பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்! ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல் மேவராய், மிகவும் மகிழ்ந்து உள்குமின்! காவலாளன் கலந்து அருள்செய்யுமே.
|
1
|
பாவமும் பழியும் ஆகிய பற்றுக்கள் அறுதலை விரும்புபவர்களே ! பஞ்சகவ்வியம் உகந்து திருவபிடேகம் கொள்ளும் அப்பெருமான் கழலை மகிழ்ந்து மேவுபவராய் நினைவீராக ; காத்து ஆள்வோனாகிய இறைவன் கலந்து அருள் செய்வான் . | |
கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்? கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்? ஒங்கு மாகடல் ஓதம் நீராடில் என்? எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.
|
2
|
கங்கை நீராடிலும் , காவிரியில் நீராடிலும் , மணமும் குளிர்ச்சியும் உடைய குமரித்துறையில் நீராடிலும் , பெருகி ஒலிக்கின்ற கடல் நீர்த்துறைதோறும் நீராடிலும் என்ன பயன் ? எங்கும் இறைவன் என்னாதவர்க்கு இவற்றாற் பயன் இல்லை . | |
பட்டர் ஆகில் என்? சாத்திரம் கேட்கில் என்? இட்டும் அட்டியும் ஈதொழில் பூணின் என்? எட்டும் ஒன்றும் இரண்டும் அறியில் என்? இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.
|
3
|
பட்டர் ஆயினும் , சாத்திரங்கள் பல கேட்பினும் , இட்டும் சேர்த்தும் கொடுக்கும் தொழில் பூணிலும் , எட்டும் ஒன்றும் இரண்டும் அறிந்தாலும் என்ன பயன் ? விருப்பம் இறைவனுக்கு என்னாதவர்க்கு இவற்றாற் பயன் இல்லையாம் . | |
வேதம் ஓதில் என்? வேள்விகள் செய்கில் என்? நீதி நூல்பல நித்தல் பயிற்றில் என்? ஓதி அங்கம் ஓர் ஆறும் உணரில் என்? ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே.
|
4
|
வேதம் ஓதினாலும் , வேள்விகள் செய்தாலும் , நீதிநூல்கள் பலவற்றை நித்தமும் பயிற்றினாலும் , ஆறங்கங்களை ஓதி உணர்ந்தாலும் என்ன பயன் ? ஈசனை உள்குபவர்க்கு அன்றி மற்றவர்க்கு இவற்றாற் பயன் இல்லையாம் . | |
காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என்? வேலை தோறும் விதிவழி நிற்கில் என்? ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என்? ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே.
|
5
|
காலையில் சென்று கலந்து நீரில் மூழ்கினாலும் , வேளைகள் தோறும் விதிவழிநின்றாலும் , ஆலை போன்று வேள்வி அடைந்து வேட்பிலும் என்னபயன் ? உள்ளம் பொருந்த இறைவன் என்பார்க்கேயன்றி மற்றவர்க்கு இவற்றாற் பயன் இல்லை . | |
| Go to top |
கானம், நாடு, கலந்து திரியில் என்? ஈனம் இன்றி இருந் தவம் செய்யில் என்? ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கில் என்? ஞானன் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே.
|
6
|
காட்டுப் பகுதிகளிற் கலந்து திரிந்தாலும் , இழி வின்றிப் பெருந்தவம் செய்தாலும் , ஊன் உண்ணுதலையொழிந்து வானத்தை நோக்கினாலும் என்ன பயன் ? ஞானமயமாகியவன் என்பவர்க்கேயன்றி மற்றவர்க்கு இவற்றால் நற்பயன் இல்லை . | |
கூட வேடத்தர் ஆகிக் குழுவில் என்? வாடி ஊனை வருத்தித் திரியில் என்? ஆடல் வேடத்தன் அம்பலக்கூத்தனைப் பாடலாளர்க்கு அல்லால், பயன் இல்லையே.
|
7
|
வேடங்கள் கூடியவராகித் திரண்டாலும் , உடலை வாடிவருத்தித் திரிந்தாலும் என்ன பயன் ? ஆடல்வேடத்தை உடையவனாகிய அம்பலக்கூத்தனைப் பாடுபவர்க்கு அல்லால் மற்றையோர்க்குப் பயன் இல்லை . | |
நன்று நோற்கில் என்? பட்டினி ஆகில் என்? குன்றம் ஏறி இருந் தவம் செய்யில் என்? சென்று நீரில் குளித்துத் திரியில் என்? என்றும், ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே.
|
8
|
நன்கு தவம்நோற்றாலும் , உண்ணாவிரதம் கிடப்பினும் , மலையில் ஏறிப் பெருந்தவம் செய்தாலும் , சென்று நீரிற் குளித்துத் திரிந்தாலும் என்ன பயன் ? என்றும் ஈசன் என்பார்க்கேயன்றி மற்றையோர்க்கு இவற்றாற் பயன் இல்லை . | |
கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை- ஆடினாலும், அரனுக்கு அன்பு இல்லையேல், ஓடும் நீரினை ஓட்டைக் குடத்து அட்டி மூடி வைத்திட்ட மூர்க்கனொடு ஒக்குமே.
|
9
|
கோடிதீர்த்தங்கள் தோறும் கலந்து குளித்து அவற்றில் நீராடிக் கிடந்தாலும் அரனிடத்து அன்பு இல்லையாயின் . ஓடும் இயல்பினை உடைய நீரை ஓட்டைக் குடத்திலே நிறைத்து மூடிவைத்திட்ட மூர்க்கன் ஒருவனின் செயலோடே அது ஒக்கும் . | |
மற்று நல்-தவம் செய்து வருந்தில் என்? பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இறக் குற்ற, நல் குரை ஆர் கழல், சேவடி பற்று இலாதவர்க்குப் பயன் இல்லையே.
|
10
|
மற்றும் நற்றவங்கள் பல செய்து வருந்தினால் என்ன பயன் ? திருக்கயிலாயத்தை உற்று எடுத்த இராவணனது உடல் புகுந்து இற்றுப்போம்படிப் பொருந்திய நல்லொலிக் கழல்களணிந்த சேவடியினிடத்துப் பற்றுதல் இல்லாதவர்க்குப் பயனே இல்லை . | |
| Go to top |