படைகளுள் சூலத்தைப் பழக வல்லவனும் , தன்னை நினைவாரது உள்ளத்தில் பரவி அகப்படுத்துக் கொள் பவனும் , வாயில்களில் நின்று ஏற்கும் பிச்சைக்கு விரும்புதலைச் செய்பவனும் , காமனது உடலை அமைப்பு அழியச் செய்தவனும் , கங்கையைச் சடையில் தங்கும்படி வைத்தவனும் , தண்ணிய நீரையுடைய மண்ணியாற்றின் கரையில் இருப்பவனும் , எல்லாத் தகுதிகளையும் உடையவனும் ஆகிய , நீர்மடைகளில் நீலோற்பல மலர் மலர்கின்ற திருவாழ்கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம்போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .
வெந்த நீறு மெய் பூச வல்லானை, வேத மால்விடை ஏற வல்லானை, அந்தம் ஆதி(ய்) அறிதற்கு அரியானை, ஆறு அலைத்த(ச்) சடையானை, அம்மானை, சிந்தை என் தடுமாற்று அறுப்பானை, தேவதேவன், என் சொல் முனியாதே வந்து என் உள்ளம் புகும் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .
வெந்த சாம்பலை உடம்பிற் பூச வல்லவனும் , வேத மாகிய சிறந்த விடையை ஊர வல்லவனும் , முடிவும் முதலும் அறிதற்கு அரியவனும் , ஆற்றுநீர் மோதுகின்ற சடையை உடையவனும் , பெரி யோனும் , எனது மனக் கலக்கத்தைக் களைபவனும் , தேவர்களுக்குத் தேவனும் , யான் இகழ்ந்து சொல்லிய சொல்லை வெறாமல் வந்து என் உள்ளத்திலே புகுந்து நிற்பவனும் ஆகிய , திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம்போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .
தடங்கையால் மலர் தூய்த் தொழுவாரைத் தன் அடிக்கே செல்லும் ஆறு வல்லானை, படம் கொள் நாகம்(ம்) அரை ஆர்த்து உகந்தானை, பல் இல் வெள்ளைத் தலை ஊண் உடையானை, நடுங்க ஆனை உரி போர்த்து உகந்தானை, நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தானை, மடந்தை பாகனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .
பெரிய கைகளால் மலர்களை எடுத்துத் தூவிக் கும்பிடுகின்றவர்கள் , பிறவிடத்துச் செல்லாது , தன் திருவடியிடத்தே செல்லுமாறு செலுத்த வல்லவனும் , படத்தை உடைய பாம்பை அரை யில் விரும்பிக் கட்டியுள்ளவனும் , முன்னர் விளங்கும் பற்களை யுடைய வெள்ளிய தலையில் உண்ணுதல் உடையவனும் , தன் தேவியும் நடுங்கும்படி யானைத் தோலை விரும்பிப் போர்த்துள்ள வனும் , நஞ்சினை உண்டு கண்டம் கரியதாகியவனும் , மாதொரு பாகனும் ஆகிய , திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .
வளைக்கை முன்கை மலை மங்கை மணாளன்; மாரனார் உடல் நீறு எழச் செற்று, துளைத்த அங்கத்தொடு மலர்க் கொன்றை தோலும் நாலும் துதைந்த(வ்) வரை மார்பன்; திளைக்கும் தெவ்வர் திரி புரம் மூன்றும் அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ வளைத்த வில்லியை; வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை; மறந்து என் நினைக்கேனே?.
திருவின் நாயகன் ஆகிய மாலுக்கு அருள்கள் செய்திடும் தேவர் பிரானை, உருவினானை, ஒன்றா அறிவு ஒண்ணா மூர்த்தியை, விசயற்கு அருள் செய்வான் செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செங்கண் வேடனாய் என்னொடும் வந்து மருவினான் தனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .
திருமகளுக்குக் கணவனாகிய திருமாலுக்குப் பல பொழுதுகளிற் பல திருவருள்களைச் செய்த , தேவர் தலைவனும் , உருவம் உடையவனும் , அவ்வுருவம் ஒன்றாக அறியப்படாது , அள வற்றனவாய் அறியப்படுங் கடவுளும் அருச்சுனனுக்கு அருள்செய்தற் பொருட்டு போருக்குரிய வில் ஒன்றை ஏந்திக்கொண்டு , ஒரு பன்றியின்பின்னே , சிவந்த கண்களையுடைய வேடனாய்ச் சென்றவ னும் , என்னிடத்திலும் வந்து பொருந்தியுள்ளவனும் ஆகிய , திரு வாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியுள்ள மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .
எந்தையை, எந்தை தந்தை பிரானை, ஏதம் ஆய(வ்) இடர் தீர்க்க வல்லானை, முந்தி ஆகிய மூவரின் மிக்க மூர்த்தியை, முதல் காண்பு அரியானை, கந்தின் மிக்க(க்) கரியின் மருப்போடு, கார் அகில், கவரி(ம்)மயிர், மண்ணி வந்து வந்து இழி வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே?
என் தந்தையும் , என் தந்தை தந்தைக்கும் தலைவ னும் , துன்பத்திற்கு வழியாகிய இடையூறுகளைப் போக்க வல்லவனும் , யாவர்க்கும் முன்னோராகிய மும்மூர்த்திகளினும் மேலான மூர்த்தியும் , தோற்றம் அறியப்படாதவனும் ஆகிய , மண்ணியாறு வழியாக , தறி யிடத்தில் நின்று சினம் மிகுகின்ற யானையின் தந்தங்களும் , கரிய அகிற் கட்டைகளும் , கவரிமானின் மயிர்களும் வந்து வந்து வீழ்கின்ற திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல் பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .
தேனை ஆடிய கொன்றையினானை, தேவர் கைதொழும் தேவர் பிரானை, ஊனம் ஆயின தீர்க்க வல்லானை, ஒற்றை ஏற்றனை, நெற்றிக் கண்ணானை, கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த கள்ளப் பிள்ளைக்கும் காண்பு அரிது ஆய வானநாடனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே?.
தேனில் மூழ்கிய கொன்றைமலர் மாலையை உடையவனும் , தேவர்கள் வணங்கும் தலையாய தேவனும் , குறையாயவற்றை எல்லாம் போக்க வல்லவனும் , ஒற்றை எருதை உடையவனும் , நெற்றிக்கண்ணை உடையவனும் , காட்டில் வாழும் யானையின் கொம்பை ஒடித்த கள்ளத்தன்மையுடைய சிறுவனுக்கும் காண அரிதான பொருளாய் உள்ளவனும் , வானுலகத்தில் வாழ் பவனும் ஆகிய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .
காளை ஆகி வரை எடுத்தான் தன் கைகள் இற்று அவன் மொய் தலை எல்லாம் மூளை போத, ஒருவிரல் வைத்த மூர்த்தியை, முதல் காண்பு அரியானை, பாளை தெங்கு பழம் விழ மண்டி, செங்கண் மேதிகள் சேடு எறிந்து, எங்கும் வாளை பாய் வயல் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே?.
காளைபோன்று கயிலாயத்தைப் பெயர்த்தவனாகிய இராவணனது கைகள் முரிந்து , நெருங்கிய தலைகளினின்றும் மூளை வெளிப்படுமாறு தனது கால்விரல் ஒன்றை ஊன்றிய கடவுளும் , தோற்றம் அறியப்படாதவனும் ஆகிய , பாளையையுடைய தென்னை மரத்தினது நெற்றுக்கள் விழ , சிவந்த கண்களையுடைய எருமைகள் , நெருங்கிச் சேறுசெய்ய , எங்கும் வாளை மீன்கள் துள்ளுகின்ற வயல் களையுடைய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .
திருந்த நால்மறை பாட வல்லானை, தேவர்க்கும் தெரிதற்கு அரியானை, பொருந்த மால்விடை ஏற வல்லானை, பூதிப்பை புலித்தோல் உடையானை, இருந்து உணும் தேரரும் நின்று உணும் சமணும் ஏச நின்றவன், ஆர் உயிர்க்கு எல்லாம் மருந்து அனான் தனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .
என்றும் ஓர் அழிவில்லாதவனும் , மெய்ம்மையில் நின்று உணரப்படுபவனும் , அம் மெய்ம்மையை இல்லாதவர்க்கெல் லாம் உணரப்படாதவனும் , முப்புரங்களை எரித்தவனும் , குற்றமில் லாதவனும் , புலித்தோலாகிய உடையை உடையவனும் , சிவந்த நிறம் உடையதாய் , வெள்ளிய திருநீற்றினால் விளங்குகின்ற திருமேனியை உடையவனும் , மான்கன்றை ஏந்துகின்ற , கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையுடையனும் ஆகிய , திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளி யிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .
வளம் கிளர் பொழில் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேன்? என்று உளம் குளிர் தமிழ், ஊரன்-வன்தொண்டன், சடையன் காதலன், வனப்பகை அப்பன், நலம் கிளர் வயல் நாவலர் வேந்தன், நங்கை சிங்கடி தந்தை பயந்த பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம், செய்த பாவங்கள் தானே .
வன்றொண்டனும் , சடையனார் மகனும் , வனப்பகை , சிங்கடி என்னும் நங்கையர்க்குத் தந்தையும் , விளைவு மிகுகின்ற வயல்களையுடைய திருநாவலூரில் உள்ளார்க்குத் தலை வனும் , இறைவனை உளங்குளிர்ந்து பாடும் தமிழையுடையவனும் ஆகிய நம்பியாரூரன் , ` வளமை மிக்க சோலைகளையுடைய திருவாழ் கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து வேறு எதனை நினைப்பேன் ` என்று சொல்லிப் பாடிய , பயன் மிகுந்த இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களிடத் தினின்றும் , அவர்கள் செய்த பாவங்கள் திண்ணமாகப் பறந்து நீங்கும் .
Other song(s) from this location: திருவாழ்கொளிபுத்தூர்
1.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி உடை மார்பினர், போர்
Tune - தக்கராகம்
(திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணவீசுரர் வண்டார்பூங்குழலம்மை)
2.094
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சாகை ஆயிரம் உடையார், சாமமும்
Tune - பியந்தைக்காந்தாரம்
(திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணநாதர் வண்டமர்பூங்குழலம்மை)