கண் பொலி நெற்றியினான், திகழ் கையில் ஓர் வெண்மழுவான்,
பெண் புணர் கூறு உடையான், மிகு பீடு உடை மால்விடையான்,
விண் பொலி மா மதி சேர்தரு செஞ்சடை வேதியன், ஊர்
தண் பொழில் சூழ் பனந்தாள் திருத் தாடகையீச்சுரமே.
|
1
|
சிவபெருமான் நெற்றிக்கண்ணையுடையவன் . தூய வெண்மழுவினைக் கையிலேந்தியவன் . உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக உடையவன் . மிக்க பெருமையுடைய திருமாலை இடப வாகனமாகக் கொண்டவன் . விண்ணிலே விளங்குகின்ற பிறைச்சந்திரனை அணிந்த சிவந்த சடையினையுடைய , வேதங்களை அருளிச் செய்த சிவபெருமானுடைய உறைவிடம் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் . | |
விரித்தவன், நால்மறையை; மிக்க விண்ணவர் வந்து இறைஞ்ச
எரித்தவன், முப்புரங்கள்(ள்); இயல் ஏழ் உலகில் உயிரும்
பிரித்தவன்; செஞ்சடைமேல் நிறை பேர் ஒலி வெள்ளம்
தன்னைத்
தரித்தவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.
|
2
|
சிவபெருமான் நான்கு வேதங்களின் பொருளை விரித்து ஓதியவன் . தேவர்களெல்லாம் வந்து வேண்ட முப்புரங்களை எரித்தவன் . ஏழுலகங்களிலுமுள்ள உயிர்களைச் சங்கார காலத்தில் பிரித்தவன் . சிவந்த சடையின்மேல் நிறைந்த பேரொலியோடு பெருக்கெடுத்து வந்த கங்கையைத் தாங்கியவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில் திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் . | |
உடுத்தவன், மான் உரி-தோல்; கழல் உள்க வல்லார் வினைகள்
கெடுத்து அருள்செய்ய வல்லான்; கிளர் கீதம் ஓர்
நால்மறையான்;
மடுத்தவன். நஞ்சு அமுதா; மிக்க மா தவர் வேள்வியை முன்
தடுத்தவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.
|
3
|
சிவபெருமான் மான்தோலை ஆடையாக அணிந்தவன் . தன் திருவடிகளை நினைத்து வழிபடுபவர்களின் வினைகளைப் போக்குபவன் . இனிய இசையுடைய நால்வேதங்களை அருளிச்செய்து அவ்வேதங்களின் உட்பொருளாகவும் விளங்குபவன் . பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதம்போல் உட்கொண்டவன் . தன்னை மதியாது தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்தவன் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள , திருத்தாடகையீச்சரம் என்னும் கோயிலாகும் . | |
சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல், மிக ஏத்துமின்-பாய்புனலும்,
போழ் இளவெண்மதியும்(ம்), அனல் பொங்கு அரவும், புனைந்த
தாழ்சடையான் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே!
|
4
|
பிறவிதோறும் உயிர்களைச் சூழ்ந்து வருகின்ற எளிதில் நீங்காத வினைகளும் , அவற்றின் காரணமாக உடலில் தோன்றும் பலவகை நோய்களும் நீங்க வேண்டும் என்று எண்ணுவீராயின் பாய்கின்ற கங்கையையும் , பிளவுபட்ட இளமையான வெண்ணிறச் சந்திரனையும் , நெருப்புப் போல் விடம் கக்கும் பாம்பையும் அணிந்த தாழ்ந்த சடையினையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள , திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலைப் மிகவும் போற்றி வழிபடுவீர்களாக ! | |
விடம் படு கண்டத்தினான், இருள் வெள்வளை மங்கையொடும்
நடம் புரி கொள்கையினான் அவன், எம் இறை, சேரும் இடம்
படம் புரி நாகமொடு திரை பல்மணியும் கொணரும்
தடம் புனல் சூழ் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.
|
5
|
சிவபெருமான் விடத்தைத் தேக்கிய கண்டத்தை உடையவன் . வெண்ணிற வளையல்களையணிந்த உமாதேவியோடு நள்ளிருளில் திருநடனம் புரிபவன் . எங்கள் தலைவனான சிவ பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் , படமெடுத்தாடும் பாம்பு கக்குகின்ற நவரத்தினமணிகளோடு , அலைகள் பலவகையான மணிகளை அடித்துக் கொண்டு வந்து சேர்க்கும் பெருமையுடைய மண்ணியாறு சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் . | |
| Go to top |
விடை உயர் வெல்கொடியான்; அடி விண்ணொடு மண்ணும் எல்லாம்
புடைபட ஆடவல்லான்; மிகு பூதம் ஆர் பல் படையான்;
தொடை நவில் கொன்றையொடு, வன்னி, துன் எருக்கும், அணிந்த
சடையவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.
|
6
|
சிவபெருமான் வெற்றிக் கொடியாக இடபம் பொறித்த கொடி உடையவன் . விண்ணுலகமும் , மண்ணுலகமும் , மற்றுமுள்ள எல்லா உலகங்களும் தன் திருவடிபதியுமாறு விசுவரூபம் எடுத்து ஆடவல்லவன் . பலவகையான பூதகணங்களைப் படையாக உடையவன் . கொன்றைமாலையோடு , வன்னி , எருக்கம் இவை அணிந்த சடையுடையவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் . | |
மலையவன் முன் பயந்த மடமாதை ஓர் கூறு உடையான்;
சிலை மலி வெங்கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான்;
அலை மலி தண்புனலும், மதி, ஆடு அரவும்(ம்), அணிந்த
தலையவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.
|
7
|
சிவபெருமான் மலையரசன் பெற்றெடுத்த உமாதேவியைத் தன் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டவன் . மேரு மலையை வில்லாக்கி , அக்கினியைக் கணையாக்கி முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாகும்படி அழித்தவன் . அலைகளையுடைய குளிர்ந்த கங்கையையும் , சந்திரனையும் , பாம்பையும் அணிந்த சடைமுடியுடையவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் . | |
செற்று, அரக்கன் வலியை, திருமெல்விரலால் அடர்த்து
முற்றும் வெண் நீறு அணிந்த திருமேனியன்; மும்மையினான்;
புற்று அரவம், புலியின்(ன்) உரி-தோலொடு, கோவணமும்,
தற்றவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.
|
8
|
இராவணனது வலிமையைத் தன் மெல்லிய திருக்காற்பெருவிரலை ஊன்றி அழித்தவன் . முற்றும் திருவெண்ணீறு அணிந்த திருமேனியுடையவன் . உருவம் , அருவம் , அருவுருவம் என்ற மூவகைத் திருமேனிகளையுடையவன் . புற்றில் வாழ்கின்ற பாம்பையும் , புலித்தோலையும் , கோவணத்தையும் ஆடையாக உடுத்தவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் . | |
வில் மலை, நாண் அரவம், மிகு வெங்கனல் அம்பு, அதனால்,
புன்மை செய் தானவர் தம் புரம் பொன்றுவித்தான்; புனிதன்;
நல் மலர்மேல் அயனும், நண்ணு நாரணனும்(ம்), அறியாத்
தன்மையன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.
|
9
|
சிவபெருமான் மேருமலையை வில்லாகவும் , வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் , மிகுந்த வெப்பமுடைய அக்கினியை அம்பாகவும் கொண்டு , தீமை செய்த அசுரர்களின் முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாகுமாறு அழித்தவன் . நல்ல தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் அறியாத தன்மையன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது திருப்பனந்தாள் என்னும் திருத்தலமாகும் . அங்குத் திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளான் . | |
ஆதர் சமணரொடும்(ம்), அடை ஐ(ந்)துகில் போர்த்து உழலும்
நீதர், உரைக்கும் மொழி அவை கொள்ளன்மின்! நின்மலன் ஊர்
போது அவிழ் பொய்கைதனுள்-திகழ் புள் இரிய, பொழில்வாய்த்
தாது அவிழும் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.
|
10
|
பயனிலிகளாகிய சமணர்களும் , அழகிய துணிகளைப் போர்த்துத் திரிகின்ற புத்தர்களும் உரைக்கின்ற மொழிகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள் . நின்மலனான சிவபெருமானது உறைவிடம் தாமரை மொட்டுகள் மலர்கின்ற பொய்கைகளில் புள்ளினங்கள் ஓடச் சோலைகளிலுள்ள மலர்களின் மகரந்தப் பொடிகள் உதிரும் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகை யீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் . | |
| Go to top |
தண்வயல் சூழ் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரத்துக்
கண் அயலே பிறையான் அவன் தன்னை, முன் காழியர் கோன்-
நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன்-நல்ல
பண் இயல் பாடல் வல்லார் அவர்தம் வினை பற்று அறுமே.
|
11
|
குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில் , திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலில் , வீற்றிருந்தருளுகின்ற நெற்றிக் கண்ணின் அருகே பிறைச் சந்திரனை அணிந்துள்ள சிவபெருமானைப் போற்றி , சீகாழியில் அவதரித்த தலைவனான ஞானசம்பந்தன் செந்தமிழில் அருளிய நன்மைபயக்க வல்ல பண்ணோடு கூடிய இப்பாடல்களைப் பாடவல்லவர்களின் வினைகள் யாவும் அழியும் . | |