சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.017   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருநாவலூர் (திருநாமநல்லூர்) - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் ராகத்தில் திருமுறை அருள்தரு சுந்தராம்பிகை உடனுறை அருள்மிகு நாவலீசுவரர் திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=WN58QVk8-Rk   Add audio link Add Audio

கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்ய,
மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர், ஓர் அம்பினால்;
ஏவலனார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட
நாவலனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .

1
ஓர் அம்பினாலே பகைவரது திரிபுரத்தில் தீ எழுமாறு செய்தவரும் , அதனால் , ` அம்பு எய்தலில் வல்லவர் ` எனப் புகழத்தக்கவராயினாரும் , என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையுங்கொண்ட வழக்கு வல்லவரும் ஆகிய இறைவருக்கு , ` திருமால் , பிரமன் , இந்திரன் ` என்னும் இவரும் வந்து சிறிய பணி விடைகளைச் செய்யுமாறு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரே யாகும் .

தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்ட நாள், சபை முன்
வன்மைகள் பேசிட, வன் தொண்டன் என்பது ஓர் வாழ்வு தந்தார்;
புன்மைகள் பேசவும், பொன்னைத் தந்து என்னைப் போகம் புணர்த்த
நன்மையினார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .

2
தமக்கு இயல்பாக உள்ள ` பேரருளுடைமை ` என்னுங் குணத்தினால் , என் பிழையைத் திருவுளங்கொள்ளாது , அடிமை என்பது ஒன்றையே கருதி , என்னைத் தாம் ஆட்கொள்ள வந்த அந் நாளின்கண் பலர் கூடியிருந்த சபை முன்பு தம்மைஎன் பேதைமையால் வசைச் சொற்கள் பல சொல்லவும் அவற்றை இசைச் சொற்களாகவே மகிழ்ந்தேற்று எனக்கு , ` வன்றொண்டன் ` என்பதொரு பதவியைத் தந்தவரும் , பின்னரும் நான் கெழுதகைமையை அளவின்றிக்கொண்டு பல வசைப் பாடல்களைப் பாட அவற்றிற்கும் மகிழ்ந்து , எனக்கு வேண்டுமளவும் பொன்னைக் கொடுத்துப் போகத்தையும் இடையூறின்றி எய்துவித்த நன்றிச் செயலை உடையவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரேயாகும் .

வேகம் கொண்டு ஓடிய வெள்விடை ஏறி ஓர் மெல்லியலை
ஆகம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டார்;
போகம் கொண்டார், கடல் கோடியில் மோடியை; பூண்பது ஆக
நாகம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே.

3
விரைவைக் கொண்டு ஓடுகின்ற வெள்ளிய விடையை ஊர்பவரும் , மெல்லிய இயல்பினை உடையாளாகிய மங்கை ஒருத்தியைத் திருமேனியிற் கொண்டவரும் , என்னைத் திரு வெண்ணெய்நல்லூரிற் கொண்டுபோய் நிறுத்தி அடிமையுங் கொண்ட வரும் , தென்கடல் முனையில் உள்ள கொற்றவையைக் கூடி இன்பங் கொண்டவரும் , பாம்பை அணியும் பொருளாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரேயாகும் .

அஞ்சும் கொண்டு ஆடுவர், ஆவினில்; சேவினை ஆட்சி கொண்டார்;
தஞ்சம் கொண்டார், அடிச்சண்டியை, தாம் என வைத்து உகந்தார்;
நெஞ்சம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டு
நஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .

4
ஆனிடத்துத் தோன்றுகின்ற ஐந்து பொருள்களை ஆடுதல் செய்பவரும் , ஆனேற்றையே ஆளப்படும் பொருளாகக் கொண்டவரும் , தம் அடியை யடைந்த சண்டேசுவர நாயனாரை அடைக்கலப் பொருளாகக் கொண்டு அவரைத் தம்மோடு ஒப்ப வைத்து மகிழ்ந்தவரும் , என்னைத் திருவெண்ணெய்நல்லூரிற் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்டு , என் நெஞ்சத்தை ஈர்த்துக்கொண்டவரும் , நஞ்சத்தை உண்டவருமாகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரேயாகும் .

உம்பரார் கோனைத் திண்தோள் முரித்தார்; உரித்தார், களிற்றை;
செம்பொன் ஆர் தீவண்ணர்; தூ வண்ண நீற்றர்; ஓர் ஆவணத்தால்,
எம்பிரானார், வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட
நம்பிரானார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .

5
தேவர்கட்கு அரசனாகிய இந்திரனைத் தோள் முரித்தவரும் , யானையை உரித்தவரும் , சிவந்த பொன்போல்வதும் , நெருப்புப்போல்வதும் ஆகிய நிறத்தை உடையவரும் , வெள்ளிய நிறத்தையுடைய நீற்றை அணிந்தவரும் என்போலும் அடியவர்கட்குத் தலைவரும் , ஓர் ஆவணத்தினால் என்னைத் திருவெண்ணெய் நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட , நம் அனைவர்க்கும் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது , நமது திருநாவலூரேயாகும் .
Go to top

கோட்டம் கொண்டார், குட மூக்கிலும் கோவலும் கோத்திட்டையும்;
வேட்டம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டார்;
ஆட்டம் கொண்டார், தில்லைச் சிற்றம்பலத்தே; அருக்கனை முன்
நாட்டம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே.

6
திருக்குடமூக்கில் ( கும்பகோணம் ) திருக் கோவலூர் , திருப்பரங்குன்றம் இத்தலங்களைக் கோயிலாகக் கொண்ட வரும் , வேட உருவம் கொண்டு வேட்டையை மேற்கொண்டவரும் , என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்டவரும் , தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் நடன மாடுதலை மேற்கொண்டவரும் , சூரியனை (` பகன் ` என்பவனை ) க் கண் பறித்தவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது நமது திரு நாவலூரேயாகும் .

தாய் அவளாய், தந்தை ஆகி, சாதல் பிறத்தல் இன்றி,
போய் அகலாமைத் தன் பொன் அடிக்கு என்னைப் பொருந்த வைத்த
வேயவனார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட
நாயகனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே.

7
எனக்குத் தாயாகியும் , தந்தையாகியும் இறத்தல் பிறத்தல்கள் இல்லாதவாறு என்னைத் தமது பொன் போலும் திருவடிக் கண் அகலாதபடி இருக்க வைத்த , மூங்கில் இடத்தவரும் , என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்ட தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது , நமது திருநாவலூரேயாகும் .

வாய் ஆடி, மாமறை ஓதி ஓர் வேதியன் ஆகி வந்து;
தீ ஆடியார்; சினக் கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய்,
வேய் ஆடியார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட
நாயாடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .

8
தீயின்கண் நின்று ஆடுபவரும் , சினம் பொருந்திய ஒரு பன்றியின் பின் வேடுவராய்ச் சென்று வில்தொழிலைப் புரிந்த வரும் , பெருமை பொருந்திய வேதத்தை ஓதிக்கொண்டு வேதிய வடிவாய் வந்து சொல்லாடி என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட தலைவராகிய இறைவருக்கு இடமாயிருப்பது , நமது திருநாவலூரேயாகும் .

படம் ஆடு பாம்பு அணையானுக்கும், பாவை நல்லாள் தனக்கும்,
வடம் ஆடு மால்விடை ஏற்றுக்கும், பாகனாய் வந்து ஒரு நாள்
இடம் ஆடியார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட
நடம் ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .

9
படமாடுகின்ற , பாம்பாகிய படுக்கையையுடைய திருமாலுக்கும் , பாவைபோலும் நல்லாளாகிய உமாதேவிக்கும் , மணி வடம் அசைகின்ற ஆனேற்றுக்கும் , ` பாகன் ` எனப்படும் தன்மை யுடையவராய் , ஒருநாள் என்னிடம் வந்து , தம் இடமாக ஆளப்பட்டுப் பொருந்தியுள்ள திருவெண்ணெய் நல்லூரில் என்னைக் கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்ட , நடனமாடும் பெருமானாராகிய இறைவற்கு இடமாயிருப்பது , நமது திருநாவலூரேயாகும் .

மிடுக்கு உண்டு என்று ஓடி ஓர் வெற்பு எடுத்தான் வலியை நெரித்தார்;
அடக்கம் கொண்டு ஆவணம் காட்டி நல் வெண்ணெயூர் ஆளும் கொண்டார்;
தடுக்க ஒண்ணாதது ஓர் வேழத்தினை உரித்திட்டு உமையை
நடுக்கம் கண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .

10
தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி விரைந்து சென்று தமது கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அழித்தவரும் , மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவுநிலையாளர் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் காட்டி என்னை அடிமையும் கொண்டவரும் , தடுக்க வொண்ணாத வலிமையுடைய யானை ஒன்றினை உரித்து , உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும் .
Go to top

நாதனுக்கு ஊர், நமக்கு ஊர், நரசிங்கமுனை அரையன்
ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர், அணி நாவலூர் என்று
ஓத நல்-தக்க வன்தொண்டன்-ஆரூரன்-உரைத்த தமிழ்
காதலித்தும் கற்றும் கேட்பவர் தம் வினைக்கட்டு அறுமே.

11
முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானுக்குரிய ஊரும் , நமக்கு உரிய ஊரும் , நரசிங்கமுனையரையன் அப்பெருமானுக்கு , விரும்பித் தொண்டு செய்யும் ஊரும் அழகிய திருநாவலூரே என்று அனைவரும் உணர்ந்து பாடுமாறு , நல்ல தகுதியை உடையவனும் , ` வன்றொண்டன் ` என்னும் பெயரைப் பெற்றவனுமாகிய நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப்பாடலை விரும்பியும் , கற்றும் கேட்பவரது வினைகள் வலியற்று ஒழியும் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநாவலூர் (திருநாமநல்லூர்)
7.017   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கோவலன் நான்முகன் வானவர் கோனும்
Tune - நட்டராகம்   (திருநாவலூர் (திருநாமநல்லூர்) நாவலீசுவரர் சுந்தராம்பிகை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000