சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.011   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்புனவாயில் - காந்தாரபஞ்சமம் கனகாங்கி கேதார கெளளை கர்நாடக சுத்த சவேரி ராகத்தில் திருமுறை அருள்தரு கருணையீசுவரியம்மை உடனுறை அருள்மிகு புனவாயிலீசுவரர் திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=COYFQcwgvkk   Add audio link Add Audio

மின் இயல் செஞ்சடை வெண்பிறையன், விரி நூலினன்,
பன்னிய நால்மறை பாடி ஆடி, பல ஊர்கள் போய்,
அன்னம் அன்ன(ந்) நடையாளொடும்(ம்) அமரும்(ம்) இடம்
புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே.

1
மின்னல் போன்று ஒளிரும் சிவந்த சடைமுடியும் , வெண்மையான பிறைச்சந்திரனும் , விரிந்த மார்பினில் முப்புரிநூலும் கொண்டு , அடிக்கடி ஓதப்படும் நான்கு வேதங்களையும் பாடியாடிப் பல திருத்தலங்கட்கும் சென்று , அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியோடு இறைவன் வீற்றிருந்தருளும் இடமானது , புன்னை மலர்கள் பொன் போன்ற தாதுக்களை உதிர்க்கும் திருப்புனவாயில் ஆகும் .

விண்டவர்தம் புரம் மூன்று எரித்து, விடை ஏறிப் போய்,
வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம்
கண்டலும் ஞாழலும் நின்று, பெருங்கடல் கானல்வாய்ப்
புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புனவாயிலே.

2
பகையசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு செய்து , இடபவாகனத்தில் ஏறி , வண்டமர்ந்துள்ள கூந்தலையுடைய உமாதேவியோடு மகிழ்ந்து , இறைவன் எழுந்தருளி யிருக்கும் இடமாவது , தாழையும் , புலிநகக் கொன்றையும் தழைத்த கடற்கரைச் சோலையும் , தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும் சூழ்ந்த திருப்புனவாயில் ஆகும் .

விடை உடை வெல் கொடி ஏந்தினானும், விறல் பாரிடம்
புடை பட ஆடிய வேடத்தானும், புனவாயிலில்
தொடை நவில் கொன்றை அம் தாரினானும், சுடர் வெண்மழுப்
படை வலன் ஏந்திய, பால் நெய் ஆடும், பரமன் அன்றே!

3
இடபம் பொறித்த வெற்றிக் கொடியை ஏந்தியவனும் , வீரமிக்க பூதகணங்கள் சூழ நடனம் செய்யும் கோலத்தை உடையவனுமான சிவபெருமான் திருப்புனவாயில் என்னும் திருத் தலத்தில் எழுந்தருளி , கொன்றை மாலை அணிந்து , ஒளியுடைய மழுப் படையை வலக்கையிலே ஏந்தி , பாலாலும் , நெய்யாலும் திருமுழுக் காட்டப்பட்டு அடியவர்கட்கு அருள்புரியும் பரம்பொருள் ஆவான் .

சங்க வெண்தோடு அணி காதினானும், சடை தாழவே
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும்(ம்), அழகு ஆகவே
பொங்கு அரவம்(ம்) அணி மார்பினானும் புனவாயிலில்,
பைங்கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற
பரமேட்டியே.

4
திருப்புனவாயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் வெண்சங்கினாலாகிய தோடணிந்த காதுடையவன் . தாழ்ந்த நீண்ட சடையுடையவன் . உள்ளங்கையில் நெருப்பு ஏந்தியவன் . சீறிப் படமாடும் பாம்பை ஆபரணமாக அணிந்த மார்புடையவன் . திருப்புனவாயில் என்னும் திருத்தலத்திலே பசிய கண்களையுடைய வெண்ணிற இடபவாகனத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மேலான பரம்பொருள் ஆவான் .

கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறைக்கண்டனும்,
புலி அதள் பாம்பு அரைச் சுற்றினானும் புனவாயிலில்,
ஒலிதரு தண்புனலோடு, எருக்கும், மதமத்தமும்,
மெலிதரு வெண்பிறை, சூடி நின்ற விடை ஊர்தியே.

5
ஒலிக்கின்ற குளிர்ச்சியான பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்டதால் கறுத்த கண்டத்தை உடையவன் சிவபெருமான் . புலித்தோலை ஆடையாகவும் , பாம்பை அரையில் கச்சாகவும் கட்டியவன் . அவன் திருப்புனவாயில் என்னும் தலத்தில் , ஒலிக்கின்ற குளிர்ந்த கங்கையோடு , எருக்கு , ஊமத்தம் ஆகிய மலர்களையும் , மெலிந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனையும் சடையில் சூடி இடப வாகனத்தில் வீற்றிருந்தருளுகின்றான் .
Go to top

வார் உறு மென்முலை மங்கை பாட நடம் ஆடிப் போய்,
கார் உறு கொன்றை வெண்திங்களானும், கனல் வாயது ஓர்
போர் உறு வெண்மழு ஏந்தினானும் புனவாயிலில்,
சீர் உறு செல்வம் மல்க(வ்) இருந்த சிவலோகனே.

6
கச்சணிந்த மெல்லிய முலைகளையுடைய உமாதேவி பாட , அதற்கேற்ப நடனம் ஆடி , கார்காலத்தில் மலர்கின்ற கொன்றைமலரையும் , வெண்ணிறத் திங்களையும் சடையிலே சூடி , நெருப்புப் போன்று ஒளிர்கின்ற போர் செய்யப் பயன்படும் வெண்மழுப்படையைக் கையில் ஏந்தித் திருப்புனவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவலோகநாதனாகிய சிவபெருமான் தன் அடியார்கட்குச் சீருறு செல்வம் அருள்வான் .

பெருங்கடல் நஞ்சு அமுது உண்டு, உகந்து பெருங்காட்டு இடைத்
திருந்து இளமென் முலைத் தேவி பாட(ந்) நடம் ஆடிப் போய்,
பொருந்தலர்தம் புரம் மூன்றும் எய்து, புனவாயிலில்
இருந்தவன் தன் கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே.

7
சிவபெருமான் , பெரிய பாற்கடலைக் கடைந்த போது ஏற்பட்ட நஞ்சை உண்டு மகிழ்ந்தவன் . சுடுகாட்டில் இளமென் முலையுடைய உமாதேவி பாட நடனமாடியவன் . பகையசுரர்களின் புரம் மூன்றையும் அம்பு எய்து அழித்தவன் . திருப்புனவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அப்பெருமானின் திருவடிகளைப் போற்றித் தொழுபவர்கட்கு எவ்விதத் துன்பமும் இல்லை .

மனம் மிகு வேலன் அவ் வாள் அரக்கன் வலி ஒல்கிட,
வனம் மிகு மால்வரையால் அடர்த்தான் இடம் மன்னிய
இனம் மிகு தொல்புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய,
புனம் மிகு கொன்றை அம் தென்றல் ஆர்ந்த, புனவாயிலே.

8
செருக்குடைய மனம் உடையவனும் , வேல் , வாள் போன்ற படைக்கலன்களை உடையவனுமான அரக்கனான இராவணனின் வலிமை அழியுமாறு , அழகும் , பெருமையுமுடைய கயிலை மலையால் அடர்த்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , அவனுடைய பழம்புகழைப் பல்வேறு வகைகளில் போற்றுகின்ற பாடல்களும் , ஆடல்களும் நிறைந்து அழகுற விளங்குகின்றதும் , கொன்றை மலரின் நறுமணத்தைச் சுமந்துவரும் தென்றல்காற்று வீசுகின்றதுமான திருப்புனவாயில் ஆகும் .

திரு வளர் தாமரை மேவினானும், திகழ் பாற்கடல்
கரு நிற வண்ணனும், காண்பு அரிய கடவுள்(ள்) இடம்-
நரல் சுரிசங்கொடும் இப்பி உந்தி(ந்), நலம் மல்கிய
பொருகடல் வெண்திரை வந்து எறியும் புனவாயிலே.

9
அழகிய தாமரையில் வீற்றிருக்கின்ற பிரமனும் , விளங்கும் திருப்பாற் கடலில் பள்ளி கொண்டுள்ள கருநிறத் திருமாலும் காண்பதற்கரியவன் சிவபெருமான் . அவன் விரும்பி எழுந்தருளியுள்ள இடம் கடலின் வெண்ணிற அலைகள் கரையை மோதும்போது தள்ளப்பட்ட ஒலிக்கின்ற சுரிசங்குகளும் , சிப்பிகளும் நிறைந்து செல்வம் கொழிக்கும் திருப்புனவாயில் ஆகும் .

போதி எனப் பெயர் ஆயினாரும், பொறி இல் சமண்-
சாதி, உரைப்பன கொண்டு, அயர்ந்து, தளர்வு எய்தன்மின்!
போது அவிழ் தண்பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில்
வேதனை நாள்தொறும் ஏத்துவார்மேல் வினை வீடுமே.

10
புத்தர்களும் , சமணர்களும் சாதித்துக் கூறுகின்ற சொற்களைக் கேட்டு உணர்வழிந்து தளர்ச்சி அடைய வேண்டா . பூக்கள் மலர்ந்துள்ள குளிர்ச்சி பொருந்திய சோலைகள் நிறைந்த அழகிய குளிர்ந்த திருப்புனவாயிலில் வீற்றிருந்தருளும் வேதத்தின் பொருளாயுள்ள சிவபெருமானை நாள்தோறும் போற்றி வழிபடுபவர்களின் வினையாவும் நீங்கும் .
Go to top

பொன்தொடியாள் உமை பங்கன் மேவும் புனவாயிலை,
கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான்-
நல்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன தமிழ், நன்மையால்
அற்றம் இல் பாடல்பத்து, ஏத்த வல்லார் அருள் சேர்வரே.

11
பொன் வளையலணிந்த உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்புன வாயில் என்னும் தலத்தை வேதாகமங்களைக் கற்றவர்கள் தொழுது போற்றுமாறு கடல்வளமிக்க சீகாழியில் அவதரித்த நற்றமிழ் ஞான சம்பந்தன் அருளிய குற்றமில்லாத இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள் இறையருளைப் பெறுவர் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்புனவாயில்
3.011   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மின் இயல் செஞ்சடை வெண்பிறையன்,
Tune - காந்தாரபஞ்சமம்   (திருப்புனவாயில் புனவாயிலீசுவரர் கருணையீசுவரியம்மை)
7.050   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   சித்தம்! நீ நினை! என்னொடு
Tune - பழம்பஞ்சுரம்   (திருப்புனவாயில் பழம்பதிநாயகர் பரங்கருணைநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000