காடுபயில் வீடுமுடை யோடுகலன் மூடுமுடை யாடைபுலிதோல் தேடுபலி யூணதுடை வேடமிகு வேதியர் திருந்துபதிதான் நாடகம தாடமஞ்ஞை பாடவரி கோடல்கைம் மறிப்பநலமார் சேடுமிகு பேடையன மூடிமகிழ் மாடமிடை தேவூரதுவே.
|
1
|
கோளரவு கொன்றைநகு வெண்டலையெ ருக்குவனி கொக்கிறகொடும் வாளரவு தண்சலம கட்குலவு செஞ்சடைவ ரத்திறைவனூர் வேளரவு கொங்கையிள மங்கையர்கள் குங்குமம் விரைக்குமணமார் தேளரவு தென்றறெரு வெங்குநிறை வொன்றிவரு தேவூரதுவே.
|
2
|
பண்டடவு சொல்லின்மலை வல்லியுமை பங்கனெமை யாளுமிறைவன் எண்டடவு வானவரி றைஞ்சுகழ லோனினிதி ருந்தவிடமாம் விண்டடவு வார்பொழி லுகுத்தநற வாடிமலர் சூடிவிரையார் செண்டடவு மாளிகை செறிந்துதிரு வொன்றிவளர் தேவூரதுவே.
|
3
|
மாசின்மன நேசர்தம தாசைவளர் சூலதரன் மேலையிமையோர் ஈசன்மறை யோதியெரி யாடிமிகு பாசுபதன் மேவுபதிதான் வாசமலர் கோதுகுயில் வாசகமு மாதரவர் பூவைமொழியும் தேசவொலி வீணையொடு கீதமது வீதிநிறை தேவூரதுவே.
|
4
|
கானமுறு மான்மறிய னானையுரி போர்வைகன லாடல்புரிவோன் ஏனவெயி றாமையிள நாகம்வளர் மார்பினிமை யோர்தலைவனூர் வானணவு சூதமிள வாழைமகிழ் மாதவி பலாநிலவிவார் தேனமுது வுண்டுவரி வண்டுமருள் பாடிவரு தேவூரதுவே.
|
5
|
Go to top |
ஆறினொடு கீறுமதி யேறுசடை யேறனடை யார்நகர்கடான் சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறனமை யாளுமரனூர் வீறுமல ரூறுமது வேறிவளர் வாயவிளை கின்றகழனிச் சேறுபடு செங்கயல் விளிப்பவிள வாளைவரு தேவூரதுவே.
|
6
|
கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுர மன்றவிய நின்றுநகைசெய் என்றனது சென்றுநிலை யெந்தைதன தந்தையம ரின்பநகர்தான் முன்றின்மிசை நின்றபல வின்கனிக டின்றுகற வைக்குருளைகள் சென்றிசைய நின்றுதுளி யொன்றவிளை யாடிவளர் தேவூரதுவே.
|
7
|
ஓதமலி கின்றதெனி லங்கையரை யன்மலி புயங்கணெரியப் பாதமலி கின்றவிர லொன்றினில் அடர்த்தபர மன்றனதிடம் போதமலி கின்றமட வார்கணட மாடலொடு பொங்குமுரவம் சேதமலி கின்றகரம் வென்றிதொழி லாளர்புரி தேவூரதுவே.
|
8
|
வண்ணமுகி லன்னவெழி லண்ணலொடு சுண்ணமலி வண்ணமலர்மேல் நண்ணவனு மெண்ணரிய விண்ணவர்கள் கண்ணவ னலங்கொள்பதிதான் வண்ணவன நுண்ணிடையி னெண்ணரிய வன்னநடை யின்மொழியினார் திண்ணவண மாளிகை செறிந்தவிசை யாழ்மருவு தேவூரதுவே.
|
9
|
பொச்சமமர் பிச்சைபயி லச்சமணு மெச்சமறு போதியருமா மொச்சைபயி லிச்சைகடி பிச்சன்மிகு நச்சரவன் மொச்சநகர்தான் மைச்சின்முகில் வைச்சபொழில் இப்பாடல் கிடைக்கவில்லை.
|
10
|
Go to top |
துங்கமிகு பொங்கரவு தங்குசடை நங்களிறை துன்றுகுழலார் செங்கயல்கண் மங்கையுமை நங்கையொரு பங்கனமர் தேவூரதன்மேல் பைங்கமல மங்கணிகொள் திண்புகலி ஞானசம் பந்தனுரைசெய் சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவை வல்லவர்கள் சங்கையிலரே.
|
11
|