வாரார்கொங்கை மாதோர்பாக மாக வார்சடை நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றி யொற்றைக்கண் கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன் குடமூக்கில் காரார்கண்டத் தெண்டோளெந்தை காரோ ணத்தாரே.
|
1
|
முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும் மேத்தும் படியார்பவள வாயார்பலரும் பரவிப் பணிந்தேத்தக் கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக் குழகாரும் கடியார்சோலைக் கலவமயிலார் காரோ ணத்தாரே.
|
2
|
மலையார்மங்கை பங்கரங்கை யனலர் மடலாரும் குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார் குடமூக்கில் முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவா மதியினார் கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோ ணத்தாரே.
|
3
|
போதார்புனல்சேர் கந்தமுந்திப் பொலியவ் வழகாரும் தாதார்பொழில்சூழ்ந் தெழிலார்புறவி லந்தண் குடமூக்கில் மாதார்மங்கை பாகமாக மனைகள் பலிதேர்வார் காதார்குழையர் காளகண்டர் காரோ ணத்தாரே.
|
4
|
பூவார்பொய்கை யலர்தாமரைசெங் கழுநீர் புறவெல்லாம் தேவார்சிந்தை யந்தணாளர் சீராலடி போற்றக் கூவார்குயில்க ளாலுமயில்க ளின்சொற் கிளிப்பிள்ளை காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோ ணத்தாரே.
|
5
|
Go to top |
மூப்பூர்நலிய நெதியார்விதியாய் முன்னே யனல்வாளி கோப்பார்பார்த்த னிலைகண்டருளுங் குழகர் குடமூக்கில் தீர்ப்பாருடலி லடுநோயவலம் வினைகள் நலியாமைக் காப்பார்கால னடையாவண்ணங் காரோ ணத்தாரே.
|
6
|
ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந் துழல்வாழ்க்கை மானார்தோலார் புலியினுடையார் கரியின் னுரிபோர்வை தேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங் குடமூக்கில் கானார்நட்ட முடையார்செல்வக் காரோ ணத்தாரே.
|
7
|
வரையார்திரடோண் மதவாளரக்க னெடுப்ப மலைசேரும் விரையார்பாத நுதியாலூன்ற நெரிந்து சிரம்பத்தும் உரையார்கீதம் பாடக்கேட்டங் கொளிவாள் கொடுத்தாரும் கரையார்பொன்னி சூழ்தண்குடந்தைக் காரோ ணத்தாரே.
|
8
|
கரியமாலுஞ் செய்யபூமே லயனுங் கழறிப்போய் அரியவண்டந் தேடிப்புக்கு மளக்க வொண்கிலார் தெரியவரிய தேவர்செல்வந் திகழுங் குடமூக்கில் கரியகண்டர் காலகாலர் காரோ ணத்தாரே.
|
9
|
நாணாரமணர் நல்லதறியார் நாளுங் குரத்திகள் பேணார்தூய்மை மாசுகழியார் பேசே லவரோடும் சேணார்மதிதோய் மாடமல்கு செல்வ நெடுவீதிக் கோணாகரமொன் றுடையார்குடந்தைக் காரோ ணத்தாரே.
|
10
|
Go to top |
கருவார்பொழில்சூழ்ந் தழகார்செல்வக் காரோ ணத்தாரைத் திருவார்செல்வ மல்குசண்பைத் திகழுஞ் சம்பந்தன் உருவார்செஞ்சொன் மாலையிவைபத் துரைப்பா ருலகத்துக் கருவாரிடும்பைப் பிறப்பதறுத்துக் கவலை கழிவாரே.
|
11
|