தம் மானம் காப்பது ஆகித் தையலார் வலியுள் ஆழ்ந்து
அம்மானை, அமுதன் தன்னை, ஆதியை, அந்தம் ஆய
செம் மான ஒளி கொள் மேனிச் சிந்தையுள் ஒன்றி நின்ற
எம்மானை,-நினைய மாட்டேன்;-என் செய்வான் தோன்றினேனே!
|
1
|
மகளிருக்கு அவமானம் உண்டாகாதவாறு காக்கும் முயற்சியில் ஈடுபட்டு , அவர்களுடைய கண்வலையிற்பட்டு , அதனால் , தலைவனாய் அமுதம் போன்று இனியனாய் , எல்லாவற்றுக்கும் ஆதியும் அந்தமும் தானாக உள்ளவனாய் , செம்மேனி அம்மானாய் , அடியேனுடைய உள்ளத்தில் நிலைபெற்றிருக்கும் எம்முடைய தலைவனை விருப்புற்று நினையமாட்டேன் . யாது செய்வதற்காக இவ்வுலகிற் பிறப்பெடுத்துள்ளேன் நான் ? | |
மக்களே, மணந்த தாரம், வல் வயிற்று அவரை, ஓம்பும்
சிக்குளே அழுந்தி, ஈசன் திறம் படேன்; தவம் அது ஓரேன்;
கொப்புளே போலத் தோன்றி அதனுளே மறையக் கண்டும்,
இக் களேபரத்தை ஓம்ப, என் செய்வான் தோன்றினேனே!
|
2
|
மனைவி , மக்கள் , அவர்களுடைய மக்கள் ஆகியவர்களைப் பாதுகாக்கும் பாசப்பிணைப்பான வாழ்க்கைச் சிக்கலுக்குள் அழுந்தி எம்பெருமான் பற்றிய செய்திகளில் ஈடுபடாது , தவம் என்பதனை உணராது , நீர்க்குமிழி போலத் தோன்றிமறையும் பயனற்ற இவ்வுடம்பைப் பாதுகாப்பதற்கே முயல்கின்றேன் . யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ? | |
கூழையேன் ஆகமாட்டேன், கொடு வினைக் குழியில் வீழ்ந்து
ஏழின் இன் இசையினாலும் இறைவனை ஏத்த மாட்டேன்;
மாழை ஒண் கண்ணின் நல்ல மடந்தை மார் தமக்கும் பொல்லேன்
ஏழையேன் ஆகி, நாளும் என் செய்வான் தோன்றினேனே!
|
3
|
கொடிய வினையின் பயனாகிய குழியில் விழுந்து எம்பெருமான் திருவடிக்கண் அன்பினால் குழையும் இயல்பு இல்லாதேனாய் , ஏழிசையால் இறைவன் பெருமையைப் பாடமாட்டாதேனாய் , இளைய ஒளி பொருந்திய கண்களை உடைய நல்ல பெண்களுக்கும் பொலிவு இல்லாதேனாய் அறிவற்றேனாய்க் காலத்தைக் கழித்தவனாயினேன் . என்ன செயல் செய்வதற்காக இவ்வுலகில் பிறப்பெடுத்தேன் நான் ? | |
முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினைய மாட்டேன்;
பின்னை நான் பித்தன் ஆகிப் பிதற்றுவன், பேதையேன் நான்;
என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை
என் உளே நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
|
4
|
முற்பிறப்பில் செய்த என் வினைப்பயனாலே பெருமானை நினைக்க இயலாத அடியேன் உலகியலிலே ஈடுபட்டு இவ்வுலக இன்பங்களையே மேம்பட்டனவாகப் பிதற்றிக் கொண்டிருப்பேனானேன் . அறிவில்லாத அடியேன் என் உள்ளத்தினுள்ளே நிலை பெற்றிருத்தலை தமது சிறப்பியல்பாக உள்ள பெருமானை என்னுள் வைத்துத் தியானிக்க மாட்டாதேனாகின்றேன் . வேறு யாது செயல் செய்வதற்காக இவ்வுலகில் தோன்றினேன் நான் ? | |
கறை அணி கண்டன் தன்னைக் காமரம் கற்றும் இல்லேன்;
பிறை நுதல் பேதை மாதர் பெய் வளையார்க்கும் அல்லேன்;
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும்
இறையேயும் ஏத்த மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
|
5
|
நீலகண்டனை வசப்படுத்த இசைத்துறைகளைக் கற்றேனும் அல்லேன் . பிறைபோன்ற நெற்றியை உடைய வளையலை அணிந்த பேதைமைக் குணத்தை உடைய மகளிரை வசப்படுத்தும் திறத்தேனும் அல்லேன் . வேதங்களை ஓதும் நாவினை உடைய எம் பெருமானை நிலையாக நின்று ஒருநாளும் சிறிதளவும் போற்ற மாட்டாதேனாகிறேன் . வேறு யாது செயல் செய்வதற்காக இவ்வுலகில் பிறப்பெடுத்தேன் நான் ? | |
| Go to top |
வளைத்து நின்று, ஐவர்கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய,
தளைத்து வைத்து உலையை ஏற்றித் தழல்-எரி மடுத்த நீரில்-
திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல்-தெளிவு இலாதேன்,
இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே!
|
6
|
ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் இவ்வுடம்பில் என் உள்ளத்தைச் சுற்றி நின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால் , எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க , அந்நீரிலே பிணியை அவிழ்த்து நீந்தவிட்ட அளவிலே மகிழ்வோடி நீந்தி விளையாடிக்கொண்டு சூட்டில் வெந்து உயிர் நீங்க இருக்கும் அவலத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டாத ஆமையைப் போல உள்ளத்தெளிவு இல்லாதேனாய் வாழ்க்கையில் இளைத்து நின்று தடுமாறுகின்றேன் . வேறு யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ? | |