மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; இறப்பது இல்லை; சேர்ப்பு அது காட்டு அகத்து; ஊரினும் ஆக; சிந்திக்கின்-அல்லால், காப்பது வேள்விக்குடி, தண்துருத்தி; எம் கோன் அரைமேல் ஆர்ப்பது நாகம்; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
|
1
|
ஆராயுங்கால் எங்கள் தலைவர் , பிறத்தலும் இல்லை ; பின்பு வளர்ந்து முதுமை அடைதலும் இல்லை ; முடிவில் இறந்தொழிதலுமில்லை ; உறைவிடம் காட்டிடத்துள்ளது ; அதுவன்றி ஊர்களுள் தமக்கு உரித்தாகக் காப்பது திருவேள்விக்குடியும் , தண்ணிய திருத்துருத்தியும் , அன்றியும் அரைக்கண் இறுகக் கட்டுவது பாம்பு ; இவற்றை முன்பே அறிந்தோமாயின் , இவர்க்கு நாம் ஆட்படா தேயிருப்பேம் . இவற்றை அறிந்தோமாயின் , இவர்க்கு நாம் ஆட்படா தொழிவேமோ ! | |
கட்டக் காட்டின்(ன்) நடம் ஆடுவர்; யாவர்க்கும் காட்சி ஒண்ணார்; சுட்ட வெண் நீறு அணிந்து ஆடுவர்; பாடுவர்; தூய நெய்யால் வட்டக்குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார் அட்டக் கொண்டு, உண்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
|
2
|
எங்கள் தலைவர் , இடரைத் தரும் காட்டிலே நடனம் ஆடுவார் ; யாராலும் காண்பதற்கு அரியவர் . சுடப்பட்ட வெள்ளிய சாம்பலைப் பூசிக்கொண்டு மகிழ்ச்சியாக ஆடல் பாடல்களைச் செய்வார் ; வேதத்தைப் பலகாலும் பயில்கின்றவர்களாகிய அந்தணர்கள் , வட்டமாகிய குழியில் , தூயதாகிய நெய்யினால் எரியை வளர்த்துப் போற்றி , அதன்கண் பாகம் செய்த பொருள்களை ஏற்று உண்பார் ; இவற்றையெல்லாம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே ! | |
பேரும் ஓர் ஆயிரம் பேர் உடையார்; பெண்ணோடு ஆணும் அல்லர்; ஊரும் அது ஒற்றியூர்; மற்றை ஊர் பெற்றவா நாம் அறியோம்; காரும் கருங்கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கறுத்தார்க்கு ஆரம் பாம்பு ஆவது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
|
3
|
எங்கள் தலைவர் , பெயரும் தமக்குரியனவாக ஆயிரம் உடையவர் ; இவர் பெண்ணும் அல்லர் ; ஆணும் அல்லர் ; இவர்க்கு ஊரும் ஒற்றிஊரே ; அதுவன்றி வேறோர் ஊரை உடைய ராதலை நாம் அறிந்திலோம் ; இருண்ட கரிய கடலில் தோன்றிய நஞ்சினை உணவாக உண்டு , கண்டம் கறுப்பாயினார் ; இவர்க்கு ஆரமாவது , பாம்பே ; இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே ! | |
ஏனக்கொம்பும்(ம்) இள ஆமையும் பூண்டு, அங்கு ஓர் ஏறும் ஏறி, கானக்-காட்டில்-தொண்டர் கண்டன சொல்லியும், காமுறவே, மானைத்தோல் ஒன்றை உடுத்து, புலித்தோல் பியற்கும் இட்டு, யானைத்தோல் போர்ப்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
|
4
|
எங்கள் தலைவர் பன்றியின் கொம்பையும் , இளமையான ஆமையின் ஓட்டினையும் அணிந்து , ஒற்றை எருதின்மேல் ஏறுபவராய் , தம்மை அடியார்கள் காட்டில் கண்ட கோலங்களையெல்லாம் பலபடியாக எடுத்துச் சொல்லிய பின்பும் , விருப்பம் உண்டாக , மானினது அழகிய தோல் ஒன்றை அரையில் உடுத்து , தோளின் கண்ணும் புலித்தோலை இட்டு , உடம்பின் மேல் யானைத் தோலைப் போர்த்துக் கொள்பவர் . இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே ! | |
ஊட்டிக் கொண்டு உண்பது ஓர் ஊண் இலர், ஊர் இடு பிச்சை அல்லால்; பூட்டிக் கொண்டு ஏற்றினை ஏறுவர்; ஏறி ஓர் பூதம் தம்பால் பாட்(ட்)டிக் கொண்டு உண்பவர்; பாழிதொறும் பல பாம்பு பற்றி ஆட்டிக் கொண்டு, உண்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே!.
|
5
|
எங்கள் தலைவர் நாவிற்குச் சுவைகள் பலவற்றை ஊட்டி உண்பதற்கு , ஊரவர் இடுகின்ற பிச்சையையன்றி மற்றோர் உணவையும் இலர் . ஒற்றை எருதைக் கயிற்றிற் கட்டி வைத்துக் கொண்டு , அதன் மேல் ஏறிச் செல்வர் . சிறிய பூதங்கள் தம்மிடத்தில் பாட்டு ஈதலைக் கேட்டு நின்று இன்பம் நுகர்பவராவர் . புற்றுக்கள் தோறும் சென்று பல பாம்புகளைப் பிடித்து ஆட்டிப் பிழைப்பர் . இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே ! | |
| Go to top |
குறவனார் தம்மகள், தம் மகனார் மணவாட்டி; கொல்லை மறவனாராய், அங்கு ஓர் பன்றிப் பின் போவது மாயம் கண்டீர்; இறைவனார், ஆதியார், சோதியராய், அங்கு ஓர் சோர்வு படா அறவனார் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
|
6
|
எங்கள் தலைவர்தம் புதல்வர்க்கு மனைவி , ஒரு குறவர் மகள் ; இவரும் கொல்லும் தொழிலையுடைய வேடுவராய் முன்பு ஒரு பன்றிப்பின் சென்றார் ; இவை மாயமாம் . இவர் இப் பெற்றியரான இறைவரும் , முன்னவரும் , ஒளி வடிவினரும் , அறவரும் ஆவதை அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே ! | |
பித்தரை ஒத்து ஒரு பெற்றியர்; நற்ற(வ்)வை, என்னைப் பெற்ற; முற்ற(வ்)வை, தம் அ(ன்)னை, தந்தைக்கும் தவ்வைக்கும் தம்பிரானார்; செத்தவர் தம் தலையில் பலி கொள்வதே செல்வம் ஆகில், அத் தவம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே!.
|
7
|
என்னைப் பெற்ற நற்றாயும் , வயது முதிர்ந்த அவள் தாயும் , இவ் விருவர்க்கும் அன்னை , தந்தை , தமக்கை என்பவரும் ஆகிய எல்லோர்க்கும் இறைவராய் உள்ள இவர் . பித்தரைப் போன்ற ஒரு தன்மை உடையராய் இருக்கின்றார் ; அன்றியும் , இறந்தவர் தலை யோட்டில் பிச்சை ஏற்பதே செல்வமாக , அன்னதொரு தவமுடைய ராதலை அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே ! | |
உம்பரான், ஊழியான், ஆழியான், ஓங்கி மலர் உறைவான், தம் பரம் அல்லவர்; சிந்திப்பவர் தடுமாற்று அறுப்பார்; எம் பரம் அல்லவர்; என் நெஞ்சத் துள்ளும் இருப்பது ஆகில், அம்பரம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
|
8
|
` இந்திரன் , உருத்திரன் , மால் , அயன் , என்னும் இவர்கள் அளவில் உள்ளரல்லர் என்றும் , ` தம்மை நினைப்பவரது மனக்கவலையைப் போக்குபவர் எம்மளவல்லவர் ` என்றும் சொல்லப்படுகின்ற இவர் , என் மனத்திலும் இருத்தலுடையவராய் வேறு வெளியாதலை அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே ! | |
இந்திரனுக்கும் இராவணனுக்கும் அருள் புரிந்தார்; மந்திரம் ஓதுவர்; மாமறை பாடுவர்; மான்மறியர்; சிந்துரக் கண்ணனும், நான்முகனும்(ம்), உடன் ஆய்த் தனியே அந்தரம் செல்வது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
|
9
|
எங்கள் தலைவர் தேவர் கோமானாகிய இந்திரனுக்கும் , அரக்கர் கோமானாகிய இராவணனுக்கும் அருள் புரிந்தார் . அந்தணர்க்குரிய மந்திரம் ஓதுதல் , மறைபாடுதல் என்பவற்றையும் , வேடர்க்குரிய மான் கன்றைப் பிடித்தலையும் உடையவர் . ` மால் , அயன் ` என்னும் இருவரும் உடனாயிருப்ப , அவரொடு நிற்றலேயன்றி , தாம் மட்டும் தனியே உயர்ந்தும் செல்வர் . இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே ! | |
கூடலர் மன்னன், குல நாவலூர்க் கோன், நலத் தமிழைப் பாட வல்ல(ப்) பரமன்(ன்) அடியார்க்கு அடிமை வழுவா நாட வல்ல(த்) தொண்டன், ஆரூரன், ஆட்படும் ஆறு சொல்லிப் பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே.
|
10
|
பகைவர்க்கு அவர் வணங்கும் அரசனும் , மேன்மை பொருந்திய திருநாவலூர்க்குத் தலைவனும் , நன்மையை யுடைய தமிழைப் பாடவல்ல சிவனடியார்க்கு அடிமை வழுவாது செய்யுமாற்றால் அப்பெருமானை அடைய எண்ணுகின்றவனும் ஆகிய நம்பியாரூரன் , தன் தலைவனுக்கு ஆட்படுதல் இவ்வாறெனச் சொல்லி இப்பதிகத்தைப் பாடவல்லவர் , மேலான உலகத்தில் சென்று தங்குதல் பொருளன்று . ( மிக எளிதாம் ) | |
| Go to top |