சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

திருமுறை போற்றி

திருநாவுக்கரசர் தேவாரம் 6 -ஆம் திருமுறை திருவதிகை வீரட்டானம் பதிகம் 6.005
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -ஆம் திருமுறை திருவாரூர் பதிகம் 6.032
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -ஆம் திருமுறை திருக்கயிலாயம் பதிகம் 6.055
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -ஆம் திருமுறை திருக்கயிலாயம் பதிகம் 6.056
மாணிக்க வாசகர் திருவாசகம் 8 -ஆம் திருமுறை 8.1 திருவாசகம்
மாணிக்க வாசகர் திருவாசகம் 8 -ஆம் திருமுறை 8.105.07 காருணியத்து இரங்கல்
மாணிக்க வாசகர் திருவாசகம் 8 -ஆம் திருமுறை 8.4 போற்றித் திருவகவல் -
11.030 11 -ஆம் திருமுறை பாடல் # 10 பட்டினத்துப் பிள்ளையார் திருவொற்றியூர் ஒருபா ஒருபது
12.010 12 -ஆம் திருமுறை பாடல் # 1 சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
12.030 12 -ஆம் திருமுறை பாடல் # 32 சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
12.130 12 -ஆம் திருமுறை பாடல் # 20 சேக்கிழார் இலை மலிந்த சருக்கம்

திருநாவுக்கரசர் தேவாரம் 6 -ஆம் திருமுறை திருவதிகை வீரட்டானம் பதிகம் 6.005

எல்லாம் சிவன் என்ன நின்றாய், போற்றி!
எரிசுடர் ஆய் நின்ற இறைவா, போற்றி!
கொல் ஆர் மழுவாள்படையாய், போற்றி!
கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய், போற்றி!
கல்லாதார் காட்சிக்கு அரியாய், போற்றி!
கற்றார் இடும்பை களைவாய், போற்றி!
வில்லால் வியன் அரணம் எய்தாய், போற்றி!
வீரட்டம் காதல் விமலா, போற்றி!. [ 1]

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா, போற்றி!
பல் ஊழி ஆய படைத்தாய், போற்றி!
ஓட்டு அகத்தே ஊணா உகந்தாய், போற்றி!
உள்குவார் உள்ளத்து உறைவாய், போற்றி!
காட்டு அகத்தே ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
கார்மேகம் அன்ன மிடற்றாய், போற்றி!
ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!. [ 2]

முல்லை அம் கண்ணி முடியாய், போற்றி!
முழுநீறு பூசிய மூர்த்தி, போற்றி!
எல்லை நிறைந்த குணத்தாய், போற்றி!
ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய், போற்றி!
சில்லை சிரைத்தலையில் ஊணா, போற்றி!
சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய், போற்றி!
தில்லைச் சிற்றம்பலம் மேயாய், போற்றி!
திரு வீரட்டானத்து எம் செல்வா, போற்றி!. [ 3]

சாம்பர் அகலத்து அணிந்தாய், போற்றி!
தவநெறிகள் சாதித்து நின்றாய், போற்றி!
கூம்பித் தொழுவார் தம் குற்றேவ(ல்)லைக்
குறிக்கொண்டு இருக்கும் குழகா, போற்றி!
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து
உடன் வைத்த பண்பா, போற்றி!
ஆம்பல்மலர் கொண்டு அணிந்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!. [ 4]

நீறு ஏறு நீலமிடற்றாய், போற்றி!
நிழல் திகழும் வெண்மழுவாள் வைத்தாய், போற்றி!
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய், போற்றி!
கோள் அரவம் ஆட்டும் குழகா, போற்றி!
ஆறு ஏறு சென்னி உடையாய், போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
ஏறு ஏற என்றும் உகப்பாய், போற்றி!
இருங் கெடில வீரட்டத்து எந்தாய், போற்றி!. [ 5]

பாடுவார் பாடல் உகப்பாய், போற்றி!
பழையாற்றுப் பட்டீச்சுரத்தாய், போற்றி!
வீடுவார் வீடு அருள வல்லாய், போற்றி!
வேழத்து உரி வெருவப் போர்த்தாய், போற்றி!
நாடுவார் நாடற்கு அரியாய், போற்றி!
நாகம் அரைக்கு அசைத்த நம்பா, போற்றி!
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!. [ 6]

மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
மால்கடலும் மால்விசும்பும் ஆனாய், போற்றி!
விண் துளங்க மும்மதிலும் எய்தாய், போற்றி!
வேழத்து உரி மூடும் விகிர்தா, போற்றி!
பண் துளங்கப் பாடல் பயின்றாய், போற்றி!
பார் முழுதும் ஆய பரமா, போற்றி!
கண் துளங்கக் காமனை முன் காய்ந்தாய், போற்றி!
கார்க் கெடிலம் கொண்ட கபாலீ, போற்றி!. [ 7]

வெஞ்சின வெள் ஏறு ஊர்தி உடையாய், போற்றி!
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய், போற்றி!
துஞ்சாப் பலிதேரும் தோன்றால், போற்றி!
தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி!
நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா, போற்றி!
நால்மறையோடு ஆறு அங்கம் ஆனாய், போற்றி!
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!. [ 8]

சிந்தை ஆய் நின்ற சிவனே, போற்றி!
சீபர்ப்பதம் சிந்தைசெய்தாய், போற்றி!
புந்தி ஆய்ப் புண்டரிகத்து உள்ளாய், போற்றி!
புண்ணியனே, போற்றி! புனிதா, போற்றி!
சந்திஆய் நின்ற சதுரா, போற்றி!
தத்துவனே, போற்றி! என் தாதாய், போற்றி!
அந்தி ஆய் நின்ற அரனே, போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!. [ 9]

முக்கணா, போற்றி! முதல்வா, போற்றி!
முருகவேள்தன்னைப் பயந்தாய், போற்றி!
தக்கணா, போற்றி! தருமா, போற்றி!
தத்துவனே, போற்றி! என் தாதாய் போற்றி!
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப,
துளங்காது எரிசுடர் ஆய் நின்றாய், போற்றி!
எக்கண்ணும் கண் இலேன்; எந்தாய், போற்றி!
எறி செடில வீரட்டத்து ஈசா, போற்றி!. [ 10]
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -ஆம் திருமுறை திருவாரூர் பதிகம் 6.032

கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
கழல் அடைந்தார் செல்லும் கதியே, போற்றி!
அற்றவர்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய், போற்றி!
மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா, போற்றி!
வானவர்கள் போற்றும் மருந்தே, போற்றி!
செற்றவர் தம் புரம் எரித்த சிவனே,
போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!. [ 1]

வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய், போற்றி!
மதயானை ஈர் உரிவை போர்த்தாய், போற்றி!
கொங்கு அலரும் நறுங்கொன்றைத் தாராய், போற்றி!
கொல் புலித் தோல் ஆடைக் குழகா, போற்றி!
அங்கணனே, அமரர்கள் தம் இறைவா, போற்றி!
ஆலமர நீழல் அறம் சொன்னாய், போற்றி!
செங்கனகத் தனிக் குன்றே, சிவனே, போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!. [ 2]

மலையான் மடந்தை மணாளா, போற்றி!
மழவிடையாய்! நின் பாதம் போற்றி போற்றி!
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய், போற்றி!
நெற்றிமேல் ஒற்றைக் கண் உடையாய், போற்றி!
இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ, போற்றி!
ஏழ்கடலும் ஏழ் பொழிலும் ஆனாய், போற்றி!
சிலையால் அன்று எயில் எரித்த சிவனே, போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!. [ 3]

பொன் இயலும் மேனியனே, போற்றி போற்றி!
பூதப்படை உடையாய், போற்றி போற்றி!
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய், போற்றி!
மறி ஏந்து கையானே, போற்றி போற்றி!
உன்னுமவர்க்கு உண்மையனே, போற்றி போற்றி!
உலகுக்கு ஒருவனே, போற்றி போற்றி!
சென்னி மிசை வெண் பிறையாய், போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!. [ 4]

நஞ்சு உடைய கண்டனே, போற்றி போற்றி!
நல்-தவனே, நின் பாதம் போற்றி போற்றி!
வெஞ்சுடரோன் பல் இறுத்த வேந்தே, போற்றி!
வெண்மதி அம் கண்ணி விகிர்தா, போற்றி!
துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய், போற்றி!
தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ, போற்றி!
செஞ்சடையாய், நின் பாதம் போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!. [ 5]

சங்கரனே, நின் பாதம் போற்றி போற்றி!
சதாசிவனே, நின் பாதம் போற்றி போற்றி!
பொங்கு அரவா, நின் பாதம் போற்றி போற்றி!
புண்ணியனே, நின் பாதம் போற்றி போற்றி!
அம் கமலத்து அயனோடு மாலும் காணா
அனல் உருவா, நின் பாதம் போற்றி போற்றி!
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!. [ 6]

வம்பு உலவு கொன்றைச் சடையாய், போற்றி!
வான் பிறையும் வாள் அரவும் வைத்தாய், போற்றி!
கொம்பு அனைய நுண் இடையாள் கூறா, போற்றி!
குரை கழலால் கூற்று உதைத்த கோவே, போற்றி!
நம்புமவர்க்கு அரும்பொருளே, போற்றி போற்றி!
நால்வேதம் ஆறு அங்கம் ஆனாய், போற்றி!
செம்பொனே, மரகதமே, மணியே, போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!. [ 7]

உள்ளம் ஆய் உள்ளத்தே நின்றாய், போற்றி!
உகப்பார் மனத்து என்றும் நீங்காய், போற்றி!
வள்ளலே, போற்றி! மணாளா, போற்றி!
வானவர் கோன் தோள் துணித்த மைந்தா, போற்றி!
வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா, போற்றி!
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய், போற்றி!
தெள்ளு நீர்க் கங்கைச் சடையாய், போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!. [ 8]

பூ ஆர்ந்த சென்னிப் புனிதா, போற்றி!
புத்தேளிர் போற்றும் பொருளே, போற்றி!
தே ஆர்ந்த தேவர்க்கும் தேவே, போற்றி!
திருமாலுக்கு ஆழி அளித்தாய், போற்றி!
சாவாமே காத்து என்னை ஆண்டாய், போற்றி!
சங்கு ஒத்த நீற்று எம் சதுரா, போற்றி!
சே ஆர்ந்த வெல் கொடியாய், போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!. [ 9]

பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய், போற்றி!
பெண் உருவோடு ஆண் உரு ஆய் நின்றாய், போற்றி!
கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய், போற்றி!
காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய், போற்றி!
அருமந்த தேவர்க்கு அரசே, போற்றி!
அன்று அரக்கன் ஐந் நான்கு தோளும், தாளும்,
சிரம், நெரித்த சேவடியாய், போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!. [ 10]
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -ஆம் திருமுறை திருக்கயிலாயம் பதிகம் 6.055

வே(ற்)ற்று ஆகி விண் ஆகி நின்றாய், போற்றி!
மீளாமே ஆள் என்னைக் கொண்டாய், போற்றி!
ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய், போற்றி!
ஓவாத சத்தத்து ஒலியே, போற்றி!
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய், போற்றி!
ஆறு அங்கம் நால்வேதம் ஆனாய், போற்றி!
காற்று ஆகி எங்கும் கலந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 1]

பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி!
பிறவி அறுக்கும் பிரானே, போற்றி!
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய், போற்றி!
மருவி என் சிந்தை புகுந்தாய், போற்றி!
பொய்ச் சார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
கச்சு ஆக நாகம் அசைத்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 2]

மருவார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
மருவி என் சிந்தை புகுந்தாய், போற்றி!
உரு ஆகி என்னைப் படைத்தாய், போற்றி!
உள் ஆவி வாங்கி ஒளித்தாய், போற்றி!
திரு ஆகி நின்ற திறமே, போற்றி!
தேசம் பரவப்படுவாய், போற்றி!
கரு ஆகி ஓடும் முகிலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 3]

வானத்தார் போற்றும் மருந்தே, போற்றி!
வந்து என்தன் சிந்தை புகுந்தாய், போற்றி!
ஊனத்தை நீக்கும் உடலே, போற்றி!
ஓங்கி அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி!
தேன(த்)த்தை வார்த்த தெளிவே, போற்றி!
தேவர்க்கும் தேவனாய் நின்றாய், போற்றி!
கானத் தீ ஆடல் உகந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 4]

ஊர் ஆகி நின்ற உலகே, போற்றி!
ஓங்கி அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி!
பேர் ஆகி எங்கும் பரந்தாய், போற்றி!
பெயராது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
நீர் ஆவி ஆன நிழலே, போற்றி!
நேர்வார் ஒருவரையும் இல்லாய், போற்றி!
கார் ஆகி நின்ற முகிலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 5]

சில் உரு ஆய்ச் சென்று திரண்டாய், போற்றி!
தேவர் அறியாத தேவே, போற்றி!
புல் உயிர்க்கும் பூட்சி புணர்த்தாய், போற்றி!
போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
பல் உயிர் ஆய்ப் பார்தோறும் நின்றாய், போற்றி!
பற்றி உலகை விடாதாய், போற்றி!
கல் உயிர் ஆய் நின்ற கனலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 6]

பண்ணின் இசை ஆகி நின்றாய், போற்றி!
பாவிப்பார் பாவம் அறுப்பாய், போற்றி!
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய், போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
விண்ணும் நிலனும் தீ ஆனாய், போற்றி!
மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய், போற்றி!
கண்ணின் மணி ஆகி நின்றாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 7]

இமையாது உயிராது இருந்தாய், போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
உமை பாகம் ஆகத்து அணைத்தாய், போற்றி!
ஊழி ஏழ் ஆன ஒருவா, போற்றி!
அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய், போற்றி!
ஆதி புராணனாய் நின்றாய், போற்றி!
கமை ஆகி நின்ற கனலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 8]

மூவாய், பிறவாய், இறவாய், போற்றி!
முன்னமே தோன்றி முளைத்தாய், போற்றி!
தேவாதி தேவர் தொழும் தேவே, போற்றி!
சென்று ஏறி எங்கும் பரந்தாய், போற்றி!
ஆவா! அடியேனுக்கு எல்லாம், போற்றி!
அல்லல் நலிய அலந்தேன், போற்றி!
காவாய்! கனகத்திரளே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 9]

நெடிய விசும்போடு கண்ணே, போற்றி!
நீள அகலம் உடையாய், போற்றி!
அடியும் முடியும் இகலி, போற்றி!
அங்கு ஒன்று அறியாமை நின்றாய், போற்றி!
கொடிய வன் கூற்றம் உதைத்தாய், போற்றி!
கோயிலா என் சிந்தை கொண்டாய், போற்றி!
கடிய உருமொடு மின்னே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 10]

உண்ணாது உறங்காது இருந்தாய், போற்றி!
ஓதாதே வேதம் உணர்ந்தாய், போற்றி!
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி!
இறை விரலால் வைத்து உகந்த ஈசா, போற்றி!
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய், போற்றி!
பண்டே என் சிந்தை புகுந்தாய், போற்றி!
கண் ஆய் உலகுக்கு நின்றாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 11]
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -ஆம் திருமுறை திருக்கயிலாயம் பதிகம் 6.056

பொறை உடைய பூமி, நீர், ஆனாய்! போற்றி!
பூதப்படை ஆள் புனிதா, போற்றி!
நிறை உடைய நெஞ்சின் இடையாய், போற்றி!
நீங்காது என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
மறை உடைய வேதம் விரித்தாய், போற்றி!
வானோர் வணங்கப்படுவாய், போற்றி!
கறை உடைய கண்டம் உடையாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 1]

முன்பு ஆகி நின்ற முதலே, போற்றி!
மூவாத மேனி முக்கண்ணா, போற்றி!
அன்பு ஆகி நின்றார்க்கு அணியாய், போற்றி!
ஆறு ஏறு சென்னிச் சடையாய், போற்றி!
என்பு ஆகம் எங்கும் அணிந்தாய், போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
கண் பாவி நின்ற கனலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 2]

மாலை எழுந்த மதியே, போற்றி!
மன்னி என் சிந்தை இருந்தாய், போற்றி!
மேலை வினைகள் அறுப்பாய், போற்றி!
மேல் ஆடு திங்கள் முடியாய், போற்றி!
ஆலைக் கரும்பின் தெளிவே, போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
காலை முளைத்த கதிரே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 3]

உடலின் வினைகள் அறுப்பாய், போற்றி!
ஒள் எரி வீசும் பிரானே, போற்றி!
படரும் சடைமேல் மதியாய், போற்றி!
பல்கணக் கூத்தப்பிரானே, போற்றி!
சுடரில்-திகழ்கின்ற சோதீ, போற்றி!
தோன்றி என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
கடலில் ஒளி ஆய முத்தே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 4]

மை சேர்ந்த கண்டம் உடையாய், போற்றி!
மாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய், போற்றி!
பொய் சேர்ந்த சிந்தை புகாதாய், போற்றி!
போகாது என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
மெய் சேரப் பால்வெண்நீறு ஆடீ, போற்றி!
மிக்கார்கள் ஏத்தும் விளக்கே, போற்றி!
கை சேர் அனல் ஏந்தி ஆடீ, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 5]

ஆறு ஏறு சென்னி முடியாய், போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுது ஆய் நின்றாய், போற்றி!
நீறு ஏறும் மேனி உடையாய், போற்றி!
நீங்காது என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
கூறு ஏறும் அம் கை மழுவா, போற்றி!
கொள்ளும் கிழமை ஏழ் ஆனாய், போற்றி!
காறு ஏறு கண்டம்-மிடற்றாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 6]

அண்டம் ஏழ் அன்று கடந்தாய், போற்றி!
ஆதிபுராணனாய் நின்றாய், போற்றி!
பண்டை வினைகள் அறுப்பாய், போற்றி!
பாரோர் விண் ஏத்தப்படுவாய், போற்றி!
தொண்டர் பரவும் இடத்தாய், போற்றி!
தொழில் நோக்கி ஆளும் சுடரே, போற்றி!
கண்டம் கறுக்கவும் வல்லாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 7]

பெருகி அலைக்கின்ற ஆறே, போற்றி!
பேரா நோய் பேர விடுப்பாய், போற்றி!
உருகி நினைவார் தம் உள்ளாய், போற்றி!
ஊனம் தவிர்க்கும் பிரானே, போற்றி!
அருகி மிளிர்கின்ற பொன்னே, போற்றி!
ஆரும் இகழப்படாதாய், போற்றி!
கருகிப் பொழிந்து ஓடும் நீரே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 8]

செய்ய மலர் மேலான், கண்ணன், போற்றித்
தேடி உணராமை நின்றாய், போற்றி!
பொய்யா நஞ்சு உண்ட பொறையே, போற்றி!
பொருள் ஆக என்னை ஆட்கொண்டாய், போற்றி!
மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய், போற்றி!
மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய், போற்றி!
கை ஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 9]

மேல் வைத்த வானோர் பெருமான், போற்றி!
மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
சீலத்தான் தென் இலங்கை மன்னன் போற்றிச்
சிலை எடுக்க, வாய் அலற வைத்தாய், போற்றி!
கோலத்தால் குறைவு இல்லான் தன்னை, அன்று,
கொடிது ஆகக் காய்ந்த குழகா, போற்றி!
காலத்தால் காலனையும் காய்ந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 10]
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -ஆம் திருமுறை திருக்கயிலாயம் பதிகம் 6.057
Back to Top
பாட்டு ஆன நல்ல தொடையாய், போற்றி!
பரிசை அறியாமை நின்றாய், போற்றி!
சூட்டு ஆன திங்கள் முடியாய், போற்றி!
தூ மாலை மத்தம் அணிந்தாய், போற்றி!
ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய், போற்றி!
அடங்கார் புரம் எரிய நக்காய், போற்றி!
காட்டு ஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 1]

அதிரா வினைகள் அறுப்பாய், போற்றி!
ஆல நிழல் கீழ் அமர்ந்தாய், போற்றி!
சதுரா, சதுரக் குழையாய், போற்றி!
சாம்பர் மெய் பூசும் தலைவா, போற்றி!
எதிரா உலகம் அமைப்பாய், போற்றி!
என்றும் மீளா அருள் செய்வாய், போற்றி!
கதிர் ஆர் கதிருக்கு ஓர் கண்ணே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 2]

செய்யாய், கரியாய், வெளியாய், போற்றி!
செல்லாத செல்வம் உடையாய், போற்றி!
ஐயாய், பெரியாய், சிறியாய், போற்றி!
ஆகாய வண்ண முடியாய், போற்றி!
வெய்யாய், தணியாய், அணியாய், போற்றி!
வேளாத வேள்வி உடையாய், போற்றி!
கை ஆர் தழல் ஆர் விடங்கா, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 3]

ஆட்சி உலகை உடையாய், போற்றி!
அடியார்க்கு அமுது எலாம் ஈவாய், போற்றி!
சூட்சி சிறிதும் இலாதாய், போற்றி!
சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய், போற்றி!
மாட்சி பெரிதும் உடையாய், போற்றி!
மன்னி என் சிந்தை மகிழ்ந்தாய், போற்றி!
காட்சி பெரிதும் அரியாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 4]

மு(ன்)ன்னியா நின்ற முதல்வா, போற்றி!
மூவாத மேனி உடையாய், போற்றி!
என்(னி)னியாய், எந்தை பிரானே, போற்றி!
ஏழ் இன் இசையே உகப்பாய், போற்றி!
மன்னிய மங்கை மணாளா, போற்றி!
மந்திரமும் தந்திரமும் ஆனாய், போற்றி!
கன்னி ஆர் கங்கைத் தலைவா, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 5]

உரியாய், உலகினுக்கு எல்லாம், போற்றி!
உணர்வு என்னும் ஊர்வது உடையாய், போற்றி!
எரி ஆய தெய்வச் சுடரே, போற்றி!
ஏசும் மா முண்டி உடையாய், போற்றி!
அரியாய், அமரர்கட்கு எல்லாம், போற்றி!
அறிவே அடக்கம் உடையாய், போற்றி!
கரியானுக்கு ஆழி அன்று ஈந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 6]

எண் மேலும் எண்ணம் உடையாய், போற்றி!
ஏறு அரிய ஏறும் குணத்தாய், போற்றி!
பண் மேலே பாவித்து இருந்தாய், போற்றி!
பண்ணொடி யாழ் வீணை பயின்றாய், போற்றி!
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய், போற்றி!
மேலார்கள் மேலார்கள் மேலாய், போற்றி!
கண் மேலும் கண் ஒன்று உடையாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 7]

முடி ஆர் சடை மேல் மதியாய், போற்றி!
முழுநீறு சண்ணித்த மூர்த்தி, போற்றி!
துடி ஆர் இடை உமையாள் பங்கா, போற்றி!
சோதித்தார் காணாமை நின்றாய், போற்றி!
அடியார் அடிமை அறிவாய், போற்றி!
அமரர் பதி ஆள வைத்தாய், போற்றி!
கடி ஆர் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 8]

போற்று இசைத்து உன் அடி பரவ நின்றாய், போற்றி!
புண்ணியனே, நண்ணல் அரியாய், போற்றி!
ஏற்று இசைக்கும் வான்மேல் இருந்தாய், போற்றி!
எண்ணாயிரம்-நூறு பெயராய், போற்றி!
நால்-திசைக்கும் விளக்கு ஆய நாதா, போற்றி!
நான்முகற்கும் மாற்கும் அரியாய், போற்றி!
காற்று இசைக்கும் திசைக்கு எல்லாம் வித்தே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!. [ 9]
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம் 8 -ஆம் திருமுறை 8.1 திருவாசகம்

ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

மாணிக்க வாசகர் திருவாசகம் 8 -ஆம் திருமுறை 8.3 திருவண்டப் பகுதி -
நச்சு அரவு ஆட்டிய நம்பன், போற்றி!
பிச்சு எமை ஏற்றிய பெரியோன், போற்றி!
நீற்றொடு தோற்ற வல்லோன், போற்றி
இன்று எனக்கு எளிவந்து, இருந்தனன் போற்றி!
அளிதரும் ஆக்கை செய்தோன், போற்றி!
ஊற்றிருந்து உள்ளம் களிப்போன், போற்றி!

மாணிக்க வாசகர் திருவாசகம் 8 -ஆம் திருமுறை 8.4 போற்றித் திருவகவல் -

கைதர வல்ல கடவுள், போற்றி!
ஆடக மதுரை அரசே, போற்றி! [ 18]

கூடல் இலங்கு குருமணி, போற்றி!
தென் தில்லை மன்றினுள் ஆடி, போற்றி!
இன்று, எனக்கு ஆர் அமுது ஆனாய், போற்றி!
மூவா நான்மறை முதல்வா, போற்றி!
சே ஆர் வெல் கொடிச் சிவனே, போற்றி! [ 19]

மின் ஆர் உருவ விகிர்தா, போற்றி!
கல் நார் உரித்த கனியே, போற்றி!
காவாய், கனகக் குன்றே, போற்றி!
ஆ! ஆ! என் தனக்கு அருளாய், போற்றி!
படைப்பாய், காப்பாய், துடைப்பாய், போற்றி! [ 20]
இடரைக் களையும் எந்தாய், போற்றி!
ஈச, போற்றி! இறைவ, போற்றி!
தேசப் பளிங்கின் திரளே, போற்றி!
அரைசே, போற்றி! அமுதே, போற்றி!
விரை சேர் சரண விகிர்தா, போற்றி! [ 21]

வேதி, போற்றி! விமலா, போற்றி!
ஆதி, போற்றி! அறிவே, போற்றி!
கதியே, போற்றி! கனியே, போற்றி!
நதி சேர் செம் சடை நம்பா, போற்றி!
உடையாய், போற்றி! உணர்வே, போற்றி! [ 22]

கடையேன் அடிமை கண்டாய், போற்றி!
ஐயா, போற்றி! அணுவே, போற்றி!
சைவா, போற்றி! தலைவா, போற்றி!
குறியே, போற்றி! குணமே, போற்றி!
நெறியே, போற்றி! நினைவே, போற்றி! [ 23]

வானோர்க்கு அரிய மருந்தே, போற்றி!
ஏனோர்க்கு எளிய இறைவா, போற்றி!
மூ ஏழ் சுற்றமும் முரண் உறு நரகிடை
ஆழாமே அருள் அரசே, போற்றி!
தோழா, போற்றி! துணைவா, போற்றி! [ 24]


வாழ்வே, போற்றி! என் வைப்பே, போற்றி!
முத்தா போற்றி! முதல்வா, போற்றி!
அத்தா, போற்றி! அரனே, போற்றி!
உரை, உணர்வு, இறந்த ஒருவ, போற்றி!
விரி கடல் உலகின் விளைவே, போற்றி! [ 25]

அருமையில் எளிய அழகே, போற்றி!
கரு முகில் ஆகிய கண்ணே, போற்றி!
மன்னிய திருஅருள் மலையே, போற்றி!
என்னையும் ஒருவன் ஆக்கி, இரும் கழல்
சென்னியில் வைத்த சேவக, போற்றி! [ 26]

தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி!
அழிவு இலா ஆனந்த வாரி, போற்றி!
அழிவதும், ஆவதும், கடந்தாய், போற்றி!
முழுவதும் இறந்த முதல்வா, போற்றி!
மான் நேர் நோக்கி மணாளா, போற்றி! [ 27]

வானகத்து அமரர் தாயே, போற்றி!
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி!
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! [ 28]


வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!
அளிபவர் உள்ளத்து அமுதே, போற்றி!
கனவிலும் தேவர்க்கு அரியாய், போற்றி!
நனவிலும் நாயேற்கு அருளினை, போற்றி!
இடைமருது உறையும் எந்தாய், போற்றி! [ 29]

சடையிடைக் கங்கை தரித்தாய், போற்றி!
ஆரூர் அமர்ந்த அரசே, போற்றி!
சீர் ஆர் திருவையாறா, போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா, போற்றி!
கண் ஆர் அமுதக் கடலே, போற்றி! [ 30]

ஏகம்பத்து உறை எந்தாய், போற்றி!
பாகம் பெண் உரு ஆனாய், போற்றி!
பராய்த்துறை மேவிய பரனே, போற்றி!
சிராப்பள்ளி மேவிய சிவனே, போற்றி!
மற்று ஓர் பற்று இங்கு அறியேன், போற்றி! [ 31]

குற்றாலத்து எம் கூத்தா, போற்றி!
கோகழி மேவிய கோவே, போற்றி!
ஈங்கோய்மலை எம் எந்தாய், போற்றி!
பாங்கு ஆர் பழனத்து அழகா, போற்றி!
கடம்பூர் மேவிய விடங்கா, போற்றி! [ 32]


அடைந்தவர்க்கு அருளும் அப்பா, போற்றி!
இத்தி தன்னின் கீழ், இரு மூவர்க்கு,
அத்திக்கு, அருளிய அரசே, போற்றி!
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி! [ 33]

ஏனக் குருளைக்கு அருளினை, போற்றி!
மானக் கயிலை மலையாய், போற்றி!
அருளிட வேண்டும் அம்மான், போற்றி!
இருள் கெட அருளும் இறைவா, போற்றி!
தளர்ந்தேன், அடியேன், தமியேன், போற்றி! [ 34]

களம் கொளக் கருத அருளாய், போற்றி!
அஞ்சேல்' என்று இங்கு அருளாய், போற்றி!
நஞ்சே அமுதா நயந்தாய், போற்றி!
அத்தா, போற்றி! ஐயா, போற்றி!
நித்தா, போற்றி! நிமலா, போற்றி! [ 35]

பத்தா, போற்றி! பவனே, போற்றி!
பெரியாய், போற்றி! பிரானே, போற்றி!
அரியாய், போற்றி! அமலா, போற்றி!
மறையோர் கோல நெறியே, போற்றி!
முறையோ? தரியேன்! முதல்வா, போற்றி! [ 36]


உறவே, போற்றி! உயிரே, போற்றி!
சிறவே, போற்றி! சிவமே, போற்றி!
மஞ்சா, போற்றி! மணாளா, போற்றி!
பஞ்சு ஏர் அடியாள் பங்கா, போற்றி!
அலந்தேன், நாயேன், அடியேன், போற்றி! [ 37]

இலங்கு சுடர் எம் ஈசா, போற்றி!
கவைத்தலை மேவிய கண்ணே, போற்றி!
குவைப்பதி மலைந்த கோவே, போற்றி!
மலை நாடு உடைய மன்னே, போற்றி!
கலை ஆர் அரிகேசரியாய், போற்றி! [ 38]

திருக்கழுக்குன்றில் செல்வா, போற்றி!
பொருப்பு அமர் பூவணத்து அரனே, போற்றி!
அருவமும், உருவமும், ஆனாய், போற்றி!
மருவிய கருணை மலையே, போற்றி!
துரியமும் இறந்த சுடரே, போற்றி! [ 39]

தெரிவு அரிது ஆகிய தெளிவே, போற்றி
தோளா முத்தச் சுடரே, போற்றி!
ஆள் ஆனவர்கட்கு அன்பா, போற்றி!
ஆரா அமுதே, அருளே, போற்றி!
பேர் ஆயிரம் உடைப் பெம்மான், போற்றி! [ 40]


தாளி அறுகின் தாராய், போற்றி!
நீள் ஒளி ஆகிய நிருத்தா, போற்றி!
சந்தனச் சாந்தின் சுந்தர, போற்றி!
சிந்தனைக்கு அரிய சிவமே, போற்றி!
மந்திர மா மலை மேயாய், போற்றி! [ 41]

எம் தமை உய்யக் கொள்வாய், போற்றி!
புலி முலை புல்வாய்க்கு அருளினை, போற்றி!
அலை கடல் மீமிசை நடந்தாய், போற்றி!
கருங்குருவிக்கு அன்று அருளினை, போற்றி!
இரும் புலன் புலர இசைந்தனை, போற்றி! [ 42]

படி உறப் பயின்ற பாவக, போற்றி!
அடியொடு, நடு, ஈறு, ஆனாய், போற்றி!
நரகொடு, சுவர்க்கம், நால் நிலம், புகாமல்,
பர கதி பாண்டியற்கு அருளினை, போற்றி!
ஒழிவு அற நிறைந்த ஒருவ, போற்றி! [ 43]

செழு மலர்ச் சிவபுரத்து அரசே, போற்றி!
கழுநீர் மாலைக் கடவுள், போற்றி!
தொழுவார் மையல் துணிப்பாய், போற்றி!
பிழைப்பு, வாய்ப்பு, ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொல் மாலை கொண்டருள், போற்றி! [ 44]


புரம் பல எரித்த புராண, போற்றி!
பரம் பரம் சோதிப் பரனே, போற்றி!
போற்றி! போற்றி! புயங்கப் பெருமான்!
போற்றி! போற்றி! புராண காரண!
போற்றி! போற்றி! சய, சய, போற்றி! [ 45]

Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம் 8 -ஆம் திருமுறை 8.105.07 காருணியத்து இரங்கல்

தரிக்கிலேன் காய வாழ்க்கை; சங்கரா, போற்றி! வான
விருத்தனே, போற்றி! எங்கள் விடலையே, போற்றி! ஒப்பு இல்
ஒருத்தனே, போற்றி! உம்பர் தம்பிரான், போற்றி! தில்லை
நிருத்தனே, போற்றி! எங்கள் நின்மலா, போற்றி! போற்றி! [ 61]

போற்றி! ஓம் நமச்சிவாய! புயங்கனே, மயங்குகின்றேன்;
போற்றி! ஓம் நமச்சிவாய! புகல் இடம் பிறிது ஒன்று இல்லை;
போற்றி! ஓம் நமச்சிவாய! புறம் எனைப் போக்கல், கண்டாய்;
போற்றி! ஓம் நமச்சிவாய! சய! சய! போற்றி! போற்றி! [ 62]

போற்றி! என் போலும் பொய்யர் தம்மை ஆட்கொள்ளும் வள்ளல்
போற்றி! நின் பாதம் போற்றி! நாதனே, போற்றி! போற்றி!
போற்றி! நின் கருணை வெள்ளப் புது மது; புவனம், நீர், தீ,
காற்று, இயமானன், வானம், இரு சுடர், கடவுளானே! [ 63]

கடவுளே போற்றி! என்னைக் கண்டுகொண்டு, அருளு, போற்றி!
விட, உளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும், போற்றி!
உடல் இது களைந்திட்டு, ஒல்லை உம்பர் தந்து அருளு, போற்றி!
சடையுளே கங்கை வைத்த சங்கரா, போற்றி! போற்றி! [ 64]

சங்கரா, போற்றி! மற்று ஓர் சரண் இலேன்; போற்றி! கோலப்
பொங்கு அரா அல்குல், செவ் வாய், வெள் நகை, கரிய வாள் கண்,
மங்கை ஓர் பங்க, போற்றி! மால் விடை ஊர்தி, போற்றி!
இங்கு, இவ் வாழ்வு ஆற்றகில்லேன்; எம்பிரான்! இழித்திட்டேனே. [ 65]

இழித்தனன் என்னை யானே; எம்பிரான், போற்றி! போற்றி!
பழித்திலேன் உன்னை; என்னை ஆளுடைப் பாதம் போற்றி!
பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை; போற்றி!
ஒழித்திடு இவ் வாழ்வு; போற்றி! உம்பர் நாட்டு எம்பிரானே! [ 66]

எம்பிரான், போற்றி! வானத்தவர் அவர் ஏறு, போற்றி!
கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற, வெள் நீற, போற்றி!
செம் பிரான், போற்றி! தில்லைத் திருச்சிற்றம்பலவ, போற்றி!
உம்பராய், போற்றி! என்னை ஆளுடை ஒருவ, போற்றி! [ 67]

ஒருவனே போற்றி! ஒப்பு இல் அப்பனே, போற்றி! வானோர்
குருவனே, போற்றி! எங்கள் கோமளக் கொழுந்து, போற்றி!
வருக' என்று, என்னை நின்பால் வாங்கிட வேண்டும், போற்றி!
தருக நின் பாதம், போற்றி! தமியனேன் தனிமை தீர்த்தே. [ 68]

தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப, போற்றி!
பேர்ந்தும், என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை, போற்றி!
வார்ந்த நஞ்சு அயின்று, வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல், போற்றி!
ஆர்ந்த நின் பாதம், நாயேற்கு அருளிட வேண்டும், போற்றி! [ 69]

போற்றி! இப் புவனம், நீர், தீ, காலொடு, வானம் ஆனாய்;
போற்றி! எவ் உயிர்க்கும் தோற்றம் ஆகி, நீ, தோற்றம் இல்லாய்;
போற்றி! எல்லா உயிர்க்கும் ஈறு ஆய், ஈறு இன்மை ஆனாய்;
போற்றி! ஐம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கையானே. [ 70]

மாணிக்க வாசகர் திருவாசகம் 8 -ஆம் திருமுறை 8.105.10 திருச்சதகம்
உடைய நாதனே, போற்றி! நின் அலால் பற்று, மற்று எனக்கு ஆவது ஒன்று இனி
உடையனோ? பணி; போற்றி! உம்பரார் தம் பரா பரா, போற்றி! யாரினும்
கடையன் ஆயினேன்; போற்றி! என் பெரும் கருணையாளனே, போற்றி! என்னை, நின்
அடியன் ஆக்கினாய்; போற்றி! ஆதியும், அந்தம், ஆயினாய், போற்றி! அப்பனே!

பாட வேண்டும் நான்; போற்றி! நின்னையே பாடி, நைந்து நைந்து உருகி, நெக்கு நெக்கு,
ஆட வேண்டும் நான்; போற்றி! அம்பலத்து ஆடும் நின் கழல் போது, நாயினேன்
கூட வேண்டும் நான்; போற்றி! இப் புழுக் கூடு நீக்கு எனை; போற்றி! பொய் எலாம்
வீட வேண்டும் நான்; போற்றி! வீடு தந்து அருளு; போற்றி! நின் மெய்யர் மெய்யனே!
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம் 8 -ஆம் திருமுறை 8.107 திருவெம்பாவை
போற்றி! அருளுக, நின் ஆதி ஆம் பாத மலர்.
போற்றி! அருளுக, நின் அந்தம் ஆம் செம் தளிர்கள்.
போற்றி! எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொன் பாதம்.
போற்றி! எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூம் கழல்கள்.
போற்றி! எல்லா உயிர்க்கும் ஈறு ஆம் இணை அடிகள்.
போற்றி! மால், நான்முகனும், காணாத புண்டரிகம்.
போற்றி! யாம் உய்ய, ஆட்கொண்டருளும் பொன் மலர்கள்.
போற்றி! யாம் மார்கழி நீர் ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

கருவூர்த் தேவர் திருவிசைப்பா 9 -ஆம் திருமுறை திருச்சாட்டியக்குடி பதிகம் 9.015

செங்கணா போற்றி திசைமுகா போற்றி
சிவபுர நகருள்வீற் றிருந்த
அங்கணா போற்றி அமரனே போற்றி
அமரர்கள் தலைவனே போற்றி
தங்கணான் மறைநூல் சகலமுங் கற்றோர்
சாட்டியக் குடியிருந் தருளும்
எங்கணா யகனே போற்றிஏ ழிருக்கை
யிறைவனே போற்றியே போற்றி [ 8]

சேரமான் பெருமாள் நாயனார் திருக்கயிலாய ஞான உலா 11 -ஆம் திருமுறை திருக்கயிலாயம் பதிகம் 11.008

இமையோர் பெருமானே போற்றி எழில்சேர்
உமையாள் மணவாளா போற்றி எமைஆளும் [ 51]

தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி
ஈசனே எந்தாய் இறைபோற்றி தூயசீர்ச் [ 52]

சங்கரனே போற்றி சடாமகுடத் தாய்போற்றி
பொங்கரவா பொன்னங் கழல்போற்றி அங்கொருநாள் [ 53]

ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி தூய [ 54]

மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர்
தலைமேலாய் போற்றிதாள் போற்றி நிலைபோற்றி [ 55]

நக்கீரதேவ நாயனார் போற்றித் திருக்கலி வெண்பா 11 -ஆம் திருமுறை பதிகம் 11.016
Back to Top
திருத்தங்கு மார்பின் திருமால் வரைபோல்
எருத்தத் திலங்கியவெண் கோட்டுப் பருத்த [ 1]

குறுத்தாள் நெடுமூக்கிற் குன்றிக்கண் நீல
நிறத்தாற் பொலிந்து நிலம்ஏழ் உறத்தாழ்ந்து [ 2]

பன்றித் திருவுருவாய்க் காணாத பாதங்கள்
நின்றவா நின்ற நிலைபோற்றி அன்றியும் [ 3]

புண்டரிகத் துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய்
அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் பண்டொருநாள் [ 4]

காணான் இழியக் கனக முடிகவித்துக்
கோணாது நின்ற குறிபோற்றி நாணாளும் [ 5]

பேணிக்கா லங்கள் பிரியாமைப் பூசித்த
மாணிக்கா அன்று மதிற்கடவூர்க் காண [ 6]

வரத்திற் பெரிய வலிதொலையக் காலன்
உரத்தில் உதைத்தவுதை போற்றி கரத்தான்மே [ 7]

வெற்பன் மடப்பாவை கொங்கைமேற் குங்குமத்தின்
கற்பழியும் வண்ணங் கசிவிப்பான் பொற்புடைய [ 8]

வாமன் மகனாய் மலர்க்கணையொன் றோட்டியஅக்
காமன் அழகழித்த கண்போற்றி தூமப் [ 9]

படமெடுத்த வாளரவம் பார்த்தடரப் பற்றி
விடமெடுத்த வேகத்தான் மிக்குச் சடலம் [ 10]

முடங்க வலிக்கும் முயலகன்தன் மொய்ம்பை
அடங்க மிதித்தவடர் போற்றி நடுங்கத் [ 11]

திருமால் முதலாய தேவா சுரர்கள்
கருமால் கடல்நாகம் பற்றிக் குருமாற [ 12]

நீலமுண்ட நீள்முகில்போல் நெஞ்சழல வந்தெழுந்த
ஆலமுண்ட கண்டம் அதுபோற்றி சாலமண்டிப் [ 13]

போருகந்த வானவர்கள் புக்கொடுங்க மிக்கடர்க்கும்
தாருகன்தன் மார்பில் தனிச்சூலம் வீரம் [ 14]

கொடுத்தெறியும் மாகாளி கோபந் தவிர
எடுத்த நடத்தியல்பு போற்றி தடுத்து [ 15]

வரையெடுத்த வாளரக்கன் வாயா றுதிரம்
நிரையெடுத்து நெக்குடலம் இற்றுப் புரையெடுத்த [ 16]


பத்தனைய பொன்முடியும் தோளிருப தும்நெரிய
மெத்தெனவே வைத்த விரல்போற்றி அத்தகைத்த [ 17]

வானவர்கள் தாம்கூடி மந்திரித்த மந்திரத்தை
மேனவில ஒடி விதிர்விதிர்த்துத் தானவருக் [ 18]

கொட்டிக் குறளை உரைத்த அயன்சிரத்தை
வெட்டிச் சிரித்த விறல்போற்றி மட்டித்து [ 19]

வாலுகத்தால் மாவிலங்க மாவகுத்து மற்றதன்மேல்
பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி மேலுதைத்தங் [ 20]

கொட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரை
வீட்டிய சண்டிக்கு வேறாக நாட்டின்கண் [ 21]

பொற்கோயில் உள்ளிருத்திப் பூமாலை போனகமும்
நற்கோலம் ஈந்த நலம்போற்றி நிற்க [ 22]

வலந்தருமால் நான்முகனும் வானவரும் கூடி
அலந்தருமால் கொள்ள அடர்க்கும் சலந்தரனைச் [ 23]

சக்கரத்தால் ஈர்ந் தரிதன் தாமரைக்கண் சாத்துதலும்
மிக்கஃதன் றீந்த விறல்போற்றி அக்கணமே [ 24]

நக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம்
தொக்கிருந்த வண்ணம் துதிசெய்ய மிக்கிருந்த [ 25]

அங்கைத் தலத்தே அணிமாலை ஆங்களித்த
செங்கைத் திறத்த திறல்போற்றி திங்களைத் [ 26]

தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேற் சேர்வித்து
வாய்த்திமையோர் தம்மைஎல்லாம் வான்சிறையில் பாய்த்திப் [ 27]

பிரமன் குறையிரப்பப் பின்னும் அவற்கு
வரமன் றளித்தவலி போற்றி புரமெரித்த [ 28]

அன்றுய்ந்த மூவர்க் கமர்ந்து வரமளித்து
நின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து நன்று [ 29]

நடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயில்
கடைகாவல் கொண்டவா போற்றி விடைகாவல் [ 30]

தானவர்கட் காற்றாது தன்னடைந்த நன்மைவிறல்
வானவர்கள் வேண்ட மயிலூரும் கோனவனைச் [ 31]

சேனா பதியாகச் செம்பொன் முடிகவித்து
வானாள வைத்த வரம்போற்றி மேனாள் [ 32]

அதிர்த்தெழுந்த அந்தகனை அண்டரண்டம் உய்யக்
கொதித்தெழுந்த சூலத்தாற் கோத்துத் துதித்தங் [ 33]

கவனிருக்கும் வண்ணம் அருள்கொடுத்தங் கேழேழ்
பவமறுத்த பாவனைகள் போற்றி கவைமுகத்த [ 34]

பொற்பா கரைப்பிறந்து கூறிரண்டாப் போகட்டு
மெற்பா சறைப்போக மேல்விலகி நிற்பால [ 35]

மும்மதத்து வெண்கோட்டுக் கார்நிறத்துப் பைந்தறுகண்
வெம்மதத்த வேகத்தால் மிக்கோடி விம்மி [ 36]

அடர்த்திரைத்துப் பாயும் அடுகளிற்றைப் போக
எடுத்துரித்துப் போர்த்தவிசை போற்றி தொடுத்தமைத்த [ 37]

நாள்மாலை கொண்டணிந்த நால்வர்க்கன் றால்நிழற்கீழ்
வாள்மாலை ஆகும் வகையருளித் தோள்மாலை [ 38]

விட்டிலங்கத் தக்கிணமே நோக்கி வியந்தகுணம்
எட்டிலங்க வைத்த இறைபோற்றி ஒட்டி [ 39]

விசையன் விசையளப்பான் வேடுருவம் ஆகி
அசையா உடல்திரியா நின்று வசையினால் [ 40]

பேசுபதப் பான பிழைபொறுத்து மற்றவற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி நேசத்தால் [ 41]

வாயில்நீர் கொண்டு மகுடத் துமிழ்ந் திறைச்சி
ஆயசீர்ப் போனகமா அங்கமைத்துக்த் தூயசீர்க் [ 42]

கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து
விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி மண்ணின்மேல் [ 43]

காளத்தி போற்றி கயிலைமலை போற்றி யென
நீளத்தினால் நினைந்து நிற்பார்கள் தாளத்தோ [ 44]

டெத்திசையும் பன்முரசம் ஆர்த்திமையோர் போற்றிசைப்ப
அத்தனடி சேர்வார்கள் ஆங்கு. [ 45]
Back to Top
பட்டினத்துப் பிள்ளையார் கோயில் நான்மணிமாலை 11 -ஆம் திருமுறை கோயில் (சிதம்பரம்) பதிகம் 11.026


சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள்
ஆழி கொடுத்த பேரருள் போற்றி
முயற்சியொடு பணிந்த இயக்கர்கோ னுக்கு
மாநிதி இரண்டும் ஆனாப் பெருவளத்
தளகை ஒன்றும் தளர்வின்றி நிறுவிய
செல்வங் கொடுத்த செல்வம் போற்றி
தாள்நிழல் அடைந்த மாணிக் காக
நாண்முறை பிறழாது கோண்முறை வலித்துட்
பதைத்துவருங் கூற்றைப் படிமிசைத் தெறிக்க
உதைத்துயிர் அளித்த உதவி போற்றி

குலைகுலை குலைந்த நிலையாத் தேவர்
படுபேர் அவலம் இடையின்று விலக்கிக்
கடல்விடம் அருந்தன கருணை போற்றி
தவிராச் சீற்றத் தவுணர் மூவெயில்
ஒல்லனல் கொளுவி ஒருநொடிப் பொடிபட

வில்லொன்று வளைத்த வீரம் போற்றி
பூமென் கரும்பொடு பொடிபட நிலத்துக்
காமனைப் பார்த்த கண்ணுதல் போற்றி
தெய்வ யாளி கைமுயன்று கிழித்தெனக்
கரியொன் றுரித்த பெருவிறல் போற்றி

பண்டு பெரும்போர்ப் பார்த்தனுக் காகக்
கொண்டு நடந்த கோலம் போற்றி
விரற்பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்த
அரக்கனை நெரித்த ஆண்மை போற்றி
விலங்கல் விண்டு விழுந்தென முன்னாள்

சலந்தரற் றடிந்த தண்டம் போற்றி
தாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப்
பரிகலங் கொடுத்த திருவுளம் போற்றி
நின்முதல் வழிபடத் தன்மகன் தடிந்த
தொண்டர் மனையில் உண்டல் போற்றி

வெண்ணெய் உண்ண எண்ணுபு வந்து
நந்தா விளக்கை நுந்துபு பெயர்த்த
தாவுபல் எலிக்கு மூவுல காள
நொய்தினில் அளித்த கைவளம் போற்றி
பொங்குளை அழல்வாய்ப் புகைவிழி ஒருதனிச்
சிங்கங் கொன்ற சேவகம் போற்றி
வரிமிடற் றெறுழ்வலி மணியுகு பகுவாய்
உரகம் பூண்ட ஒப்பனை போற்றி
கங்கையுங் கடுக்கையுங் கலந்துழி ஒரு பால்
திங்கள் சூடிய செஞ்சடை போற்றி

கடவுளர் இருவர் அடியும் முடியும்
காண்டல் வேண்டக் கனற்பிழம் பாகி
நீண்டு நின்ற நீளம் போற்றி
ஆலம் பில்குநின் சூலம் போற்றி
கூறுதற் கரியநின் ஏறு போற்றி

ஏகல் வெற்பன் மகிழும் மகட்கிடப்
பாகங் கொடுத்த பண்பு போற்றி
தில்லை மாநகர் போற்றி தில்லையுட்
செம்பொன் அம்பலம் போற்றி அம்பலத்
தாடும் நாடகம் என்றாங்

கென்றும் போற்றினும் என்தனக் கிறைவ
ஆற்றல் இல்லை ஆயினும்
போற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே.
Back to Top
11.030 11 -ஆம் திருமுறை பாடல் # 10 பட்டினத்துப் பிள்ளையார் திருவொற்றியூர் ஒருபா ஒருபது


காலற் சீறிய கழலோய் போற்றி
மூலத் தொகுதி முதல்வ போற்றி
ஒற்றி மாநகர் உடையோய் போற்றி
முற்றும் ஆகிய முதல்வ போற்றி
அணைதொறுஞ் சிறக்கும் அமிர்தே போற்றி
இணைபிறி தில்லா ஈச போற்றி
ஆர்வஞ் செய்பவர்க் கணியோய் போற்றி
தீர்வில் இன்சுவைத் தேனே போற்றி
வஞ்சனை மாந்தரை மறந்தோய் போற்றி
நஞ்சினை அமிர்தாய் நயந்தோய் போற்றி

விரிகடல் வையக வித்தே போற்றி
புரிவுடை வனமாய்ப் புணர்ந்தோய் போற்றி
காண முன்பொருள் கருத்துறை செம்மைக்
காணி யாகிய அரனே போற்றி
வெம்மை தண்மையென் றிவைகுணம் உடைமையின்

பெண்ணோ டாணெனும் பெயரோய் போற்றி
மேவிய அவர்தமை வீட்டினிற் படுக்கும்
தீப மாகிய சிவனே போற்றி
மாலோய் போற்றி மறையோய் போற்றி
மேலோய் போற்றி வேதிய போற்றி

சந்திர போற்றி தழலோய் போற்றி
இந்திர போற்றி இறைவ போற்றி
அமரா போற்றி அழகா போற்றி
குமரா போற்றி கூத்தா போற்றி
பொருளே போற்றி போற்றி

12.010 12 -ஆம் திருமுறை பாடல் # 1 சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

ஆதியாய் நடுவு மாகி
அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித்
தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப்
பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப்
பொதுநடம் போற்றி போற்றி.


12.010 12 -ஆம் திருமுறை பாடல் # 2 சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
Back to Top
கற்பனை கடந்த சோதி
கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி
யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந்
திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
பூங்கழல் போற்றி போற்றி.

12.030 12 -ஆம் திருமுறை பாடல் # 32 சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

Back to Top
சொல்லுவ தறியேன் வாழி
தோற்றிய தோற்றம் போற்றி
வல்லைவந் தருளி யென்னை
வழித்தொண்டு கொண்டாய் போற்றி
எல்லையில் இன்ப வெள்ளம்
எனக்கருள் செய்தாய் போற்றி
தில்லையம் பலத்து ளாடுஞ்
சேவடி போற்றி யென்ன.
Back to Top
12.130 12 -ஆம் திருமுறை பாடல் # 20 சேக்கிழார் இலை மலிந்த சருக்கம்

அடியனேன் அறிவி லாமை
கண்டும்என் னடிமை வேண்டிப்
படிமிசைக் கமரில் வந்திங்
கமுதுசெய் பரனே போற்றி
துடியிடை பாக மான
தூயநற் சோதி போற்றி
பொடியணி பவள மேனிப்
புரிசடைப் புராண போற்றி.
Back to Top
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai potri