ஏனவெயி றாடரவொ டென்புவரி யாமையிவை பூண்டிளைஞராய்க் கானவரி நீடுழுவை யதளுடைய படர்சடையர் காணியெனலாம் ஆனபுகழ் வேதியர்க ளாகுதியின் மீதுபுகை போகியழகார் வானமுறு சோலைமிசை மாசுபட மூசுமயி லாடுதுறையே.
|
1
|
அந்தண்மதி செஞ்சடைய ரங்கணெழில் கொன்றையொ டணிந்தழகராம் எந்தமடி கட்கினிய தானமது வேண்டிலெழி லார்பதியதாம் கந்தமலி சந்தினொடு காரகிலும் வாரிவரு காவிரியுளால் வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர் சிந்துமயி லாடுதுறையே.
|
2
|
தோளின்மிசை வரியரவ நஞ்சழல வீக்கிமிகு நோக்கரியராய் மூளைபடு வெண்டலையி லுண்டுமுது காடுறையு முதல்வரிடமாம் பாளைபடு பைங்கமுகு செங்கனி யுதிர்த்திட நிரந்துகமழ்பூ வாளைகுதி கொள்ளமடல் விரியமண நாறுமயி லாடுதுறையே.
|
3
|
ஏதமில ரரியமறை மலையர்மக ளாகியவி லங்குநுதலொண் பேதைதட மார்பதிட மாகவுறை கின்றபெரு மானதிடமாம் காதன்மிகு கவ்வையொடு மவ்வலவை கூடிவரு காவிரியுளால் மாதர்மறி திரைகள்புக வெறியவெறி கமழுமயி லாடுதுறையே.
|
4
|
பூவிரி கதுப்பின்மட மங்கையர கந்தொறு நடந்துபலிதேர் பாவிரி யிசைக்குரிய பாடல்பயி லும்பரமர் பழமையெனலாம் காவிரி நுரைத்திரு கரைக்குமணி சிந்தவரி வண்டுகவர மாவிரி மதுக்கிழிய மந்திகுதி கொள்ளுமயி லாடுதுறையே.
|
5
|
Go to top |
கடந்திகழ் கருங்களி றுரித்துமையு மஞ்சமிக நோக்கரியராய் விடந்திகழு மூவிலைநல் வேலுடைய வேதியர் விரும்புமிடமாம் தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு தொண்டையெழில் கொண்டதுவர்வாய் மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக நாறுமயி லாடுதுறையே.
|
6
|
அவ்வதிசை யாருமடி யாருமுள ராகவருள் செய்தவர்கண்மேல் எவ்வமற வைகலு மிரங்கியெரி யாடுமெம தீசனிடமாம் கவ்வையொடு காவிரி கலந்துவரு தென்கரை நிரந்துகமழ்பூ மவ்வலொடு மாதவி மயங்கிமண நாறுமயி லாடுதுறையே.
|
7
|
இலங்கைநகர் மன்னன்முடி யொருபதினொ டிருபதுதொ ணெரியவிரலால் விலங்கலி லடர்த்தருள் புரிந்தவ ரிருந்தவிடம் வினவுதிர்களேல் கலங்கனுரை யுந்தியெதிர் வந்தகய மூழ்கிமலர் கொண்டுமகிழா மலங்கிவரு காவிரி நிரந்துபொழி கின்றமயி லாடுதுறையே.
|
8
|
ஒண்டிறலி னான்முகனு மாலுமிக நேடியுண ராதவகையால் அண்டமுற வங்கியுரு வாகிமிக நீண்டவர னாரதிடமாம் கெண்டையிரை கொண்டுகெளி றாருட னிருந்துகிளர் வாயறுதல்சேர் வண்டன்மணல் கெண்டிமட நாரைவிளை யாடுமயி லாடுதுறையே.
|
9
|
மிண்டுதிற லமணரொடு சாக்கியரு மலர்தூற்ற மிக்கதிறலோன் இண்டைகுடி கொண்டசடை யெங்கள்பெரு மானதிட மென்பரெழிலார் தெண்டிரை பரந்தொழுகு காவிரிய தென்கரை நிரந்துகமழ்பூ வண்டவை திளைக்கமது வந்தொழுகு சோலைமயி லாடுதுறையே.
|
10
|
Go to top |
நிணந்தரு மயானநில வானமதி யாததொரு சூலமொடுபேய்க் கணந்தொழு கபாலிகழ லேத்திமிக வாய்த்ததொரு காதன்மையினால் மணந்தண்மலி காழிமறை ஞானசம் பந்தன்மயி லாடுதுறையைப் புணர்ந்ததமிழ் பத்துமிசை யாலுரைசெய் வார்பெறுவர் பொன்னுலகமே.
|
11
|