ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன் தன்னை, ஆன் அஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க தாளானை, தன் ஒப்பார் இல்லாதானை, சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த தோளானை, தோளாத முத்து ஒப்பானை, தூ வெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த கீளானை, கீழ் வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.
|
1
|
தனக்கு அடிமையான அன்பர்களுக்குத் தானும் அன்பனாய் , பஞ்சகவ்விய அபிடேகம் செய்பவனாய் , நான் அடைக்கலம் புகுந்த திருவடிகளை உடையவனாய் , ஒப்பற்றவனாய் , சந்தனமும் குங்குமமும் வாசக்கலவைகளும் பூசப்பட்ட தோள்களை உடையவனாய் , துளையிடப்படாத முத்தினை ஒப்பவனாய் , தூய வெள்ளிய கோவணத்தைக் கீளோடு இடுப்பில் கட்டியவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள என்றும் அழிதல் இல்லாத பெருமானை அடைக்கலமாக அடைபவர்கள் பிறந்து இறத்தலாகிய கேட்டினை எதிர்காலத்தில் பெறாதார் ஆவர் . | |
சொல் பாவும் பொருள் தெரிந்து, தூய்மை நோக்கி, தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை; நல் பான்மை அறியாத நாயினேனை நன்நெறிக்கே செலும் வண்ணம் நல்கினானை; பல்பாவும் வாய் ஆரப் பாடி, ஆடி, பணிந்து, எழுந்து, குறைந்து, அடைந்தார் பாவம் போக்க- கிற்பானை; கீழ்வேளூர் ஆளும் கோவை; கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.
|
2
|
சிவபெருமானுடைய இயல்புகளை உணர்த்தும் பாடல்களில் உள்ள சொற்களின் பொருளை நன்றாக உணர்ந்து , மலங்கள் பற்றற நீங்கப் பெற்றுப் பசுபோதம் நீங்கி , அருளில் அடங்கி நில்லாதவர்கள் உள்ளத்திலுள்ள அஞ்ஞானத்தை நீக்காதவனாய் , உய்வதற்குரிய வழியை அறியாத நாய் போன்ற கீழ்மையனாகிய என்னை நல்ல வழியில் செல்லும் வண்ணம் விரும்பி ஆட்கொண்டவனாய் , பற்கள் வரிசையாக அமைந்த வாயினால் , உச்சரிப்பில் குறை ஏற்படாதவகையில் பாடியும் ஆடியும் பணிந்து எழுந்தும் , குறை இரந்து தன்னைச் சரணமாக அடைந்தவர்களுடைய பாவங்களைப் போக்கும் ஆற்றலுடையவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள அழிவற்ற பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடுஇலார் . | |
அளை வாயில் அரவு அசைத்த அழகன் தன்னை, ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும் விளைவானை, மெய்ஞ்ஞானப் பொருள் ஆனானை, வித்தகனை, எத்தனையும் பத்தர் பத்திக்கு உளைவானை, அல்லாதார்க்கு உளையாதானை, உலப்பு இலியை, உள் புக்கு என் மனத்து மாசு கிளைவானை, கீழ்வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.
|
3
|
புற்றில் உள்ள பாம்புகளை அணிந்த அழகனாய் , தன்னை விரும்பும் அடியவர்களுக்கு அன்பனாய் , மெய்ஞ்ஞானப் பொருளாய் , பெருந்திறல் உடையவனாய் , பத்தர்களுடைய பத்தி எவ்வளவிற்றாயினும் அதற்கு மனம் இரங்குபவனாய் , பத்தர் அல்லாதவருக்கு இரங்கானாய் , என்றும் அழிவில்லாதவனாய் , என் உள்ளத்துப்புக்கு அங்குள்ள மாசுகளைக் கல்லி எடுத்து நீக்குபவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள அழிவற்ற பெருமானை அடைக்கலம் அடைந்தவர்கள் கேடிலாரே . | |
தாள் பாவு கமல மலர் தயங்குவானைத் தலை அறுத்து மா விரதம் தரித்தான் தன்னை, கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை, கொடுவினையேன் கொடு நரகக்குழியில் நின்றால் மீட்பானை, வித்துருவின் கொத்து ஒப்பானை, வேதியனை, வேதத்தின் பொருள் கொள் வீணை கேட்பானை, கீழ்வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.
|
4
|
தண்டிலே விரிந்த தாமரையில் உறையும் பிரமனுடைய தலை ஒன்றினை அறுத்தவனாய் , மாவிரத சமயத்திற்கு உரிய வேடத்தை அணிந்தவனாய் , கிரகங்களின் பெயரால் அமைந்த கிழமைகள் யாவும் ஆவானாய் , தீவினையை உடைய அடியேன் நின்ற கொடிய நரகக் குழியிலிருந்து அடியேனை மீட்பவனாய் , பவளக் கொத்தினை ஒத்த நிறத்தினனாய் , வேதம் ஓதுபவனாய் , வேதத்தின் பொருள் கொண்ட வீணை ஒலியைக் கேட்பானாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே . | |
நல்லானை, நரை விடை ஒன்று ஊர்தியானை, நால் வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டாச் சொல்லானை, சுடர் மூன்றும் ஆனான் தன்னை, தொண்டு ஆகிப் பணிவார்கட்கு அணியான் தன்னை, வில்லானை, மெல்லியல் ஓர் பங்கன் தன்னை, மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க- கில்லானை, கீழ்வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.
|
5
|
பெரியவனாய் , வெண்ணிறக் காளை வாகனனாய் , நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் அணுகமாட்டாத அருள் ஞானத்தானாய் , மூன்று சுடர்களும் ஆனவனாய் , தொண்டர்களாகித் தன்னைப் பணிபவர்களுக்கு அருகில் உள்ளவனாய் , சுயம்பிரகாசனாய் , பார்வதி பாகனாய் , உண்மையாகத் தன்னை தியானிக்காதவர்கள் வினைகளைப் போக்காதவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே . | |
| Go to top |
சுழித்தானை, கங்கை; மலர் வன்னி, கொன்றை, தூ மத்தம், வாள் அரவம், சூடினானை; அழித்தானை, அரணங்கள் மூன்றும் வேவ; ஆலால-நஞ்சு அதனை உண்டான் தன்னை; விழித்தானை, காமன் உடல் பொடி ஆய் வீழ; மெல்லியல் ஓர் பங்கனை; முன் வேல் நல் ஆனை கிழித்தானை; கீழ்வேளூர் ஆளும் கோவை; கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.
|
6
|
கங்கையைச் சடையில் வளைத்துக் கொண்டவனாய் , அச்சடையில் வன்னி , கொன்றை , ஊமத்தை மலர்கள் , ஒளி பொருந்திய பாம்பு இவற்றைச் சூடியவனாய் , மும்மதில்களும் தீயில் வெந்து சாம்பலாகுமாறு அழித்தவனாய் , ஆலகால விடத்தை உண்டவனாய் , மன்மதன் உடல் பொடியாக விழுமாறு தீக்கண்ணால் விழித்தானாய் , பார்வதி பாகனாய் , முன்னொரு காலத்தில் வேல் போன்ற கூரிய தந்தங்களை உடைய யானைத் தோலைக் கிழித்து உரித்தவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே . | |
உளர் ஒளியை, உள்ளத்தினுள்ளே நின்ற ஓங்காரத்து உள்பொருள் தான் ஆயினானை, விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும் ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை, வளர் ஒளியை, மரகதத்தின் உருவினானை, வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும் கிளர் ஒளியை, கீழ்வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.
|
7
|
அசைகின்ற ஒளிவிளக்காய் , உள்ளத்து நிலை பெற்ற ஓங்காரத்தின் உட்பொருளாய் , வெள்ளொளி உடைய சூரியன் , சந்திரன் , செந்நிறமுடைய அக்கினி என்ற இவையாகி , தேவருலகும் , நிலவுலகும் , தேவருலகுக்கும் மேற்பட்ட ஆகாயமுமாகி , மாணிக்கத்தின் ஒளியும் மரகதத்தின் ஒளியுமாகி , தேவர் எப்பொழுதும் வாழ்த்தித் துதிக்கும் ஒளிமிக்க திருமேனியை உடையவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே . | |
தடுத்தானை, காலனைக் காலால் பொன்ற; தன் அடைந்த மாணிக்கு அன்று அருள் செய்தானை; உடுத்தானை, புலி அதளோடு அக்கும் பாம்பும்; உள்குவார் உள்ளத்தின் உள்ளான் தன்னை; மடுத்தானை, அரு நஞ்சம் மிடற்றுள்-தங்க; வானவர்கள் கூடிய அத் தக்கன் வேள்வி கெடுத்தானை; கீழ்வேளூர் ஆளும் கோவை; கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.
|
8
|
கூற்றுவன் இறக்குமாறு அவனைக் காலால் உதைத்து , தன்னைச் சரணடைந்த மார்க்கண்டேயனுக்கு ஒருகாலத்தில் அருள் செய்தவனாய் , புலித்தோலோடு எலும்பும் பாம்பும் பூண்டவனாய் , தன்னை அன்போடு வழிபடுபவர் உள்ளத்து இருப்பவனாய் , கொடிய நஞ்சினைத் தன் கழுத்தில் தங்குமாறு உண்டவனாய் , தேவர்கள் கூடியிருந்த தக்கனுடைய வேள்வியை அழித்தவனாய் , உள்ள கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே . | |
மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை, மயானத்தில் கூத்தனை, வாள் அரவோடு என்பு பூண்டானை, புறங்காட்டில் ஆடலானை, போகாது என் உள் புகுந்து இடம் கொண்டு என்னை ஆண்டானை, அறிவு அரிய சிந்தையானை, அசங்கையனை, அமரர்கள் தம் சங்கை எல்லாம் கீண்டானை, கீழ்வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.
|
9
|
இறந்தவர்களுடைய எலும்புகளை அணியும் இயல்பினனாய் , கடவூர் மயானம் முதலிய இடங்களில் கூத்தாடுபவனாய் , ஒளி பொருந்திய பாம்போடு எலும்பை அணிபவனாய் , சுடுகாட்டில் ஆடுபவனாய் , என் உள்ளத்தில் இடம் பெற்று , அதனை விடுத்து நீங்காது , என்னை அடிமை கொண்டானாய் , தன் உள்ளத் திருப்பதனைப் பிறர் அறிய இயலாதவனாய் , அச்சம் இல்லாதவனாய்த் தேவர்களின் அச்சத்தைப் போக்கியவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே . | |
முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான் தானும் முதுகு இற, முன்கைந் நரம்பை எடுத்துப் பாட, பறிப்பான் கைச் சிற்றரிவாள் நீட்டினானை; பாவியேன் நெஞ்சு அகத்தே பாதப் போது பொறித்தானை; புரம் மூன்றும் எரி செய்தானை; பொய்யர்களைப் பொய் செய்து போது போக்கிக் கிறிப்பானை; கீழ்வேளூர் ஆளும் கோவை; கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.
|
10
|
தனக்கு அறிவுரை கூறிய தேர்ப்பாகனிடம் கடுஞ் சொற்கள் பேசிக் கயிலைமலையை அசைத்த இராவணன் முதுகு நொறுங்குமாறு அழுத்திப்பின் அவன் தன் கை நரம்புகளை வீணைத் தந்திகளாகக் கொண்டு பாட மலையை அசைத்த அவனுக்குச் சிறிய வாளை அருள் செய்தவனாய் , அடியேன் உள்ளத்தே தன் திருவடிகளைப் பதித்தவனாய் , மும்மதில்களையும் எரித்துச் சாம்பல் ஆக்கியவனாய் , அன்பின்றி வழிபடுபவர்களுக்குத் தானும் அருள்புரிவான் போன்று காட்டி வஞ்சிப்பவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே . | |
| Go to top |