கோத்திட்டையுங் கோவலுங் கோயில்கொண்டீர் உமைக்கொண்டுழல் கின்றதோர் கொல்லைச்சில்லைச் சேத்திட்டுக்குத் தித்தெரு வேதிரியுஞ் சிலபூதமும் நீரும் திசைதிசையன சோத்திட்டுவிண் ணோர்பல ருந்தொழநும் மரைக்கோவணத் தோடொரு தோல்புடைசூழ்ந் தார்த்திட்டதும் பாம்புகைக் கொண்டதும்பாம் படிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.
|
1
|
முண்டந்தரித் தீர்முது காடுறைவீர் முழுநீறுமெய் பூசுதிர் மூக்கப்பாம்பைக் கண்டத்திலுந் தோளிலுங் கட்டிவைத்தீர் கடலைக்கடைந் திட்டதோர் நஞ்சையுண்டீர் பிண்டஞ்சுமந் தும்மொடுங் கூடமாட்டோம் பெரியாரொடு நட்பினி தென்றிருத்தும் அண்டங்கடந் தப்புறத்தும் மிருந்தீர் அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.
|
2
|
மூடாய முயலகன் மூக்கப்பாம்பு முடைநாறிய வெண்டலை மொய்த்தபல்பேய் பாடாவரு பூதங்கள் பாய்புலித்தோல் பரிசொன்றறி யாதன பாரிடங்கள் தோடார்மலர்க் கொன்றையும் துன்னெருக்குந் துணைமாமணி நாகம் அரைக்கசைத்தொன் றாடாதன வேசெய்தீர் எம்பெருமான் அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.
|
3
|
மஞ்சுண்டமா லைமதி சூடுசென்னி மலையான்மடந் தைமண வாளநம்பி பஞ்சுண்டவல் குற்பணை மென்முலையா ளொடுநீருமொன் றாயிருத் தல்லொழியீர் நஞ்சுண்டுதே வர்க்கமு தங்கொடுத்த நலமொன்றறி யோம்உங்கை நாகமதற் கஞ்சுண்டுப டம்மது போகவிடீர் அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.
|
4
|
பொல்லாப்புறங் காட்டகத் தாட்டொழியீர் புலால்வாயன பேயொடு பூச்சொழியீர் எல்லாம்அறி வீர்இது வேயறியீர் என்றிரங்குவேன் எல்லியும் நண்பகலும் கல்லால்நிழற் கீழொரு நாட்கண்டதுங் கடம்பூர்க்கரக் கோயிலின் முன்கண்டதும் அல்லால்விர கொன்றிலம் எம்பெருமான் அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.
|
5
|
Go to top |
தென்னாத்தெனாத் தெத்தெனா என்றுபாடிச் சில்பூதமும் நீருந் திசைதிசையன பன்னான்மறை பாடுதிர் பாசூருளீர் படம்பக்கங்கொட் டுந்திரு வொற்றியூரீர் பண்ணார்மொழி யாளையொர் பங்குடையீர் படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியீர் அண்ணாமலை யேன்என்றீர் ஆரூருளீர் அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.
|
6
|
சிங்கத்துரி மூடுதிர் தேவர்கணந் தொழநிற்றீர்பெற் றமுகந் தேறிடுதிர் பங்கம்பல பேசிடப் பாடுந்தொண்டர் தமைப்பற்றிக்கொண் டாண்டு விடவுங்கில்லீர் கங்கைச்சடை யீர்உம் கருத்தறியோம் கண்ணுமூன்றுடை யீர்கண்ணே யாய்இருந்தால் அங்கத்துறு நோய்களைந் தாளகில்லீர் அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.
|
7
|
பிணிவண்ணத்த வல்வினை தீர்த்தருளீர் பெருங்காட்டகத் திற்பெரும் பேயும்நீரும் துணிவண்ணத்தின் மேலும்ஓர் தோலுடுத்துச் சுற்றுநாகத்த ராய்ச்சுண்ண நீறுபூசி மணிவண்ணத்தின் மேலும்ஓர் வண்ணத்தராய் மற்றும்மற்றும் பலபல வண்ணத்தராய் அணிவண்ணத்த ராய்நிற்றீர் எம்பெருமான் அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.
|
8
|
கோளாளிய குஞ்சரங் கோளிழைத்தீர் மலையின்தலை யல்லது கோயில்கொள்ளீர் வேளாளிய காமனை வெந்தழிய விழித்தீர்அது வன்றியும் வேய்புரையும் தோளாள்உமை நங்கையொர் பங்குடையீர் உடுகூறையுஞ் சோறுந்தந் தாளகில்லீர் ஆளாளிய வேகிற்றீர் எம்பெருமான் அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.
|
9
|
பாரோடுவிண் ணும்பக லுமாகிப் பனிமால்வரை யாகிப் பரவையாகி நீரோடுதீ யுந்நெடுங் காற்றுமாகி நெடுவெள்ளிடை யாகி நிலனுமாகித் தேரோட வரையெடுத் தவரக்கன் சிரம்பத்திறுத் தீரும செய்கையெல்லாம் ஆரோடுங்கூ டாஅடி கேள்இதுஎன் அடியோம்உமக் காட்செய அஞ்சுதுமே.
|
10
|
Go to top |
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமென் றமரர்பெரு மானையா ரூரன்அஞ்சி முடியால்உல காண்டமூ வேந்தர்முன்னே மொழிந்தாறுமோர் நான்குமோ ரொன்றினையும் படியாஇவை கற்றுவல் லவடியார் பரங்குன்றமே யபர மன்னடிக்கே குடியாகிவா னோர்க்கும்ஓர் கோவுமாகிக் குலவேந்தராய் விண்முழு தாள்பவரே.
|
11
|