பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு, விண்ணப்பம்: போற்றி செய்யும்
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல், இருங் கூற்று அகல
மின் ஆரும் மூஇலைச்சூலம் என்மேல் பொறி-மேவு கொண்டல்
துன் ஆர் கடந்தையுள்-தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே!
|
1
|
விரும்பி மேகங்கள் தங்குதல் பொருந்திய பெண்ணாகடத்திலுள்ள திருக்கோயிலாகிய தூங்கு ஆனை மாடத்தில் ஒளிப் பிழம்பாய் இருக்கும் பெருமானே! உன்னுடைய பொன்போன்ற திருவடிகளில் அடியேன் செய்யும் விண்ணப்பமாகிய வேண்டுகோள் ஒன்று உளது. அஃதாவது அடியேனுடைய உயிரைப் பாதுகாக்கும் விருப்பம் உனக்கு உண்டானால், யான் சமண சமயத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கினவன் என்று மக்கள் கூறும் பழிச் சொற்கள் நீங்குமாறு, உன்னுடைய அடிமையாக அடியேனை எழுதிக் கொண்டாய் என்பது புலப்பட ஒளிவீசும் முத்தலைச் சூலப் பொறியை அடியேன் உடம்பில் பொறித்து வைப்பாயாக. | |
ஆவா! சிறுதொண்டன் என் நினைந்தான்! என்று அரும் பிணிநோய்
காவாது ஒழியின் கலக்கும், உன்மேல் பழி; காதல் செய்வார்
தேவா! திருவடி நீறு என்னைப் பூசு-செந்தாமரையின்
பூ ஆர் கடந்தையுள்-தூங்கானை மாடத்து எம் புண்ணியனே!
|
2
|
செந்தாமரைப் பூக்கள் நிறைந்த கடந்தையுள் தூங்கானைமாடத்து உறையும் எம் புண்ணியனே! `ஐயோ` இச்சிறு தொண்டன் என்னை விருப்புற்று நினைத்தான் என்று திருவுளம் பற்றிப் பெரிய பிணிகளும் நோய்களும் தாக்காதவாறு அடியேனைப் பாதுகாவாமல் விடுத்தால் புண்ணியனாகிய உனக்குப் பழி வந்து சேரும். ஆதலின் விரும்பும் அடியவர் தலைவனாகிய நீ உன் திருவடிகள் தோய்ந்த நீற்றினை அடியேன் மீது பூசுவாயாக. | |
கடவும் திகிரி கடவாது ஒழியக் கயிலை உற்றான்
படவும் திருவிரல் ஒன்று வைத்தாய்; பனிமால்வரை போல்
இடபம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய்-இருஞ் சோலை திங்கள்
தடவும் கடந்தையுள்-தூங்கானை மாடத்து எம் தத்துவனே!
|
3
|
பெரிய சோலைகளிலே சந்திரன் பொருந்தி உலவும் கடந்தைத் தலத்தில் உள்ள தூங்கானை மாடத்தில் உறையும் எம் மெய்ப்பொருளே! செலுத்திய தேர்ச்சக்கரம் மேல் உருளாது தடைப்படக் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணன் உடல் நெரியுமாறு அழகிய கால்விரல் ஒன்றால் அழுத்தியவனே! பெரிய இமய மலைபோன்ற வெண்ணிறமுடைய காளை வடிவப் பொறியை அடியேன் உடலில் பொறித்து அடியேனை உன் தொண்டனாக ஏற்றுக் கொள்வாயாக. | |