திரிதரு மாமணி நாகமாடத் திளைத்தொரு தீயழல்வாய் நரிகதிக்க வெரியேந்தி யாடு நலமே தெரிந்துணர்வார் எரிகதிர் முத்த மிலங்குகான லிராமேச் சுரமேய விரிகதிர் வெண்பிறை மல்குசென்னி விமலர் செயுஞ்செயலே.
|
1
|
பொறிகிளர் பாம்பரை யார்த்தயலே புரிவோ டுமைபாடத் தெறிகிள ரப்பெயர்ந் தெல்லியாடுந் திறமே தெரிந்துணர்வார் எறிகிளர் வெண்டிரை வந்துபேரு மிராமேச் சுரமேய மறிகிளர் மான்மழுப் புல்குகையெம் மணாளர் செயுஞ்செயலே.
|
2
|
அலைவளர் தண்புனல் வார்சடைமே லடக்கி யொருபாகம் மலைவளர் காதலி பாடவாடி மயக்கா வருமாட்சி இலைவளர் தாழை முகிழ்விரியு மிராமேச் சுரமேயார் தலைவளர் கோலநன் மாலைசூடுந் தலைவர் செயுஞ்செயலே.
|
3
|
மாதன நேரிழை யேர்தடங்கண் மலையான் மகள்பாடத் தேதெரி யங்கையி லேந்தியாடுந் திறமே தெரிந்துணர்வார் ஏதமி லார்தொழு தேத்திவாழ்த்து மிராமேச் சுரமேயார் போதுவெண் டிங்கள்பைங் கொன்றைசூடும் புனிதர் செயுஞ்செயலே.
|
4
|
சூலமோ டொண்மழு நின்றிலங்கச் சுடுகா டிடமாகக் கோலநன் மாதுடன் பாடவாடுங் குணமே குறித்துணர்வார் ஏல நறும்பொழில் வண்டுபாடு மிராமேச் சுரமேய நீலமார் கண்ட முடையவெங்கள் நிமலர் செயுஞ்செயலே.
|
5
|
Go to top |
கணைபிணை வெஞ்சிலை கையிலேந்திக் காமனைக் காய்ந்தவர்தாம் இணைபிணை நோக்கிநல் லாளோடாடு மியல்பின ராகிநல்ல இணைமலர் மேலன்னம் வைகுகான லிராமேச் சுரமேயார் அணைபிணை புல்கு கரந்தைசூடும் அடிகள் செயுஞ்செயலே.
|
6
|
நீரினார் புன்சடை பின்புதாழ நெடுவெண் மதிசூடி ஊரினார் துஞ்சிருள் பாடியாடும் உவகை தெரிந்துணர்வார் ஏரினார் பைம்பொழில் வண்டுபாடு மிராமேச் சுரமேய காரினார் கொன்றைவெண் டிங்கள்சூடுங் கடவுள் செயுஞ்செயலே.
|
7
|
பொன்றிகழ் சுண்ணவெண் ணீறுபூசிப் புலித்தோ லுடையாக மின்றிகழ் சோதியர் பாடலாடன் மிக்கார் வருமாட்சி என்றுநல் லோர்கள் பரவியேத்து மிராமேச் சுரமேயார் குன்றினா லன்றரக் கன்றடந்தோ ளடர்த்தார்கொளுங் கொள்கையே.
|
8
|
கோவல னான்முக னோக்கொணாத குழக னழகாய மேவல னொள்ளெரி யேந்தியாடு மிமையோ ரிறைமெய்ம்மை ஏவல னார்புகழ்ந் தேத்திவாழ்த்து மிராமேச் சுரமேய சேவல வெல்கொடி யேந்துகொள்கையெம் மிறைவர் செயுஞ்செயலே.
|
9
|
பின்னொடு முன்னிடு தட்டைச்சாத்திப் பிரட்டே திரிவாரும் பொன்னெடுஞ் சீவரப் போர்வையார்கள் புறங்கூறல் கேளாதே இன்னெடுஞ் சோலைவண் டியாழ்முரலு மிராமேச் சுரமேய பன்னெடு வெண்டலை கொண்டுழலும் பரமர் செயுஞ்செயலே.
|
10
|
Go to top |
தேவியை வவ்விய தென்னிலங்கை யரையன் றிறல்வாட்டி ஏவியல் வெஞ்சிலை யண்ணல்நண்ணு மிராமேச் சுரத்தாரை நாவியன் ஞானசம் பந்தனல்ல மொழியா னவின்றேத்தும் பாவியன் மாலைவல்லா ரவர்தம்வினை யாயின பற்றறுமே.
|
11
|