சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.094   திருநாவுக்கரசர்   தேவாரம்

நின்றத் திருத்தாண்டகம் - புறநீர்மை ஹரிகாம்போஜி பூபாளம் காமாஜ் ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=9kNln4y0aWI   Add audio link Add Audio

இரு நிலன் ஆய், தீ ஆகி, நீரும் மாகி, இயமானனாய், எறியும் காற்றும் மாகி,
அரு நிலைய திங்கள் ஆய், ஞாயிறு ஆகி, ஆகாசம் ஆய், அட்ட மூர்த்தி யாகி,
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே யாகி,
நெருநலை ஆய், இன்று ஆகி, நாளை யாகி, நிமிர் புன்சடை அடிகள் நின்ற வாறே!.

1
பெரிய பூமியாகியும் , நீராகியும் , தீயாகியும் , எறியும் காற்றாகியும் , ஆகாயமாகியும் , ஞாயிறாகியும் , அழிவில்லாத நிலையையுடைய திங்களாகியும் , இயமானனாகியும் இங்ஙனம் அட்ட மூர்த்தியாகியும் , பெருமையுடையதாகிய நன்மையும் , சிறுமை உடையதாகிய குற்றமும் , பெண்ணும் , ஆணும் ஏனைய தேவருடைய வடிவங்களும் அருவம் , உருவம் , அருவுருவம் என்னும் தம் மூவகைத் திருமேனிகளும் தாமே ஆகியும் , நேற்று ஆகியும் , இன்று ஆகியும் , நாளை ஆகியும் நீண்ட செஞ்சடையுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத் தக்கதாகும் .

மண் ஆகி, விண் ஆகி, மலையும் மாகி, வயிரமும் ஆய், மாணிக்கம் தானே யாகி,
கண் ஆகி, கண்ணுக்கு ஓர் மணியும் மாகி, கலை ஆகி,   கலை ஞானம் தானே யாகி,
பெண் ஆகி, பெண்ணுக்கு ஓர் ஆணும் மாகி, பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் மாகி,
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் மாகி, எழும் சுடர் ஆய் எம் அடிகள் நின்ற வாறே!.

2
மண் ஆகியும் , விண் ஆகியும் , மலையாகியும் வயிரமாகியும் , மாணிக்கமாகியும் , கண்ணாகியும் , கண்ணுக்குப் பொருத்தமான மணியாகியும் , நூல் ஆகியும் நூலறிவாகியும் பெண் ஆகியும் பெண்ணுக்கு ஏற்ற ஒப்பற்ற ஆணாகியும் , பிரளலயத்துக்கு அப்பால் உள்ள அண்டமாகிய சுத்த மாயாபுவனம் ஆகியும் எண்ணுதற்குப் பொருந்திய பொருள் ஆகியும் அவ்வெண்ணத்தை வெளிப்படுத்தும் ஒப்பற்ற எழுத்தாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும் , எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாகும் .

கல் ஆகி, களறு ஆகி, கானும் மாகி, காவிரி ஆய், கால் ஆறு ஆய், கழியும் மாகி,
புல் ஆகி, புதல் ஆகி, பூடும் மாகி, புரம் ஆகி, புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி,
சொல் ஆகி, சொல்லுக்கு ஓர் பொருளும் மாகி, சுலாவு ஆகி, சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி,
நெல் ஆகி, நிலன் ஆகி, நீரும் மாகி, நெடுஞ்சுடர் ஆய்   நிமிர்ந்து, அடிகள் நின்ற வாறே!.

3
மலையாகியும் களர்நிலமாகியும் காடாகியும் , ஆறாகியும் , வாய்க்காலாகிய வழியாகியும் , கடற்கரைக்கழியாகியும் , புல்லாகியும் , புதராகியும் , பூடு ஆகியும் , நகர் ஆகியும் , புரம் மூன்றிற்கும் அழிவாகியும் சொல்லாகியும் , சொல்லிற்குப் பொருந்திய பொருள் ஆகியும் , போக்கு வரவு ஆகியும் , அப்போக்குவரவுக்கு வேண்டிய இடம் ஆகியும் நிலனாகியும் , நீராகியும் , நெல்லாகியும் , நெடிய ஒளிப் பிழம்பாகியும் எம்பெருமான் நெடுகப்பரவி நின்றவாறு வியக்கத் தக்கதாகும் .

காற்று ஆகி, கார் முகில் ஆய், காலம் மூன்று ஆய், கனவு ஆகி, நனவு ஆகி, கங்குல் ஆகி,
கூற்று ஆகி, கூற்று உதைத்த கொல் களிறும் மாகி, குரை கடல் ஆய், குரை கடற்கு ஓர் கோமானு மாய்,
நீற்றானாய், நீறு ஏற்ற மேனி யாகி, நீள் விசும்பு ஆய், நீள் விசும்பின் உச்சி யாகி,
ஏற்றானாய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற வாறே.

4
காற்றாகியும் , கரியமுகிலாகியும் , இறப்பு நிகழ்வு எதிர்வெனக் காலம் மூன்றாகியும் , கனவாகியும் , நனவாகியும் , இரவாகியும் , நாளின் மற்றொரு கூறாகிய பகலாகியும் அல்லது இயமனால் வரும் சாவு ஆகியும் , இயமனை உதைத்துக் கொன்ற களிறாகியும் , ஒலிக்கும் கடலாகியும் , அக்கடற்குத் தலைவனாம் வருணன் ஆகியும் , நீறணிந்த கோலத்தன் ஆகியும் , நீறணிதற்கு ஏற்ற வடிவத்தன் ஆகியும் , நீண்ட ஆகாயம் ஆகியும் , அவ்வாகாயத்து உச்சியாகியும் , உலகத்தின் தொழிற்பாடுகள் எல்லாவற்றையும ஏற்றுக் கொண்டவனாகியும் , இடபத்தை ஊரும் தலைவனாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும் எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம் .

தீ ஆகி, நீர் ஆகி, திண்மை ஆகி, திசை யாகி, அத் திசைக்கு ஓர் தெய்வம் மாகி,
தாய் ஆகி, தந்தையாய், சார்வும் ஆகி, தாரகையும் ஞாயிறும் தண் மதியும் மாகி,
காய் ஆகி, பழம் மாகி, பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே யாகி,
நீ ஆகி, நான் ஆகி, நேர்மை யாகி, நெடுஞ்சுடர் ஆய்,   நிமிர்ந்து அடிகள் நின்ற வாறே.

5
தீயின் வெம்மையாகியும் , நீரின் தண்மையாகியும் , நிலத்தின் திண்மையாகியும் , திசைகள் ஆகியும் , அத்திசைகள் ஒவ்வொன்றிற்கும் உரிய தெய்வமாகியும் , தாயாகியும் , தந்தையாகியும் , சார்தற்குரிய பற்றுக்கோடாகியும் , நாண் மீனாகியும் , ஞாயிறாகியும் , குளிர் மதியமாகியும் , காயாகியும் , பழங்கள் ஆகியும் , பழத்தில் நின்ற சுவைகள் ஆகியும் , அச்சுவைகளை நுகர்பவன் ஆகியும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்று இடங்கள் ஆகியும் நுண்மை ஆகியும் நீண்ட ஒளிப்பிழம்பாகியும் எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத்தக்கதாகும் .
Go to top

அங்கம் ஆய், ஆதி ஆய், வேதம் மாகி, அருமறையோடு ஐம்பூதம் தானே யாகி,
பங்கம் ஆய், பல சொல்லும் தானே யாகி, பால் மதியோடு   ஆதி ஆய், பான்மை யாகி,
கங்கை ஆய், காவிரி ஆய், கன்னி ஆகி, கடல் ஆகி, மலை யாகி, கழியும் மாகி,
எங்கும் ஆய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற வாறே.

6
ஆறு அங்கங்கள் ஆகியும் , ஆதியாய வேதங்கள் ஆகியும் , அரிய மந்திரங்கள் ஆகியும் , ஐம்பூதங்களின் தலைவராய தேவர்கள் ஆகியும் , புகழ்ச் சொற்களேயன்றி இகழ்ச் சொற்களும் ஆகியும் , வெள்ளிய மதி ஆகியும் , உலகிற்கு முதல் ஆகியும் , வினையாகியும் , கங்கை , காவிரி , கன்னி போன்ற தீர்த்தங்களுக்குரிய தேவர்கள் ஆகியும் , கடலாகியும் , மலையாகியும் , கழி ஆகியும் , எங்கும் நிறைபொருளாகியும் ஏறூர்ந்த தலைவன் ஆகியும் , தோன்றி விளங்கும் ஒளியாகியும் எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம் .

மாதா பிதா ஆகி, மக்கள் ஆகி, மறி கடலும் மால் விசும்பும் தானே யாகி,
கோதாவிரி ஆய், குமரி ஆகி, கொல் புலித் தோல் ஆடைக் குழகன் ஆகி,
போது ஆய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி,
ஆதானும் என நினைந்தார்க்கு எளிதே யாகி, அழல் வண்ண வண்ணர் தாம் நின்ற வாறே!.

7
மாதாபிதா மக்கள் ஆகியும் , அலை எழுந்து மடங்கும் கடலும் பெரிய ஆகாயமும் ஆகியும் , கோதாவிரி குமரிகள் ஆகியும் , கொல்லும் புலியினது தோலை ஆடையாகக் கொண்ட அழகன் ஆகியும் , உரிய பொழுதில் மலர்வதாகிய பூக்கொண்டு புனைந்து புகழ்ந்து நிற்பாருடைய பிறப்பறுக்கும் புனிதன் ஆகியும் . ` யாது நிகழினும் நிகழ்க ` எனக் கவலையற்றுத் தன்னையே நினை வார்க்கு எளிய பொருள் ஆகியும் நெருப்பின் நிறம் போலும் நிற முடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்

ஆ ஆகி, ஆவினில் ஐந்தும் ஆகி, அறிவு ஆகி,   அழல் ஆகி, அவியும் மாகி,
நா ஆகி, நாவுக்கு ஓர் உரையும் மாகி, நாதனாய், வேதத்தின் உள்ளோன் ஆகி,
பூ ஆகி, பூவுக்கு ஓர் நாற்றம் மாகி, பூக்குளால்   வாசம் ஆய் நின்றான் ஆகி,
தே ஆகி, தேவர் முதலும் ஆகி, செழுஞ்சுடர் ஆய், சென்று அடிகள் நின்ற வாறே!.

8
பசுவும் பசுவிடத்துத் தோன்றும் ஐம்பொருளும் ஆகியும் வேள்விக்குரியன அறியும் அறிவும் , வேள்வித்தீயும் , அத்தீயுட்பெய்யும் உணவும் ஆகியும் , நாவும் நாவுக்கு ஏற்ற உரையும் ஆகியும் , நாதமும் வேதத்தின் பொருளும் ஆகியும் , பூவும் , அப்பூவிற் குரிய ஒப்பற்ற நாற்றமும் ஆகியும் , நாற்றம் பூவிற்குள் ஒன்றாய் நிற்கும் ஒற்றுமை நிலையாகியும் , தேவர்களும் தேவர்களின் தலைமைத் தேவரும் ஆகியும் , செழுஞ்சுடராய் எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத்தக்கதாகும் .

நீர் ஆகி, நீள் அகலம் தானே யாகி, நிழல் ஆகி, நீள் விசும்பின் உச்சி யாகி,
பேர் ஆகி, பேருக்கு ஓர் பெருமை யாகி, பெரு   மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி,
ஆரேனும் தன் அடைந்தார் தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார் தாம்
பார் ஆகி, பண் ஆகி, பாடல் ஆகி, பரஞ்சுடர் ஆய், சென்று அடிகள் நின்ற வாறே!.

9
பெரிய மதில்கள் மூன்றையும் எய்தானும் , தன்னை யடைந்தார் யாராயினும் அவரெல்லாரையும் ஆட்கொள்ளவல்லானும் ஆகிய எம் ஈசன் ஆம் அடிகள் நீரின் சுவையும் , நீள அகலங்களும்ஆகியும் , புகழும் புகழுக்குப் பொருந்திய ஒப்பற்ற பெருமையும் ஆகியும் , பூமியின் பொறைக்குணமும் , பண்ணின் இனிமைப் பண்பும் , அப்பண்புடைய பாடலும் ஆகியும் , மேலான ஒளியாகியும் விளங்கி நின்றவாறு வியக்கத்தக்கதாம்

மால் ஆகி, நான்முகனாய், மா பூதம்(ம்) ஆய், மருக்கம் ஆய், அருக்கம் ஆய், மகிழ்வும் மாகி,
பால் ஆகி, எண்திசைக்கும் எல்லை யாகி, பரப்பு ஆகி, பரலோகம் தானே யாகி,
பூலோக புவலோக சுவலோகம்(ம்) ஆய், பூதங்கள் ஆய், புராணன் தானே யாகி,
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய், எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற வாறே!.

10
மாலும் , நான்முகனும் ஆகியும் , பெரும்பூதங்கள் ஆகியும் , பெருக்கமும் , சுருக்கமும் , மகிழ்ச்சியும் , ஆகியும் , எட்டுத் திசைக் கூறும் அவ்வெட்டுத் திசைகளுக்கும் உரிய எல்லையும் ஆகியும் , பரப்பும் பரலோகமும் ஆகியும் , பூலோக புவலோக சுவ லோகங்களும் , அவற்றின் உட்பட்ட அண்டங்களும் ஆகியும் , புராணனுக்குரிய பழமையாகியும் , தான் இன்றித் தாமாக நடைபெறாத சட உலகங்களும் , அவைகளை நடைபெறுவித்தற்கு அமைந்தவனும் ஆகியும் , எழும் ஒளிப்பிழம்பாகியும் , எம்பெருமான் விளங்கி நின்ற வாறு வியக்கத்தக்கதாகும் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: நின்றத் திருத்தாண்டகம்
6.094   திருநாவுக்கரசர்   தேவாரம்   இரு நிலன் ஆய், தீ
Tune - புறநீர்மை   (நின்றத் திருத்தாண்டகம் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Fri, 13 Feb 2026 16:28:04 +0000