகாசங் கட்டழித்த வெள்ளி மாலை
புனலார் சடைமுடிமேற் புனைந்தார் போலும்
மாகாச மாயவெண் ணீருந் தீயும்
மதியும் மதிபிறந்த விண்ணும் மண்ணும்
ஆகாச மென்றிவையு மானார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

5
Go to top

மாதூரும் வாள்நெடுங்கண் செவ்வாய் மென்தோள்
மலைமகளை மார்பத் தணைத்தார் போலும்
மூதூர் முதுதிரைக ளானார் போலும்
முதலும் இறுதியு மில்லார் போலும்
தீதூர நல்வினையாய் நின்றார் போலுந்
திசையெட்டுந் தாமேயாஞ் செல்வர் போலும்
ஆதிரை நாளா வமர்ந்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6

மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்
மான்தோ லுடையா மகிழ்ந்தார் போலும்
கோலானைக் கோவழலாற் காய்ந்தார் போலும்
குழவிப் பிறைசடைமேல் வைத்தார் போலும்
காலனைக் காலாற் கடந்தார் போலுங்
கயிலாயந் தம்மிடமாக் கொண்டார் போலும்
ஆலானைந் தாடல் உகப்பார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

7

கண்ணார்ந்த நெற்றி யுடையார் போலுங்
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும்
உண்ணா அருநஞ்ச முண்டார் போலும்
ஊழித்தீ யன்ன வொளியார் போலும்
எண்ணா யிரங்கோடி பேரார் போலும்
ஏறேறிச் செல்லும் இறைவர் போலும்
அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

8

கடியார் தளிர்கலந்த கொன்றை மாலை
கதிர்போது தாதணிந்த கண்ணி போலும்
நெடியான் சதுர்முகனு நேட நின்ற
நீலநற் கண்டத் திறையார் போலும்
படியேல் அழல்வண்ணஞ் செம்பொன் மேனி
மணிவண்ணந் தம்வண்ண மாவார் போலும்
அடியார் புகலிடம தானார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

9

திரையானுஞ் செந்தா மரைமே லானுந்
தேர்ந்தவர்கள் தாந்தேடிக் காணார் நாணும்
புரையா னெனப்படுவார் தாமே போலும்
போரேறு தாமேறிச் செல்வார் போலும்
கரையா வரைவில்லே நாகம் நாணாக்
காலத் தீயன்ன கனலார் போலும்
வரையார் மதிலெய்த வண்ணர் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

10
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஆக்கூர்
2.042   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அக்கு இருந்த ஆரமும், ஆடு
Tune - சீகாமரம்   (திருஆக்கூர் சுயம்புநாதேசுவரர் கட்கநேத்திரவம்மை)
6.021   திருநாவுக்கரசர்   தேவாரம்   முடித் தாமரை அணிந்த மூர்த்தி
Tune - திருத்தாண்டகம்   (திருஆக்கூர் சுயம்புநாதவீசுவரர் கட்கநேத்திராம்பிகை)

This page was last modified on Thu, 13 Aug 2026 07:11:09 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group