கொடியுடை மும்மதி லூடுருவக் குனிவெஞ் சிலைதாங்கி இடிபட வெய்த வமரர்பிரா னடியா ரிசைந்தேத்தத் துடியிடை யாளையொர் பாகமாகத் துதைந்தா ரிடம்போலும் வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகரே.
|
1
|
கோத்தகல் லாடையுங் கோவணமுங் கொடுகொட்டி கொண்டொருகைத் தேய்த்தன் றநங்கனைத் தேசழித்துத் திசையார் தொழுதேத்தக் காய்த்தகல் லாலதன் கீழிருந்த கடவுள் ளிடம்போலும் வாய்த்தமுத் தீத்தொழி னான்மறையோர் வலம்புர நன்னகரே.
|
2
|
நொய்யதொர் மான்மறி கைவிரலின் னுனைமே னிலையாக்கி மெய்யெரி மேனிவெண் ணீறுபூசி விரிபுன் சடைதாழ மையிருஞ் சோலை மணங்கமழ இருந்தா ரிடம்போலும் வைகலு மாமுழ வம்மதிரும் வலம்புர நன்னகரே.
|
3
|
ஊனம ராக்கை யுடம்புதன்னை உணரிற் பொருளன்று தேனமர் கொன்றையி னானடிக்கே சிறுகாலை யேத்துமினோ ஆனம ரைந்துங்கொண் டாட்டுகந்த வடிக ளிடம்போலும் வானவர் நாடொறும் வந்திறைஞ்சும் வலம்புர நன்னகரே.
|
4
|
செற்றெறியுந் திரையார் கலுழிச் செழுநீர்கிளர் செஞ்சடைமேல் அற்றறியா தனலாடு நட்ட மணியார் தடங்கண்ணி பெற்றறிவா ரெருதேற வல்ல பெருமா னிடம்போலும் வற்றறியாப் புனல்வாய்ப் புடைய வலம்புர நன்னகரே.
|
5
|
Go to top |
உண்ணவண் ணத்தொளி நஞ்சமுண்டு உமையோ டுடனாகிச் சுண்ணவண் ணப்பொடி மேனிபூசிச் சுடர்ச்சோதி நின்றிலங்கப் பண்ணவண் ணத்தன பாணிசெய்யப் பயின்றா ரிடம்போலும் வண்ணவண் ணப்பறை பாணியறா வலம்புர நன்னகரே.
|
6
|
புரிதரு புன்சடை பொன்றயங்கப் புரிநூல் புரண்டிலங்க விரைதரு வேழத்தி னீருரிதோன் மேன்மூடி வேய்புரைதோள் அரைதரு பூந்துகி லாரணங்கை அமர்ந்தா ரிடம்போலும் வரைதரு தொல்புகழ் வாழ்க்கையறா வலம்புர நன்னகரே.
|
7
|
தண்டணை தோளிரு பத்தினொடுந் தலைபத் துடையானை ஒண்டணை மாதுமை தானடுங்க வொருகால் விரலூன்றி மிண்டது தீர்த்தருள் செய்யவல்ல விகிர்தர்க் கிடம்போலும் வண்டணை தன்னொடு வைகுபொழில் வலம்புர நன்னகரே.
|
8
|
தாருறு தாமரை மேலயனுந் தரணி யளந்தானும் தேர்வறி யாவகை யாலிகலித் திகைத்துத் திரிந்தேத்தப் பேர்வறி யாவகை யானிமிர்ந்த பெருமா னிடம்போலும் வாருறு சோலை மணங்கமழும் வலம்புர நன்னகரே.
|
9
|
காவிய நற்றுவ ராடையினார் கடுநோன்பு மேல்கொள்ளும் பாவிகள் சொல்லைப் பயின்றறியாப் பழந்தொண்ட ருள்ளுருக ஆவியு ணின்றருள் செய்யவல்ல வழக ரிடம்போலும் வாவியி னீர்வயல் வாய்ப்புடைய வலம்புர நன்னகரே.
|
10
|
Go to top |
நல்லிய னான்மறை யோர்புகலித் தமிழ்ஞான சம்பந்தன் வல்லியந் தோலுடை யாடையினான் வலம்புர நன்னகரைச் சொல்லிய பாடல்கள் பத்துஞ்சொல்ல வல்லவர் தொல்வினைபோய்ச் செல்வன சேவடி சென்றணுகிச் சிவலோகஞ் சேர்வாரே.
|
11
|