காலைநன்மாமலர் கொண்டடிபரவிக் கைதொழுமாணியைக் கறுத்தவெங்காலன்
ஓலமதிடமுன் னுயிரொடுமாள வுதைத்தவனுமையவள் விருப்பனெம்பெருமான்
மாலைவந்தணுக வோதம்வந்துலவி மறிதிரைசங்கொடு பவளமுனுந்தி
வேலைவந்தணையுஞ் சோலைகள்சூழ்ந்த வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. |
1
|
பெண்ணினைப்பாக மமர்ந்துசெஞ்சடைமேற் பிறையொடுமரவினை யணிந்தழகாகப்
பண்ணினைப்பாடி யாடிமுன்பலிகொள் பரமரெம்மடிகளார் பரிசுகள்பேணி
மண்ணினைமூடி வான்முகடேறி மறிதிரைகடன்முகந் தெடுப்பமற்றுயர்ந்து
விண்ணளவோங்கி வந்திழிகோயில் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. |
2
|
ஓரியல்பில்லா வுருவமதாகி யொண்டிறல்வேடன துருவதுகொண்டு
காரிகைகாணத் தனஞ்சயன்றன்னைக் கறுத்தவற்களித்துடன் காதல்செய்பெருமான்
நேரிசையாக வறுபதமுரன்று நிரைமலர்த்தாதுகண் மூசவிண்டுதிர்ந்து
வேரிகளெங்கும் விம்மியசோலை வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. |
3
|
வண்டணைகொன்றை வன்னியுமத்த மருவியகூவிள மெருக்கொடுமிக்க
கொண்டணிசடையர் விடையினர்பூதங் கொடுகொட்டிகுடமுழாக் கூடியுமுழவப்
பண்டிகழ்வாகப்பாடியொர்வேதம் பயில்வர்முன்பாய்புனற் கங்கையைச்சடைமேல்
வெண்பிறைசூடி யுமையவளோடும் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. |
4
|
சடையினர்மேனி நீறதுபூசித் தக்கைகொள்பொக்கண மிட்டுடனாகக்
கடைதொறும்வந்து பலியதுகொண்டு கண்டவர்மனமவை கவர்ந்தழகாகப்
படையதுவேந்திப் பைங்கயற்கண்ணி யுமையவள்பாகமு மமர்ந்தருள்செய்து
விடையொடுபூதஞ் சூழ்தரச்சென்று வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. |
5
|
| Go to top |
கரைபொருகடலிற் றிரையதுமோதக் கங்குல்வந்தேறிய சங்கமுமிப்பி
உரையுடைமுத்த மணலிடைவைகி யோங்குவானிருளறத் துரப்பவெண்டிசையும்
புரைமலிவேதம் போற்றுபூசுரர்கள் புரிந்தவர் நலங்கொளா குதியினினிறைந்த
விரைமலிதூபம் விசும்பினைமறைக்கும் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. |
6
|
வல்லிநுண்ணிடையா ளுமையவடன்னை மறுகிடவருமத களிற்றினைமயங்க
ஒல்லையிற்பிடித்தங் குரித்தவள்வெருவல் கெடுத்தவர்விரிபொழின் மிகுதிருவாலில்
நல்லறமுரைத்து ஞானமோடிருப்ப நலிந்திடலுற்று வந்தவக்கருப்பு
வில்லியைப்பொடிபட விழித்தவர்விரும்பி வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. |
7
|
பாங்கிலாவரக்கன் கயிலையன்றெடுப்பப் பலதலைமுடியொடு தோளவைநெரிய
ஓங்கியவிரலா லூன்றியன்றவற்கே யொளிதிகழ்வாளது கொடுத்தழகாய
கோங்கொடுசெருந்தி கூவிளமத்தங் கொன்றையுங்குலாவிய செஞ்சடைச்செல்வர்
வேங்கைபொன்மலரார் விரைதருகோயில் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. |
8
|
ஆறுடைச்சடையெம் மடிகளைக்காண வரியொடுபிரமனு மளப்பதற்காகிச்
சேறிடைத்திகழ்வா னத்திடைபுக்குஞ் செலவறத்தவிர்ந்தனரெழிலுடைத்திகழ்வெண்
ணீறுடைக்கோல மேனியர்நெற்றிக் கண்ணினர்விண்ணவர் கைதொழுதேத்த
வேறெமையாள விரும்பியவிகிர்தர் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. |
9
|
பாடுடைக்குண்டர் சாக்கியர்சமணர் பயிறருமறவுரை விட்டழகாக
ஏடுடைமலராள் பொருட்டுவன்றக்க னெல்லையில்வேள்வியைத்தகர்த்தருள்செய்து
காடிடைக்கடிநாய் கலந்துடன்சூழக் கண்டவர்வெருவுற விளித்துவெய்தாய
வேடுடைக்கோலம் விரும்பியவிகிர்தர் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. |
10
|
| Go to top |
விண்ணியல்விமானம் விரும்பியபெருமான் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரை
நண்ணியநூலன் ஞானசம்பந்த னவின்றவிவ்வாய்மொழி நலமிகுபத்தும்
பண்ணியல்பாகப் பத்திமையாலே பாடியுமாடியும் பயிலவல்லோர்கள்
விண்ணவர்விமானங் கொடுவரவேறி வியனுலகாண்டுவீற் றிருப்பவர்தாமே. |
11
|