சங்கு அமரும் முன்கை மட மாதை ஒருபால் உடன் விரும்பி,
அங்கம் உடல்மேல் உற அணிந்து, பிணி தீர அருள் செய்யும்
எங்கள் பெருமான் இடம் எனத் தகும் முனைக் கடலின் முத்தம்,
துங்க மணி, இப்பிகள், கரைக்கு வரு தோணிபுரம் ஆமே.
|
1
|
முன்கையில் சங்குவளையல் அணிந்த உமா தேவியைத் தன்னுடைய உடம்பின் ஒரு பாகமாக விருப்பத்துடன் அமர்த்தி , எலும்பைத் தன் உடம்பில் நன்கு பொருந்தும்படி அணிந்து , தன்னைத் தியானிப்பவரது மும்மலப் பிணிப்பு நீங்கும்படி அருள் புரிகின்ற எங்கள் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது அலை வீசுகின்ற கடலினின்றும் முத்துக்களும் , இரத்தினங்களும் , சங்குப்பூச்சிகளும் கரைக்கு வந்து சேருகின்ற திருத்தோணிபுரம் ஆகும் . | |
சல்லரி(யி), யாழ், முழவம், மொந்தை, குழல், தாளம் அது, இயம்ப,
கல் அரிய மாமலையர் பாவை ஒருபாகம் நிலைசெய்து,
அல் எரி கை ஏந்தி, நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர்
சொல்ல(அ)ரிய தொண்டர் துதிசெய்ய, வளர் தோணிபுரம் ஆமே.
|
2
|
சல்லரி , யாழ் , முழவம் , மொந்தை , குழல் , தாளம் முதலிய வாத்தியங்கள் ஒலிக்க , பெரிய மலையாகிய இமயமலையரசரின் அரிய மகளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகப் பிரியாமல் கொண்டு , கையில் அனலை ஏந்தி இரவில் நடனமாடுகின்ற , சடைமுடியையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் , சொல்லுதற்கரிய பெருமையுடைய தொண்டர்கள் போற்ற நாளும் புகழ் வளரும் திருத்தோணிபுரம் ஆகும் . | |
வண்டு அரவு கொன்றை வளர் புன்சடையின் மேல் மதியம் வைத்து
பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி; பழி தீரக்
கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள்; ஊர்
தொண்டர் அவர் மிண்டி, வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே.
|
3
|
வண்டுகள் மொய்த்து ஊதுகின்ற கொன்றைமலர் மாலையை அணிந்த வளர்ந்த சிவந்த சடையில் பிறைச்சந்திரனையும் தரித்து , பண்டைக்காலத்தில் இடையில் பாம்பைக் கச்சாகக் கட்டிய மேலான இடத்திலுள்ள சிவபெருமான் , திருமால் முதலியோர் தனது அருளின்றி அமுதம் கடையச் சென்ற தோடம் அவரைவிட்டு நீங்குமாறு , திருவருள் செய்து , அலைகளின் ஆரவாரத்தையுடைய சிறந்த பாற்கடலினின்றும் எழுந்த நஞ்சினை அமுதமென உண்ட கடவுளாய் வீற்றிருந்தருளும் ஊர் , திருத்தொண்டர்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செய்கின்ற வழிபாடுகள் மிகுந்த திருத்தோணிபுரம் ஆகும் . | |
கொல்லை விடை ஏறு உடைய கோவணவன், நா அணவும் மாலை
ஒல்லை உடையான், அடையலார் அரணம் ஒள் அழல் விளைத்த
வில்லை உடையான், மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர்
சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து, அருள் செய்
தோணிபுரம் ஆமே.
|
4
|
சிவபெருமான் முல்லைநிலத்ததாகிய இடப வாகனத்தை யுடையவன் . கோவண ஆடை அணிந்தவன் . அடியவர்கள் பாடிப் போற்றித் தொழும் பாமாலைகளை உடையவன் . தொண்டர்கள் பக்தியுடன் ஒலிக்கும் அரநாமமும் , சிவநாமமும் ஓதப் படும் பண்பினன் . பகைவரது மதில்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்த மேருவை வில்லாக உடையவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது , இறைவனையே பற்றுக்கோடாகக் கொண்டு மேன் மேலும் பக்தி செய்கின்ற தொண்டர்களின் வேண்டுகோள்களை ஏற்று , அவர்களின் துன்பங்களைத் தீர்த்து அருள்செய்கின்ற திருத்தோணிபுரம் ஆகும் . | |
தேயும் மதியம் சடை இலங்கிட, விலங்கல் மலி கானில்
காயும் அடு திண் கரியின் ஈர் உரிவை போர்த்தவன்;
நினைப்பார்
தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர்; நன்மையொடு வாழ்வு
தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே.
|
5
|
கலைகள் தேய்ந்து அழியும் நிலையிலிருந்த சந்திரனைச் சடைமுடியில் தரித்து மீண்டும் விளங்கி ஒளிருமாறு செய்தவர் சிவபெருமான் . மலைகள் மிக்க காட்டில் திரிகின்ற சினமுடைய , கொல்லும் தன்மையுடைய வலிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவர் . தம்மையே சிந்தித்திருப்பவர்கட்குத் தாயைப் போலக் கருணை காட்டிப் பாதுகாப்பவர் . எங்கும் நிறைந்த தன்மையர் . அடியவர்கட்கு நன்மை புரிதலையே தம் கடனாகக் கொண்ட அப்பெருமானார் வீற்றிருந்தருளுகின்ற இடம் , தூய்மையுடைய வேதியர்கள் வேதங்களை ஓதி நிறைகின்ற திருத்தோணிபுரம் ஆகும் . | |
| Go to top |
பற்றலர் தம் முப்புரம் எரித்து, அடி பணிந்தவர்கள் மேலைக்
குற்றம் அது ஒழித்து, அருளு கொள்கையினன்; வெள்ளில் முதுகானில்
பற்றவன்; இசைக்கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும்
துற்ற சடை அத்தன்; உறைகின்ற பதி தோணிபுரம் ஆமே.
|
6
|
சிவபெருமான் பகைவர்களின் முப்புரங்களை எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர் . தம் திருவடிகளைப் பணிந்து வணங்குபவர்களின் குற்றங்களை ஒழித்துத் திருவருள் புரியும் கொள்கையினையுடையவர் . பாடைகள் மலிந்த சுடுகாட்டில் பற்றுடையவர் . பூதகணங்கள் இசைப்பாடல்களைத் துதித்துப்பாட நடனமாடுபவர் . அடர்ந்து வளர்ந்த சடையையுடைய , அனைத்துயிர்க்கும் தந்தையாகிய சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்ற தலம் திருத்தோணிபுரம் ஆகும் . | |
பண் அமரும் நால்மறையர், நூல் முறை பயின்ற திருமார்பில்
பெண் அமரும் மேனியினர், தம் பெருமை பேசும் அடியார் மெய்த்
திண் அமரும் வல்வினைகள் தீர அருள் செய்தல் உடையான், ஊர்
துண்ணென விரும்பு சரியைத்தொழிலர் தோணிபுரம் ஆ.மே.
|
7
|
சிவபெருமான் பண்ணிசையோடு கூடிய நான்கு வேதங்களை அருளியவர் . வேதாகம சாத்திரங்களின் முடிவான கருத்தை , மோனநிலையில் சின்முத்திரையால் தெரிவித்தருளிய திருமார்பையுடையவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர் . தமது பெருமை பேசும் அடியவர்களின் தீர்ப்பதற்கரிய வல்வினைகளைத் தீர்த்து அருளியவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது சரியையாதி தொழில்களை விரைவுடன் பணிசெய்தலில் விருப்புடைய மெய்த்தொண்டர் வாழ்கின்ற திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும் . | |
தென்திசை இலங்கை அரையன் திசைகள் வீரம் விளைவித்து
வென்றி செய் புயங்களை அடர்த்து அருளும் வித்தகன் இடம் சீர்
ஒன்று இசை இயல் கிளவி பாட, மயில் ஆட, வளர் சோலை
துன்று செய வண்டு, மலி தும்பி முரல் தோணிபுரம் ஆமே. |
8
|
தென்திசையில் விளங்கிய இலங்கை மன்னனான இராவணன் எல்லாத் திசைகளிலும் திக்விஜயம் செய்து தனது வீரத்தை நிலைநாட்டி , வெற்றி கொண்ட தோள்களை நெருக்கிப் பின் அருளும் புரிந்த வித்தகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , இசையுடன் குயில்கள் பாட , மயில்கள் ஆட , வளம் பொருந்திய சோலைகளின் மலர்களிலுள்ள தேனை உண்ணும்பொருட்டு , வண்டுகளும் , மிகுந்த தும்பிகளும் சுருதிகூட்டுவது போல் முரல்கின்ற திருத்தோணிபுரம் ஆகும் . | |
நாற்றம் மிகு மா மலரின்மேல் அயனும், நாரணனும், நாடி
ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம், எரி ஆகி,
ஊற்றம் மிகு கீழ் உலகும் மேல் உலகும் ஓங்கி எழு தன்மைத்
தோற்றம் மிக, நாளும் அரியான் உறைவு தோணிபுரம் ஆமே.
|
9
|
நறுமணம் கமழும் தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் தேட முயலத் தங்களது ஆற்றலால் அளந்தறிதற்கு அரிதாகும் வண்ணம் , நெருப்புப் பிழம்பாகி , கீழுலகு மேலுலகு ஆகியவற்றை வியாபித்து ஒங்கியெழுந்த தன்மையுடைய தோற்றத்தை உடையவனாய் ஒருநாளும் அவர்கள் அறிதற்கரியனாகிய சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருத்தோணிபுரம் ஆகும் . | |
மூடு துவர் ஆடையினர், வேடம் நிலை காட்டும் அமண் ஆதர்
கேடுபல சொல்லிடுவர்; அம் மொழி கெடுத்து, அடைவினான், அக்
காடு பதி ஆக நடம் ஆடி, மடமாதொடு இரு காதில்-
தோடு குழை பெய்தவர் தமக்கு உறைவு தோணிபுரம் ஆமே.
|
10
|
உடலை மூடி மறைக்கின்ற துவராடையணிந்த புத்தர்களும் , தமது வேடமாகிய ஆடையணியாத் தன்மையினைப் போல தமது அறிவும் உளது எனக் காட்டும் அறிவிலிகளாகிய சமணர்களும் தீமை விளைவிக்கக் கூடிய பல சொற்களைக் கூறுவர் . அத்தீய மொழிகளை நீக்கி , சுடுகாட்டைத் தமது இருப்பிடமாகக் கொண்டு , நடனமாடி , உமாதேவியோடு கூடி , இருகாதுகளிலும் முறையே தோடும் , குழையும் அணிந்தவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருத்தோணிபுரம் ஆகும் . | |
| Go to top |
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய
மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல்மாலை,
தஞ்சம் என நின்று இசை மொழிந்த அடியார்கள், தடுமாற்றம்
வஞ்சம் இலர்; நெஞ்சு இருளும் நீங்கி, அருள் பெற்று வளர்வாரே.
|
11
|
அனைத்துலகும் ஒடுங்கிய பிரளயம் எனப்படும் பேரிருளில் நின்று நடனமாடுபவனாய்ப் , புகழ்மிகுந்த திருத்தோணி புரத்தை விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை வணங்கித் திருஞானசம்பந்தர் அருளிய இச்சொல்மாலைகளே தமக்குப் பற்றுக் கோடாகும் என்ற கருத்தில் நிலைத்துநின்று , அதனை இசையுடன் ஓதும் அடியவர்கள் நெறிதவறுதலும் அதற்குக் காரணமான வஞ்சனையும் இல்லாதவர்கள் . அவர்கள் நெஞ்சிலுள்ள அறியாமை என்னும் இருள் நீங்கப்பெற்று , இறைவனது அருள்பெற்றுச் சீலத்துடன் வளர்வர் . | |