பொடியுடைமார்பினர் போர்விடையேறிப் பூதகணம் புடைசூழக் கொடியுடையூர்திரிந் தையங் கொண்டு பலபலகூறி வடிவுடைவாணெடுங் கண்ணுமைபாக மாயவன்வாழ்கொளி புத்தூர்க் கடிகமழ் மாமலரிட்டுக் கறைமிடற்றானடி காண்போம்.
|
1
|
அரைகெழுகோவண வாடையின்மேலோர் ஆடரவம்மசைத் தையம் புரைகெழுவெண்டலை யேந்திப் போர்வி டை யேறிப்புகழ வரைகெழுமங்கைய தாகமொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர் விரைகமழ் மாமலர்தூவி விரிசடையானடி சேர்வோம்.
|
2
|
பூணெடுநாக மசைத்தனலாடிப் புன்றலையங்கையி லேந்தி ஊணிடுபிச்சையூ ரையம் முண்டியென்று பலகூறி வாணெடுங்கண்ணுமை மங்கையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்த் தாணெடு மாமலரிட்டுத் தலைவனதாணிழல் சார்வோம்.
|
3
|
தாரிடுகொன்றையொர் வெண்மதிகங்கை தாழ்சடை மேலவைசூடி ஊரிடுபிச்சைகொள் செல்வ முண்டியென்று பலகூறி வாரிடுமென்முலை மாதொருபாக மாயவன்வாழ்கொளி புத்தூர்க் காரிடு மாமலர்தூவிக் கறைமிடற்றானடி காண்போம்.
|
4
|
கனமலர்க்கொன்றை யலங்கலிலங்கக் காதிலொர் வெண்குழையோடு புனமலர்மாலை புனைந்தூர் புகுதியென்றே பலகூறி வனமுலைமாமலை மங்கையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர் இனமல ரேய்ந்தனதூவி யெம்பெருமானடி சேர்வோம்.
|
5
|
Go to top |
அளைவளர்நாக மசைத்தனலாடி யலர்மிசை யந்தணனுச்சிக் களைதலை யிற்பலிகொள்ளுங் கருத்தனே கள்வனேயென்னா வளையொலிமுன்கை மடந்தையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்த் தளையவிழ் மாமலர்தூவித் தலைவனதாளிணை சார்வோம்.
|
6
|
அடர்செவிவேழத்தி னீருரிபோர்த்து வழிதலையங்கையி லேந்தி உடலிடுபிச்சையோ டைய முண்டியென்று பலகூறி மடனெடுமாமலர்க் கண்ணியொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்த் தடமல ராயினதூவித் தலைவனதாணிழல் சார்வோம்.
|
7
|
உயர்வரையொல்க வெடுத்தவரக்க னொளிர்கடகக்கை யடர்த்து அயலிடுபிச்சையோ டைய மார்தலையென்றடி போற்றி வயல்விரிநீல நெடுங்கணிபாக மாயவன்வாழ்கொளி புத்தூர்ச் சயவிரி மாமலர்தூவித் தாழ்சடையானடி சார்வோம்.
|
8
|
கரியவனான்முகன் கைதொழுதேத்தக் காணலுஞ்சாரலு மாகா எரியுருவாகியூ ரைய மிடுபலியுண்ணியென் றேத்தி வரியரவல்குன் மடந்தையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர் விரிமல ராயினதூவி விகிர்தனசேவடி சேர்வோம்.
|
9
|
குண்டமணர்துவர்க் கூறைகண்மெய்யிற் கொள்கையினார் புறங்கூற வெண்டலையிற்பலி கொண்டல் விரும்பினையென்று விளம்பி வண்டமர்பூங்குழன் மங்கையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்த் தொண்டர்கண் மாமலர்தூவத் தோன்றிநின்றானடி சேர்வோம்.
|
10
|
Go to top |
கல்லுயர்மாக்கட னின்றுமுழங்குங் கரைபொரு காழியமூதூர் நல்லுயர் நான்மறை நாவின் நற்றமிழ் ஞானசம்பந்தன் வல்லுயர்சூலமும் வெண்மழுவாளும் வல்லவன்வாழ்கொளி புத்தூர்ச் சொல்லியபாடல்கள் வல்லார் துயர்கெடுதல்லெளி தாமே.
|
11
|