சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.054   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) - திருத்தாண்டகம் அருள்தரு தையல்நாயகியம்மை உடனுறை அருள்மிகு வைத்தியநாதர் திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=mpXiqrBMFK4   Add audio link Add Audio

ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு முடி அயன் மால் அறியா வண்ணம்
நீண்டானை; நெடுங்கள மா நகரான் தன்னை; நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம்
கீண்டானை; கேதாரம் மேவினானை; கேடு இலியை; கிளர் பொறிவாள் அரவோடு என்பு
பூண்டானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற  நாள் போக்கினேனே!.

1
அடியேனை அடிமையாகக் கொண்டு ஆண்டவனாய், திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் அறியா வண்ணம் அனற்பிழம்பாய் நீண்டவனாய், நெடுங்களக் கோயிலில் உறைவானாய், சக்கரப்படையால் பேராற்றலுடைய சலந்தரனுடைய மார்பினைப் பிளந்தவனாய், கேதாரத்தில் உறைவோனாய், ஒரு காலத்தும் அழிதல் இல்லாதவனாய், ஒளி வீசும் புள்ளிகளை உடைய பாம்போடு எலும்பினை அணிகலனாகப் பூண்டவனாகிய புள்ளிருக்கு வேளூர்ப் பெருமானைத் துதிக்காமல் பல நாள்களை வீணாகக் கழித்து விட்டேனே.

சீர்த்தானை, சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானை, சிவன் தன்னை, தேவ தேவை,
கூர்த்தானை, கொடு நெடுவேல் கூற்றம் தன்னைக் குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம்
பேர்த்தானை, பிறப்பு இலியை, இறப்பு ஒன்று இல்லாப் பெம்மானை, கைம்மாவின் உரிவை பேணிப்
போர்த்தானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.

2
அடியேனுடைய உள்ளத்தில் சிறப்பாகக் கிட்டினவனாய் விளங்குகின்ற சிவனாகிய தேவதேவனாய், மிக நுண்ணியனாய், கொடிய நீண்ட வேலை ஏந்தி வந்த கூற்றுவனைத் திருவடியால் உதைத்து, முனிவனாகிய மார்க்கண்டேயன் கொண்ட யம பயத்தைப் போக்கியவனாய், பிறப்பு இறப்பு இல்லாத தலைவனாய், யானைத் தோலை விரும்பிப் போர்த்தவனாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

பத்திமையால் பணிந்து, அடியேன் தன்னைப் பல்-நாள் பாமாலை பாடப் பயில்வித்தானை;
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை; எம்மானை; என் உள்ளத்துள்ளே ஊறும்
அத் தேனை; அமுதத்தை; ஆவின் பாலை; அண்ணிக்கும் தீம் கரும்பை; அரனை; ஆதிப்-
புத்தேளை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே  ஆற்ற நாள் போக்கினேனே!.

3
அடியேன் பக்தியோடு வணங்கித் தன்னைப் பலநாளும் பாமாலைகளால் போற்றுமாறு பழக்கியவனாய், எல்லாத்தெய்வங்களும் துதிக்கும் தெய்வமாய், என் தலைவனாய், என் உள்ளத்து ஊறும் தேன் அமுதம் பசுப்பால், இனிய கரும்பு என்பன போன்று இனியனாய்ப் பகைவரை அழிப்பவனாய், ஆதிக் கடவுளாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாமல் ஆற்ற நாள் போக்கினேனே.

இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி, இடர்பாவம் கெடுத்து, ஏழையேனை உய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டி, தன் போல் சிவலோக நெறி அறியச் சிந்தை தந்த
அருளானை; ஆதி மா தவத்து உளானை; ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற
பொருளானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.

4
என் இருண்ட உள்ளத்திலுள்ள அஞ்ஞானத்தைப் போக்க அறிவற்ற என் துயரங்களையும் தீவினைகளையும் போக்கி, நான் கடைத்தேறுமாறு என் தெளிவற்ற மனத்தில் தெளிவு பிறப்பித்து, தன்னைப் போலச் சிவலோகத்தின் வழியை அறியும் உள்ளத்தை வழங்கிய அருளாளனாய், தொடக்கத்திலிருந்தே பெரிய தவத்தில் நிலைபெற்றிருப்பவனாய், நான்கு வேதங்கள் ஆறு அங்கங்கள் இவற்றிற்கு அப்பாற்பட்ட பொருளாய் உள்ள புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாமல் ஆற்ற நாள் போக்கினேனே.

மின் உருவை; விண்ணகத்தில் ஒன்று ஆய், மிக்கு வீசும் கால் தன் அகத்தில் இரண்டு ஆய், செந்தீத்-
தன் உருவில் மூன்று ஆய், தாழ் புனலில் நான்கு ஆய், தரணிதலத்து அஞ்சு ஆகி, எஞ்சாத் தஞ்ச
மன் உருவை; வான் பவளக்கொழுந்தை; முத்தை; வளர் ஒளியை; வயிரத்தை; மாசு ஒன்று இல்லாப்
பொன் உருவை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.

5
மின்னல் போன்று பிரகாசிக்கும் உருவினனாய், வானத்தில் ஒலி என்ற ஒரே பண்பாய், வீசும் காற்றில் ஒலி ஊறு என்ற இருபண்புகளாய், சிவந்த நெருப்பில் ஒளி, ஊறு, ஒலி என்ற முப்பண்புகளாய், பள்ளம் நோக்கிச் செல்லும் நீரில் சுவை, ஒளி, ஊறு, ஒலி என்ற நான்கு பண்புகளாய், நிலத்தில் நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஒலி என்ற ஐந்து பண்புகளாய்க் குறையாத புகலிடமாக நிலைபெற்ற பொருளாய், பவளக் கொழுந்தாய், முத்தாய், வளர் ஒளியாய், வயிரமாய், பொன்போலும் நிறமுடைய புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
Go to top

அறை ஆர் பொன்கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை அம்பலத்துள் நடம் ஆடும் அழகன் தன்னை,
கறை ஆர் மூ இலை நெடுவேல் கடவுள் தன்னை,   கடல் நாகைக்காரோணம் கருதினானை,
இறையானை, என் உள்ளத்துள்ளே விள்ளாது இருந்தானை, ஏழ்பொழிலும் தாங்கி நின்ற
பொறையானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.

6
பொன்னாலாகிய கழல் ஒலிக்கத் தில்லை அம்பலத்துள் கூத்தாடும் அழகனாய், விடக்கறை பொருந்திய முத்தலைச் சூலப்படையனாய்க் கடலை அடுத்த நாகைக் காரோணத்தை உறைவிடமாக விரும்பியவனாய், என் உள்ளத்துள்ளே தங்கி நீங்காது இருந்தவனாய், ஏழுலகப் பாரத்தையும் தாங்குபவனாய், உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

நெருப்பு அனைய திருமேனி வெண்நீற்றானை, நீங்காது என் உள்ளத்தினுள்ளே நின்ற
விருப்பவனை, வேதியனை, வேதவித்தை, வெண்காடும்   வியன்துருத்தி நகரும் மேவி
இருப்பவனை, இடை மருதோடு ஈங்கோய் நீங்கா இறையவனை, எனை ஆளும் கயிலை என்னும்
பொருப்பவனை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே   ஆற்ற நாள் போக்கினேனே!.

7
நெருப்பினை ஒத்த சிவந்த திருமேனியில் வெண்ணீறு அணிந்தவனாய், என் உள்ளத்தினுள்ளே நீங்காது விரும்பி இருப்பவனாய், வேதம் ஓதுபவனாய், வேதத்தை நன்கு உணர்ந்தவனாய், வெண்காடு, துருத்தி, இடைமருது, ஈங்கோய்மலை இவற்றை நீங்காத இறையவனாய், என்னை ஆட்கொண்ட, கயிலாய மலையை உறைவிடமாகக் கொண்ட புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை, பிரிவு இலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை, மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னை, திரிபுரங்கள் தீ எழத் திண் சிலை கைக் கொண்ட
போரானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.

8
ஆயிரம் திருநாமங்களை முன்னின்று உச்சரித்துத் தேவர்கள் துதிக்கும் பெருமானாய்த் தன்னை விடுத்து நீங்காத அடியவர்களுக்கும் என்றும் பிறப்பெடுக்கவாராத வீடுபேற்றுச் செல்வத்தை வழங்குபவனாய், மந்திரமும் அவற்றைச் செயற்படுத்தும் முறைகளும் மருந்துமாகித் தீராத நோய்களைப் போக்கியருள வல்லானாய், திரிபுரங்கள் தீப்பற்றிச் சாம்பலாகுமாறு திண்ணிய வில்லைக் கைக்கொண்டு போரிடுதலில் ஈடுபட்டவனான புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

பண்ணியனை, பைங்கொடியாள் பாகன் தன்னை, படர் சடைமேல் புனல் கரந்த படிறன் தன்னை,
நண்ணியனை, என் ஆக்கித் தன் ஆனானை, நால் மறையின் நல் பொருளை, நளிர் வெண்திங்கள்
கண்ணியனை, கடிய நடை விடை ஒன்று ஏறும் காரணனை, நாரணனை, கமலத்து ஓங்கும்
புண்ணியனை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.

9
எல்லாப் பொருள்களையும் ஆக்கியவனாய்ப் பார்வதிபாகனாய், பரவிய சடையிலே கங்கையை மறைத்தவஞ்சகனாய், எனக்குத் துணையாய், உடன் நின்று என்னைத் திருத்தித் தன்னிடத்தினின்றும் நீங்காது அணைத்துக்கொண்டவனாய், நான் மறையின் சிறந்த பொருளாய், குளிர்ந்த வெண்பிறையை முடிமாலையாகச் சூடியவனாய், விரைந்து செல்லும் காளையை இவர்ந்த உலக காரணனாய், நாரணனாய், தாமரையில் தங்கும் பிரமனாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

இறுத்தானை, இலங்கையர் கோன் சிரங்கள் பத்தும்; எழு நரம்பின் இன் இசை கேட்டு இன்பு உற்றானை;
அறுத்தானை, அடியார் தம் அருநோய் பாவம்; அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானை; கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை;   கனல், மழுவும், கலையும், அங்கை
பொறுத்தானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.

10
இராவணனுடைய பத்துத் தலைகளையும் நசுக்கியவனாய், பின் அவன் எழுப்பிய நரம்பின் இசை கேட்டு மகிழ்ந்தவனாய், அடியார்களுடைய கொடிய நோய்களையும் தீவினைகளையும் போக்கியவனாய், அலைவீசும் கடலின் விடமுண்ட நீல கண்டனாய், நெற்றிக்கண் தீயினால் மன்மதனுடைய உடலை எரித்தவனாய், தீப்பொறி கக்கும் மழுப்படையையும் மானையும் அழகிய கைகளில் கொண்டவனாய், உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்)
2.043   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம்,
Tune - சீகாமரம்   (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
5.079   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெள் எருக்கு அரவம் விரவும்
Tune - திருக்குறுந்தொகை   (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
6.054   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு
Tune - திருத்தாண்டகம்   (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000