துன்று கொன்றை நம் சடையதே; தூய கண்டம் நஞ்சு அடையதே;
கன்றின்மான் இடக் கையதே; கல்லின்மான் இடக்கை அதே;
என்றும் ஏறுவது இடவமே; என் இடைப் பலி இட வ(ம்)மே!
நின்றதும் மிழலையுள்ளுமே; நீர் எனைச் சிறிதும் உள்ளுமே!
|
1
|
சிவபெருமான் நெருங்கிய கொன்றைமலரைச் சூடியுள்ளது சடையில் . அவருடைய தூயகழுத்து நஞ்சை அடக்கியுள்ளது . மான்கன்றை ஏந்தி உள்ளது இடக்கை . இமயமலையரசன் மகளான மான் போன்ற உமாதேவியைக் கொண்டுள்ளது இடப்பக்கம் . அவர் என்றும் ஏறும் வாகனம் இடபமே . பிச்சாடனரான நீர் நான் பிச்சையிட என்னிடத்து வருவீராக . நீர் வீற்றிருந்தருளுவது திருவீழி மிழலை என்னும் திருத்தலத்தில் , அதுபோல அடியேன் உள்ளத்திலும் எழுந்தருள நினைப்பீராக ! | |
ஓதி வாயதும் மறைகளே; உரைப்பதும் பலமறைகளே
பாதி கொண்டதும் மாதையே; பணிகின்றேன், மிகும் மாதையே;
காது சேர் கனம் குழையரே; காதலார் கனம் குழையரே;
வீதிவாய் மிகும் வேதியா; மிழலை மேவிய வேதியா!
|
2
|
சிவபெருமான் ஓதுவன வேதங்களே . உரைப்பது பிறர் எவர்க்கும் தெரிவதற்கரிய பொருள்களே . திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டது உமாதேவியை . வழிபடுகின்றேன் அவ்வழகிய கோலத்தை . காதிலே அணிந்திருப்பது கனவிய குழை . அவர் தம்மிடத்து அன்பு செலுத்துபவர்களிடத்துக் குழைந்து நிற்பர் . வீதியிலே மிகுவது வேதஒலி . வேதங்களை அருளிச் செய்த அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் . | |
பாடுகின்ற பண் தாரமே; பத்தர் அன்ன பண்டாரமே;
சூடுகின்றது மத்தமே; தொழுத என்னை உன்மத்தமே
நீடு செய்வதும் தக்கதே? நின் அரைத் திகழ்ந்தது அக்கு அதே;
நாடு சேர் மிழலை, ஊருமே; நாகம் நஞ்சு அழலை ஊருமே.
|
3
|
சிவபெருமான் ஊழி இறுதியில் பாடுகின்ற பண் தாரம் என்னும் இசை ஈறாகிய எழுவகை இசையுமே . பக்தர்கட்கு ஞானக்கருவூலமாய் விளங்குபவர் . அவர் சூடுவது ஊமத்த மலர் . அவரை வணங்கும் என்னைப் பித்தனாக்கினார் . அவரையே நீளத் தியானித்துப் போற்றுமாறு செய்தார் . இது தகுமோ ? அவருடைய இடுப்பில் விளங்குவது அக்குப்பாசியே . அப்பெருமான் மிழலை நாட்டிலுள்ள திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுகின்றார் . அவருடைய திருமேனியில் நாகமும் , கண்டத்தில் நஞ்சும் , கரத்தில் நெருப்பும் விளங்குகின்றன . | |
கட்டுகின்ற கழல் நாகமே; காய்ந்ததும் மதனன் ஆகமே;
இட்டம் ஆவது இசை பாடலே; இசைந்த நூலின் அமர்பு ஆடலே;
கொட்டுவான் முழவம், வாணனே; குலாய சீர் மிழலை வாணனே!
நட்டம் ஆடுவது சந்தியே; நான் உய்தற்கு இரவு சந்தியே!
|
4
|
சிவபெருமான் திருவடிகளில் வீரக்கழலாக அணிந்துள்ளது நாகத்தையே . அவர் எரித்தது மன்மதனது உடம்பையே . அவர் விரும்புவது அடியவர்கள் பாடும் இசைப் பாடலே . பொருந்திய நூலின் அமைதிக்கு ஏற்றதாயிருப்பது அவர் ஆடலே . அவ்வாடலுக்கு முழவங் கொட்டுபவன் வாணனே . இவை திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் சிறப்புக்கள் . அவர் நடனமாடுவது சந்தி என்னும் நாடக உறுப்பின்படி . நான் காம வாதையினின்றும் பிழைப்பதற்கு இராக்காலம் தக்க சமயமாகும் . | |
ஓவு இலாது இடும் கரணமே, உன்னும் என்னுடைக் கரணமே;
ஏவு சேர்வும் நின் ஆணையே; அருளில் நின்ன பொற்று ஆணையே;
பாவியாது உரை மெய் இலே; பயின்ற நின் அடி மெய்யிலே
மேவினான் விறல் கண்ணனே மிழலை மேய முக்கண்ணனே!
|
5
|
மிழலையை உகந்தருளியிருக்கும் முக்கண் இறைவரே படைப்புக் காலமுதல் மகாசங்கார காலம் வரை ஓய்வின்றித் தொழிலாற்றும் கரணபூதர் . மனம் முதலிய அகக்கருவிகள் உம்மையே நினைக்கும் . மன்மதபாணம் என்மேல் தைப்பதும் உம் ஆணையால் , உம் பொன்போன்ற திருவடிகளை நீர் அருளினால் துன்பம் எனக்கு நேருமோ ? உம்மைக் கருதாது உரைப்பன மெய்ம்மையாகாது . வலியோனாகிய திருமால் உம்முடைய திருவடியை உண்மையாகவே பொருந்தப் பெற்றான் . | |
| Go to top |
வாய்ந்த மேனி எரிவண்ணமே; மகிழ்ந்து பாடுவது வண்ணமே;
காய்ந்து வீழ்ந்தவன் காலனே; கடு நடம் செயும் காலனே;
போந்தது எம் இடை இரவிலே; உம் இடைக் கள்வம் இரவிலே;
ஏய்ந்ததும் மிழலை என்பதே; விரும்பியே அணிவது என்பு அதே.
|
6
|
சிவபெருமானின் திருமேனி நெருப்புப் போன்று சிவந்த வண்ணமுடையது . அவர் மகிழ்ந்து பாடுவது பல வண்ணப் பாடல்களையே . அவரால் உதைக்கப்பட்டு வீழ்ந்தவன் காலன் . அவர் அழகிய திருநடனம் செய்யும் கால்களை உடையவர் . அவர் எங்கள் வீட்டிற்குப் பிச்சையேற்க வந்தது இரவில் . எம் உள்ளம் புகுந்து கவர்ந்தது இரவில் . அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் . அவர் விரும்பி அணிவது எலும்பு மாலையே . | |
அப்பு இயன்ற கண் அயனுமே, அமரர்கோமகனும், அயனுமே,
ஒப்பு இல் இன்று, அமரர், தருவதே, ஒண் கையால் அமரர் தரு அதே;
மெய்ப் பயின்றவர், இருக்கையே, மிழலை ஊர் உமது இருக்கையே;
செப்புமின்(ன்), எருது மேயுமே! சேர்வு உமக்கு எருதும் ஏயுமே.
|
7
|
பாற்கடலில் , துயிலும் கண்ணுடைய திருமாலும் , தேவேந்திரனும் , பிரமனும் கேட்டவற்றை ஒப்பின்றி உமது திருக்கரம் வழங்கி வருதலால் அது கற்பக விருட்சம் ஆகும் . மெய்த்தவம் செய்பவர்களின் உள்ளக்கோயில் உமது இருப்பிடமாகும் . திருவீழிமிழலை என்னும் திருத்தலமும் நீர் வீற்றிருந்தருளும் இடமாகும் . உமக்கென்றுள்ள விளைநிலமாகிய என் மனநிலத்தில் எருது புகுந்து கேடு விளைவித்தல் தகுமோ ? அதை ஓட்டி என்னை ஆட்கொள்ள அங்கு வருவதற்கு உமக்கு எருதும் இருக்குமே . | |
தானவக் குலம் விளக்கியே, தாரகைச் செலவு இளக்கியே,
வான் அடர்த்த கயில் ஆயமே, வந்து மேவு கயிலாயமே
தான் எடுத்த வல் அரக்கனே, தட முடித்திரள் அரக்கனே,
மேல் நடைச் செல இருப்பனே; மிழலை நன் பதி
விருப்பனே.
|
8
|
சிவபெருமான் , பகைத்து நிற்கும் அசுரர் அழிவர் என்பதை விளக்கியவர் . தாரகை முதலான ஒளிதரும் பொருள்களின் ஒளியைத் தம் பேரொளியால் குன்றச் செய்தவர் . வானை முட்டும் உயர்ந்த கயிலைமலையைத் தம் வல்லமையால் எடுத்த அரக்கனான இராவணனின் பெரிய முடிகளைநெரித்தவர் . மனைகள் தோறும் சென்று பிச்சை எடுத்தலில் விருப்பமுடையவர் . திருவீழிமிழலை என்னும் நற்பதியில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் . | |
காயம் மிக்கது ஒரு பன்றியே, கலந்த நின்ன உருபு
அன்றியே,
ஏய இப் புவி மயங்கவே, இருவர்தாம் மனம் அயங்கவே,
தூய மெய்த்திரள் அகண்டனே! தோன்றி நின்ற
மணிகண்டனே!
மேய இத் துயில் விலக்கு, அ(ண்)ணா! மிழலை மேவிய
இலக்கணா!
|
9
|
பன்றி உருவெடுத்த திருமால் , பிரமன் ஆகிய இருவரும் சேர்ந்து தேடவும் , உம் உருவத் திருமேனியைக் காண்பதற்கு இயலாதவராய் , இப்புவியில் மயங்கி நின்று , மனம் கலங்கிய நிலையில் , தூய சோதித் திரளாய் அகண்ட திருமேனியராய்த் தோன்றி நின்ற நீலகண்டத்தை உடையவரே . எம் தலைவரே ! அடியேனின் தூக்கம் பிடிக்கா நிலையை விலக்குவீராக ! திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அழகரே . | |
கஞ்சியைக் குலவு கையரே, கலக்கம் ஆர் அமணர்கையரே,
அஞ்ச, வாதில் அருள் செய்யநீ, அணைந்திடும் பரிசு செய்ய, நீ
வஞ்சனே! வரவும் வல்லையே, மதித்து, எனைச் சிறிதும் வல்லையே?
வெஞ்சல் இன்றி வரு இவ் தகா மிழலை சேரும் விறல்
வித்தகா!
|
10
|
சிவபெருமானே ! கஞ்சி உண்ணும் கையையுடைய பௌத்தர்களும் , சமணர்களும் அஞ்சுமாறு , அடியேன் வாதில் வெற்றி கொள்ள அருள்செய்தீர் நீவிர் . பிறர் செய்யும் சூழ்ச்சியை அறிய வல்லீரும் நீவிர் . அடியவரின் துயர் நீக்கிட வருவதற்கு வல்லீர் . நீவிர் என் உரையைச் சிறிதளவேனும் மதித்து விரைவில் வரவும் இல்லையே . குறைதலில்லாமல் மேன்மேலும் வருகின்ற இத்துயரங்கள் எனக்குத் தகா . திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வலிமை மிக்க வித்தகரே . | |
| Go to top |
மேய செஞ்சடையின் அப்பனே! மிழலை மேவிய என் அப்பனே!
ஏயுமா செய இருப்பனே இசைந்தவா செய விருப்பனே!
காய வர்க்க(அ) சம்பந்தனே! காழி ஞானசம்பந்தனே
வாய் உரைத்த தமிழ்பத்துமே வல்லவர்க்கும் இவை
பத்துமே.
|
11
|
சிவபெருமான் சிவந்த சடையில் கங்கையை அணிந்தவர் . திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் என் அப்பர் . முத்தொழிலையும் அவருடைய சந்நிதியில் அவரவர் செய்ய வாளா இருப்பவர் . தம்மைப் போற்றி வழிபடும் பக்தர்கட்கு விருப்பமானவர் . பஞ்ச பூதங்களோடும் தோய்ந்தும் தோயாமல் இருப்பவர் . அப்பெருமானைப் போற்றி , சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓத வல்லவர்களுக்கு , இவை ஞானத்தின் படிநிலைகள் பத்தாய் அமையும் . ( இறுதியில் சிவபோகம் பெறுவர் என்பது குறிப்பு ). | |