கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர், விரவலாமை சொல்லி, திடுகு மொட்டு எனக் குத்தி, கூறை கொண்டு, ஆறு அலைக்கும் இடம் முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய், இடுகு நுண் இடை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
|
1
|
எம்பெருமானிரே , முடைநாற்றம் சேய்மையினும் விரையச் சென்று நாறுகின்ற உடம்பையுடைய வடுகர்கள் வாழ்கின்ற இம் முருகன்பூண்டி , வளைந்த கொடிய வில்லையுடைய வடுக வேடுவர் , வருவோரைப் பொருந்தாத சொற்களைச் சொல்லி , ` திடுகு ` என்றும் , ` மொட்டு ` என்றும் அதட்டி அச்சுறுத்தி ஆறலைத்து அவர்தம் உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம் ; இம்மாநகரிடத்து இங்கு , சிறுகிய , நுண்ணிய இடையையுடைய எம்பெருமாட்டியோடும் நீர் எதன்பொருட்டு இருக்கின்றீர் ? | |
வில்லைக் காட்டி வெருட்டி, வேடுவர், விரவலாமை சொல்லிக் கல்லினால் எறிந்திட்டும், மோதியும், கூறை கொள்ளும் இடம் முல்லைத்தாது மணம் கமழ் முருகன் பூண்டி மா நகர்வாய், எல்லைக் காப்பது ஒன்று இல்லை ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
|
2
|
எம்பெருமானிரே , முல்லை மலரின் மகரந்தம் நறு மணத்தை வீசுகின்ற இம் முருகன்பூண்டி மாநகர் வருவோரை , வேடுவர்கள் , வில்லைக் காட்டி , வெருட்டியும் , பொருந்தாத சொற்களைச் சொல்லிக் கல்லால் எறிந்தும் , கையால் அறைந்தும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம் ; இதன் எல்லைக்குக் காவல் ஒன்றும் இல்லாமை நீர் அறிந்ததேயானால் , இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ? | |
பசுக்களே கொன்று தின்று, பாவிகள், பாவம் ஒன்று அறியார், உசிர்க் கொலை பல நேர்ந்து, நாள்தொறும் கூறை கொள்ளும் இடம் முசுக்கள் போல் பல வேடர் வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய், இசுக்கு அழியப் பயிக்கம் கொண்டு, நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
|
3
|
எம்பெருமானிரே , வேடர் பலர் குரங்குகள் போலப் பிறர்பொருளைப் பறித்து வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர் , அப்பாவிகள் , பாவம் என்பதொன்றையறியாராய் , விலங்குகளையே கொன்று தின்று , நாள்தோறும் பலரது உயிர்களைக் கொல்லுதலைத் துணிந்து செய்து அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம் ; இதன்கண் நீர் , இழுக்கு நீங்கப் பிச்சை ஏற்று , இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர் ? | |
பீறல் கூறை உடுத்து, ஓர் பத்திரம் கட்டி, வெட்டினராய், சூறைப் பங்கியர் ஆகி, நாள்தொறும் கூறை கொள்ளும் இடம் மோறை வேடுவர் கூடி வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய், ஏறு கால் இற்றது இல்லை ஆய் விடில், எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
|
4
|
எம்பெருமானிரே , குற்றமுடைய வேடுவரே கூடி , ஆறலைத்த பொருளின் பங்காகிய பொருளை உடையவராய் , வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர் , அவர்கள் , கிழிந்த உடையை உடுத்துக்கொண்டு , அதற்குள் உடைவாளையுங் கட்டிக்கொண்டு , வருவோரை அவ்வுடைவாளால் வெட்டி , நாள்தோறும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம் ; உமது எருது கால் ஒடியாமல் நன்றாகவே இருக்கின்றதென்றால் , அதன்மேல் ஏறி அப்பாற் போகாமல் , இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ? | |
தயங்கு தோலை உடுத்த சங்கரா! சாம வேதம் ஓதீ! மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீர்; முயங்கு பூண் முலை மங்கையாளொடு முருகன் பூண்டி மா நகர்வாய், இயங்கவும் மிடுக்கு உடையராய் விடில், எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
|
5
|
எம் பெருமானிரே , நீர் , விளங்குகின்ற தோலை உடுத்து , இன்பத்தைச் செய்கின்ற சாம வேதத்தைப் பாடிக்கொண்டு , அப்பாட்டினால் மயங்கி ஊரில் உள்ளார் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியீரோ ? பல இடங்களுக்குச் செல்ல வலிமையும் உடையீரென்றால் , தழுவுகின்ற , அணிகளை அணிந்த தனங்களையுடைய தேவியோடும் , இம் முருகன்பூண்டி மாநகரிடத்து இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ? | |
| Go to top |
விட்டு இசைப்பன, கொக்கரை, கொடுகொட்டி, தத்தளகம், கொட்டிப் பாடும் துந்துமியொடு, குடமுழா, நீர் மகிழ்வீர்; மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன் பூண்டி மா நகர்வாய், இட்ட பிச்சை கொண்டு உண்பது ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
|
6
|
எம்பெருமானிரே , நீர் , கொட்டிப்பாடுதற்கு உரிய , தாள அறுதிக்கு ஏற்ப விட்டுவிட்டு ஒலிக்கின்ற ` ` கொக்கரை , கொடு கொட்டி , தத்தளகம் , துந்துமி , குடமுழா , என்னும் இவற்றை விரும்புவராய் உள்ளீரென்றால் , மற்றும் , ஊரவர் இட்ட பிச்சையை ஏற்று உண்பீரென்றால் , பலவகை அரும்புகள் அலர்ந்து மணங்கமழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர் ? | |
வேதம் ஓதி, வெண்நீறு பூசி, வெண் கோவணம் தற்று, அயலே ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்தரம் நீர் மகிழ்வீர்; மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன் பூண்டி மா நகர்வாய், ஏது காரணம் ஏது காவல் கொண்டு, எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
|
7
|
எம்பெருமானிரே , நீர் , வேதத்தை ஓதிக்கொண்டு , வெண்ணீற்றைப் பூசிக்கொண்டு , வெள்ளிய கோவணத்தை உடுத்து , பக்கத்தில் அலை பொருந்திய திருவொற்றியூரை உத்திர நீர் விழாவின் பொருட்டு விரும்புவீர் ; அங்குப் போகாமல் , வேடர்கள் , வருவோரைத் தாக்கி , அவரது உடையைப் பறித்துக் கொள்ளுகின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து , யாது காரணத்தால் , எதனைக் காத்துக் கொண்டு , எதன் பொருட்டு இங்கு இருக்கின்றீர் ? | |
பட அரவு நுண் ஏர் இடை, பணைத்தோள், வரி நெடுங்கண் மடவரல்(ல்) உமை நங்கை தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர்; முடவர் அல்லீர்; இடர் இலீர்; முருகன் பூண்டி மா நகர்வாய்; இடவம் ஏறியும் போவது ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
|
8
|
எம்பெருமானிரே , நீர் , தனிமையாக இல்லாது , படத்தையுடைய பாம்புபோலும் மிக நுண்ணிய இடையினையும் , பருத்த தோள்களையும் , வரிகளையுடைய நீண்டகண்களையும் உடைய இளமை பொருந்திய , ` உமை ` என்னும் நங்கையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளீர் ; முடவரல்லீர் ; ஆகவே , பெயர்ந்து போதற்கண் இடரொன்றும் இல்லீர் ; அன்றியும் , நீர் , விரும்பிய இடத்திற்கு இடபத்தின்மேல் ஏறியும் போவீர் என்றால் , இம் முருகன் பூண்டி மாநகரிடத்து , இங்கு , எதன்பொருட்டு இருக்கின்றீர் ? | |
சாந்தம் ஆக வெண் நீறு பூசி, வெண்பல்-தலை கலனா, வேய்ந்த வெண் பிறைக் கண்ணி தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர்; மோந்தையோடு முழக்கு அறா முருகன் பூண்டி மா நகர்வாய், ஏந்து பூண் முலை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே.
|
9
|
எம் பெருமானிரே , வெள்ளிய நீற்றைச் சாந்தாகப் பூசிக்கொண்டு , வெள்ளிய பற்களையுடைய தலையேகலமாக ஏந்தி , முடியிற் சூடிய வெள்ளிய பிறையாகிய கண்ணியை அம் முடியின் ஒரு பாகத்தில் விரும்பி வைத்தவரே , நீர் , ` மொந்தை ` என்னும் வாச்சியத் தோடு , வேடர்கள் முழங்குதல் நீங்காத இம் முருகன் பூண்டி மாநக ரிடத்து , அணிகளைத் தாங்கிய தனங்களையுடைய மங்கை ஒருத்தி யோடு இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ? | |
முந்தி வானவர் தாம் தொழும் முருகன் பூண்டி மா நகர்வாய்ப் பந்து அணை விரல் பாவை தன்னை ஓர் பாகம் வைத்தவனைச் சிந்தையில் சிவ தொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு எந்தம் அடிகளை ஏத்துவார் இடர் ஒன்றும் தாம் இலரே.
|
10
|
தேவர் , ஒருவர் ஒருவரின் முற்பட்டு வணங்கு கின்ற , திருமுருகன்பூண்டி மாநகரிடத்து எழுந்தருளியிருக்கின்ற , பந்திற் பொருந்திய விரல்களையுடைய , பாவைபோலும் மங்கையை ஒரு பாகத்து வைத்துள்ள சிவபெருமானை , அவனுக்குத் தொண்டனாகிய நம்பியாரூரன் அன்பினாற் பாடிய இப் பத்துப் பாடல்களால் அவ்வெம்பெருமானைத் துதிப்பவர்கள் , துன்பம் ஒன்றும் இல்லாதவ ராவர் . | |
| Go to top |