சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.011   திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது - நமசிவாயத் திருப்பதிகம் - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
யானைக்குத் தப்பி ஓடிய சமணர் மன்னவனிடம் சென்றனர். பலவாறு வீழ்ந்து புலம்பினர். பல்லவனும் இனி என்செய்வது என்று வினவினான். அவன் அழிந்தால்தான் நம் அவமானம் தீரும்; எனவே கல்லோடு கட்டிக் கடலில் தள்ளுவதே வழி என்று சமணர் கூறினர். அவ்வாறே பல்லவனும் பணித்தான். கொலையாளர்களும் திருநாவுக் கரசரைக் கல்லோடு பிணைத்துக் கடலில் தள்ளித் திரும்பினர். திருநாவுக்கரசர் சொற்றுணை வேதியன் என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி திருவைந்தெழுத்தின் பெருமையைத் திருப்பதிகத்தால் அருளிச் செய்தார். இருவினைக் கயிறுகளால் மும்மலக் கல்லில் கட்டிப் பிறவிப் பெருங்கடலில் போடப்பெற்ற உயிர்களைக் கரையேற்றவல்ல திருவைந்தெழுத்தின் பெருமையால் கல் தெப்பமாகக் கடலில் மிதந்தது. கயிறு அறுந்தது. கடல் மன்னனாகிய வருணன் திருநாவுக்கரசரை அலைகளாகிய கைகளால் திருமுடிமேல் தாங்கிக் கொண்டுவந்து திருப்பாதிரிப்புலியூர் என்னும் தலத்தின் பக்கத்தில் கொண்டு வந்து சேர்த்தான்.
கொடிய மிருகங்கள், மனிதர்களளிடம் இருந்து தப்பிக்க
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=GcaDjvjf6fA   Add audio link Add Audio

சொல்-துணை வேதியன், சோதி வானவன்,
பொன்துணைத் திருந்து அடி பொருந்தக் கைதொழ,
கல்-துணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்,
நல்-துணை ஆவது நமச்சிவாயவே!

1
வேதமான வாசகத்திற்கு நிகரான வாக்கியப் பொருளாக உள்ளவனாய்ப் பரஞ்சோதியாகிய அழியாத வீட்டுலகினனாய் உள்ள எம்பெருமானுடைய , பொலிவுடைய , தமக்குத்தாமே இணையான சேவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுதலால் கல்லைத் துணையாகச் சேர்த்து அதனோடு இணைத்துக் கடலில் தள்ளிவிட்டாலும் எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தே நமக்குப் பெரிய துணையாகும் .

பூவினுக்கு அருங் கலம் பொங்கு தாமரை;
ஆவினுக்கு அருங் கலம் அரன் அஞ்சு ஆடுதல்;
கோவினுக்கு அருங் கலம் கோட்டம் இல்லது;
நாவினுக்கு அருங் கலம் நமச்சிவாயவே!

2
பூக்களுக்குள் விலைமதிப்பரிய ஆபரணம் இதழ்கள் மிக்க தாமரையாகும் . பசுக்களுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் சிவபெருமான் அபிடேகத்துக்குப் பஞ்சகவ்வியம் உதவுதல் . அரசனுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் செங்கோல் வளையாமல் ஆட்சி செய்வதாம் . நாவினுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் திருவைந்தெழுத்தேயாகும் .

விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல்
உண்ணிய புகில், அவை ஒன்றும் இல்லை ஆம்;
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே!

3
வானளாவ அடுக்கிய விறகிலே கொடிய நெருப்பு அவற்றை உண்பதற்கு உள்ளே புகுந்தால் விறகினுள் ஒன்றும் மீதியிராது எல்லாம் சாம்பலாகும் . இறைவனால் படைக்கப்பட்ட உலகில் மக்கள் பலகாலும் பழகிச் செய்த பாவத்தை நெருங்கி நின்று போக்குவது திருவைந்தெழுத்தேயாகும் .

இடுக்கண் பட்டு இருக்கினும், இரந்து யாரையும்,
விடுக்கிற்பிரான்! என்று வினவுவோம் அல்லோம்;
அடுக்கற் கீழ்க் கிடக்கினும், அருளின், நாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே!

4
எவ்வளவு வறுமைத் துன்பத்தால் நலிவுறினும் எம்பெருமானை விடுத்து வேறுயாரையும் இரந்து ` என் துன்பத்தைப் போக்கினால் நீ எம்பிரானே ` என்று கூறித் துயரத்தைப் போக்கு எனக் கேட்போம் அல்லோம் . மலையின் அடியில் அகப்பட்டுக் கிடந்தாலும் அருளினால் நமக்கு ஏற்படும் நடுக்கத்தை நீக்குவது திருவைந்தெழுத்தேயாகும் .

வெந்த நீறு அருங் கலம், விரதிகட்கு எலாம்;
அந்தணர்க்கு அருங் கலம் அருமறை, ஆறு அங்கம்;
திங்களுக்கு அருங் கலம் திகழும் நீள் முடி
நங்களுக்கு அருங் கலம் நமச்சிவாயவே.!

5
விரதத்தை மேற்கொண்ட சான்றோர்களுக்குத் திருநீறு சிறந்த அணியாகும் . நான்மறை ஆறங்கம் ஓதுதல் அந்தணர்களுக்குச் சிறந்த அணியாகும் . பிறைக்குச் சிவபெருமானுடைய அழகிய சடை சிறந்த அணியாகும் . எம்மைப் போன்ற அடியார்களுக்குச் சிறந்த அணி திருவைந்தெழுத்தேயாகும் .
Go to top

சலம் இலன்; சங்கரன்; சார்ந்தவர்க்கு அலால்
நலம் இலன்; நாள்தொறும் நல்குவான், நலன்;
குலம் இலர் ஆகிலும், குலத்திற்கு ஏற்பது ஓர்
நலம் மிகக் கொடுப்பது நமச்சிவாயவே!

6
மனக்கோட்டம் இல்லாது எல்லார்க்கும் நன்மையைச் செய்யும் சிவபெருமான் , தன்னையே பற்றுக்கோடாகச் சார்ந்த அடியவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உயர்நலன் செய்யான் . அவர்களுக்கு நாடோறும் விரும்பியதனை நல்காது வினைப்பயன்படி நுகருமாறு விடுப்பான் . உயர்ந்த குடும்பத்தில் அடியவர்கள் பிறந்தவர் அல்லராயினும் நற்குலத்துக்குரிய நன்மைகளை மிகவும் கொடுப்பது எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தேயாகும் .

வீடினார், உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார், அந் நெறி; கூடிச் சென்றலும்,
ஓடினேன்; ஓடிச் சென்று உருவம் காண்டலும்,
நாடினேன்; நாடிற்று, நமச்சிவாயவே!

7
மேம்பட்ட தொண்டர்கள் உலகப்பற்றுக்களை நீக்கிவிட்டனர் . அவர்கள் மேம்பட்ட வீட்டு நெறியையே அடைந்தனர் . அடியவர்கள் கூட அடியேனும் ஓடிச் சென்று எம்பெருமான் திருவுருவத்தை அகக்கண்ணால் கண்டேன் . அங்ஙனம் கண்டவுடன் திருவைந்தெழுத்தை நாடினேன் . நாடிய என்னை அத்திருவைந்தெழுத்தும் நாடியது .

இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது;
சொல் அக விளக்கு அது சோதி உள்ளது
பல் அக விளக்கு அது பலரும் காண்பது;
நல் அக விளக்கு அது நமச்சிவாயவே!

8
வீட்டில் உள்ள விளக்கு ஆங்குள்ள இருளைப் போக்குவதாம் . சொல்லின் அகத்து நின்று விளக்குவதாய் , ஒளியுடைய தாய் , பல இடங்களையும் விளக்குவதாய்ப் பல சமயத்தாரும் தம்மை அறியாமலே காண நிற்பதாய் ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப் போல ஒளியை நல்குவது திருவைந்தெழுத்து மந்திரமே .

முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்-
தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே;
அந் நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன் நெறி ஆவது நமச்சிவாயவே!

9
முந்துறமுன்னம் வீடுபேற்றிற்கு வழிகாட்டிய முதல்வன் முக்கட்பிரானாவான் . அவன் அருளிய வழியே உறுதியாகப் பற்றுக் கோடாவது . அந்த வழியிலே சென்று அப்பெருமானுடைய திருவடிகளை அடைபவருக்கு எல்லாம் , சிறந்த வழியாக உதவுவது திருவைந்தெழுத்து மந்திரமே .

மாப்பிணை தழுவிய மாது ஓர் பாகத்தன்
பூப் பிணை திருந்து அடி பொருந்தக் கைதொழ,
நாப் பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்த வல்லார்தமக்கு இடுக்கண் இல்லையே.

10
மான்குட்டியைக் கையிலேந்திய , பார்வதி பாகனுடைய பூமாலைகள் சார்த்தப்பெற்ற திருவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுவதற்கு நாவை இணைந்து தழுவிய திருவைந்தெழுத்தைப் பற்றிய இப்பத்துப்பாடல்களை வழிபட வல்ல அடியவர்களுக்கு எத்தகைய துயரங்களும் ஏற்படமாட்டா .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பொது - நமசிவாயத் திருப்பதிகம்
4.011   திருநாவுக்கரசர்   தேவாரம்   நமச்சிவாய பதிகம், சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத்
Tune - காந்தாரம்   (பொது - நமசிவாயத் திருப்பதிகம் )

This page was last modified on Thu, 13 Aug 2026 07:11:09 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group