கண்பொலி நெற்றியினான் றிகழ் கையிலொர் வெண்மழுவான் பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால்விடையான் விண்பொலி மாமதிசேர் தரு செஞ்சடை வேதியனூர் தண்பொழில் சூழ்பனந்தாட் டிருத் தாடகை ஈச்சரமே.
|
1
|
விரித்தவ னான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச எரித்தவன் முப்புரங்கள் ளிய லேழுல கில்லுயிரும் பிரித்தவன் செஞ்சடைமே னிறை பேரொலி வெள்ளந்தன்னைத் தரித்தவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
|
2
|
உடுத்தவன் மானுரிதோல் கழ லுள்கவல் லார்வினைகள் கெடுத்தருள் செய்யவல்லான் கிளர் கீதமொர் நான்மறையான் மடுத்தவ னஞ்சமுதா மிக்க மாதவர் வேள்வியைமுன் தடுத்தவனூர் பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
|
3
|
சூழ்தரு வல்வினையு முடல் தோன்றிய பல்பிணியும் பாழ்பட வேண்டுதிரேன் மிக வேத்துமின் பாய்புனலும் போழிள வெண்மதியும் மனல் பொங்கரவும் புனைந்த தாழ்சடை யான்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
|
4
|
விடம்படு கண்டத்தினா னிருள் வெள்வளை மங்கையொடும் நடம்புரி கொள்கையினா னவ னெம்மிறை சேருமிடம் படம்புரி நாகமொடு திரை பன்மணி யுங்கொணரும் தடம்புனல் சூழ்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
|
5
|
Go to top |
விடையுயர் வெல்கொடியா னடி விண்ணொடு மண்ணுமெல்லாம் புடைபட வாடவல்லான் மிகு பூதமார் பல்படையான் தொடைநவில் கொன்றையொடு வன்னி துன்னெருக் கும்மணிந்த சடையவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
|
6
|
மலையவன் முன்பயந்த மட மாதையொர் கூறுடையான் சிலைமலி வெங்கணையாற் புர மூன்றவை செற்றுகந்தான் அலைமலி தண்புனலும் மதி யாடர வும்மணிந்த தலையவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
|
7
|
செற்றரக் கன்வலியைத் திரு மெல்விர லாலடர்த்து முற்றும்வெண் ணீறணிந்த திரு மேனியன் மும்மையினான் புற்றர வம்புலியின் னுரி தோலொடு கோவணமும் தற்றவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
|
8
|
வின்மலை நாணரவம் மிகு வெங்கன லம்பதனால் புன்மைசெய் தானவர் தம் புரம் பொன்றுவித் தான்புனிதன் நன்மலர் மேலயனுந் நண்ணு நாரண னும்மறியாத் தன்மைய னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
|
9
|
ஆதர் சமணரொடும் மடை யைந்துகில் போர்த்துழலும் நீத ருரைக்குமொழி யவை கொள்ளன்மி னின்மலனூர் போதவிழ் பொய்கைதனுட் டிகழ் புள்ளிரி யப்பொழில்வாய்த் தாதவி ழும்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
|
10
|
Go to top |
தண்வயல் சூழ்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரத்துக் கண்ணய லேபிறையா னவன் றன்னைமுன் காழியர்கோன் நண்ணிய செந்தமிழான் மிகு ஞானசம் பந்தனல்ல பண்ணியல் பாடல்வல்லா ரவர் தம்வினை பற்றறுமே.
|
11
|